லா பாஸ், அக். 16

-பொலிவியாவில் ஜனாதிபதி பதவியில் இருப்பவர்கள் இரண்டு முறைக்கு மேல் அப்பொறுப்பில் நீடிக்கலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்வதற்கான பொது வாக்கெடுப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது.பொலிவியாவில் இவோ மொரேல்ஸ் ஆட்சிக்கு வந்தபிறகு, இடதுசாரிக் கொள்கைகள் நடைமுறைக்கு வந்தன. நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தும் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளின் பெரு நிறுவனங்கள் வசம் இருந்தன. அவற்றைப் பெரும்பாலும் தேச உடமையாக்குவதில் வெற்றி கண்ட மொரேல்ஸ், பெரும்பாலான மக்களின் நலன்களுக்காக அதிலிருந்து வரும் வருமானத்தைச் செலவிடத் துவங்கினார். அதற்கு முன்பு வரை, நாட்டின் இயற்கை வளத்திற்கும், நாட்டு மக்களுக்கும் தொடர்பே இல்லாமல் இருந்தது. பத்து சதவிகித மக்கள் கூட அந்தத் துறையோடு இணையவில்லை. தற்போது 90 சதவிகிதத்திற்கு மேற்பட்ட மக்களுக்கும் இயற்கை வளங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்துவதில் அரசு வெற்றி பெற்றுள்ளது.நாட்டின் வறுமையைக் குறைப்பதிலும் பெரும் வெற்றி கிடைத்தது.

இதனால், முழுமையான தீர்வு கிடைப்பதற்கான பணிகள் இருப்பதால் மீண்டும் இவோ மொரேல்ஸ் ஜனாதிபதியாக வர வேண்டும் என்று பொலிவியா மக்கள் கருதுகிறார்கள். இந்தக் கருத்தை முன்வைத்து ஏராளமான பெருந்திரள் பேரணிகள் நடந்து வருகின்றன. பொலிவியாவின் அரசியல் சட்டப்படி, இரண்டுமுறைக்கு மேல் ஒருவர் தொடர்ந்து ஜனாதிபதியாக பொறுப்பு வகிக்க முடியாது. மொரேல்ஸ் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால், அரசியல் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அத்தகைய மாற்றம் கொண்டு வருவதற்குத் தேவையான நாடாளுமன்ற பெரும்பான்மை மொரேல்சிடம் உள்ளது. ஆனாலும், மக்களின் கருத்தைக் கேட்க முடிவு செய்திருக்கிறார்.பிப். 21 அன்று பொது வாக்கெடுப்பு நடைபெறும் என்று துணை ஜனாதிபதி அல்வரோ கார்சியா அறிவித்துள்ளார். ஜனநாயக ரீதியாக இதைத் தீர்மானிக்குமாறு மக்களிடம் செல்கிறோம். ஒருவேளை, மொரேல்ஸ் மேலும் ஒருமுறை போட்டியிடக்கூடாது என்று மக்கள் சொன்னால், அவர்களின் கருத்தை நாங்கள் மதித்து நடப்போம் என்றார். 55 வயதாகும் இவோ மொரேல்ஸ், 2005 ஆம் ஆண்டு முதன்முறையாக ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றார். அதன்பிறகு இரண்டு முறை தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். கடந்த முறை தேர்தலில் போட்டியிடும்போது, அதுவே மூன்றாவது முறை என்று எதிர்க்கட்சிகள் கூறின. ஆனால், புதிய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு, இரண்டாவது முறையாகத்தான் போட்டியிடுகிறார் என்பதால் அவர் போட்டியிட்டு ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றார்.புதிய திருத்தத்திற்கு ஆளுங்கட்சியோடு, ஏராளமான சமூக இயக்கங்களின் ஆதரவும் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.