இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த 7 மீனவர்களையும் உடனடியாக மீட்க வலியுறுத்தி, தூத்துக்குடியில் மீனவர்கள் வெள்ளியன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி புதுத்தெருவைச் சேர்ந்த பாஸ்கருக்கு சொந்தமான நாட்டுப்படகில் கடந்த 25ம் தேதி திரேஸ்புரம் கடற்ரையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 7 மீனவர்களை இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து கைது செய்தனர்.அவர்கள் சென்ற படகை பறிமுதல் செய்த கடற்படையினர், 7 பேரையும் கல்பட்டி துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் அனைவரும் இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் சிறைபிடிக்கப்பட்டுள்ள 7 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்களது படகையும் மீட்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேம்பார் முதல் பெரியதாழை வரையுள்ள சுமார் 29 கடற்கரைக் கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மற்றும் விசைப்படகுகள் வெள்ளியன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக தூத்துக்குடியில் விசைப் படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. மேலும் திரேஸ்புரம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.இதுதவிர, கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வேம்பார் முதல் பெரியதாழை வரையுள்ள அனைத்து கிராம மக்களும் இதில் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறைபிடிக்கப்பட்டுள்ள 7 மீனவர்களை மீட்க மத்திய அரசு அக். 19ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி மீனவர்கள் 7பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து மீனவர் கூட்டமைப்பு சார்வில் தூத்துக்குடி துறைமுகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடந்தது. இதையொட்டி, தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் முன்பு 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் மீனவர்கள் ஊர்வலமாக சென்றனர். இதில், வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பின்னர் துறைமுகம் நுழைவு வாயிலான கிரின் கேட் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டமைப்பு தலைவர் சேவியர் வாஸ் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட மீனவர் சங்க நிர்வாகிகள் உவரிஅந்தோணி, ரைமண்ட், தூத்துக்குடி நிர்வாகிகள் ராஜ், ஜான்சன், ஸ்டீபன், பிரைட்டர், கூட்டமைப்பு ஆலோசகர் சுபாஷ்,வீராங்கனை அமைப்பைச் சேர்ந்த பாத்திமாபாபு, மதிமுக மீனவர் அணி நக்கீ ரன், தொம்மை, தமாகா ரொனால்டு, காங்கிரஸ் இருதயராஜ், திமுக மீனவர் அணி ராபார்ட் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், இலங்கையில் சிறைபட்டுள்ள 7 மீனவர்களின் குடும்பத்தினர் அங்கு கதறி அழுதனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், இலங்கை அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதையொட்டி தூத்துக்குடி துறைமுகம் முன்பு மத்திய பாதுகாப்புப் படையினரும், ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர். மீனவர்கள் போராட்டம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 5ஆயிரம் படகுகள் வெள்ளி யன்று கடலுக்கு செல்லவில்லை.

Leave a Reply

You must be logged in to post a comment.