இந்தியாவில், ஐந்து கோடி டாலருக்கு மேல் (325 கோடி ரூபாய்) சொத்து உள்ள கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 2,083 ஆக உயர்ந்துள்ளது. 2014ம் ஆண்டைக் காட்டிலும் இது 3 சதவீதம் அதிகம் என கிரெடிட் சுயூசி ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் 2000 ஆம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை நடுத்தர வர்க்கத்தினரின் தனிப்பட்ட சொத்து மதிப்பு அதிகரித்து வந்தது. ஆனால் 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடிக்குப் பின் உலக நாடுகளில் அனைத்து தரப்பினரின் சொத்து மதிப்பில் கடும் ஏற்றத் தாழ்வுகள் இருந்து வருகிறது என கிரெடிட் சுயூசி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டின் இடைப் பகுதியில் இருந்து 2015 இடைப் பகுதி வரை இந்திய குடும்பங்களின் மொத்த சொத்து மதிப்பு டாலர் அடிப்படையில் 1 சதவீதம் குறைந்து 3.4 லட்சம் கோடி டாலராக உள்ளது. அதேசமயம், ரூபாய் அடிப்படையில் இந்திய குடும்பங்களின் சொத்து மதிப்பு 4.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

2000 ஆம் ஆண்டு முதல் உலக பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்ட காலம் நீங்கலாக இந்தியாவில் தனிநபர் சொத்து மதிப்பு அதிவேக வளர்ச்சி கண்டு வருகிறது. நடப்பு ஆண்டின் இடைப் பகுதியில் தனி நபர் சராசரி சொத்து மதிப்பு 8 சதவீதம் உயர்ந்து 4,350 டாலராக அதிகரித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளில் தனிப்பட்ட குடும்ப சொத்து என்பது பெரும்பாலும் வீடு, மனை போன்ற ரியல் எஸ்டேட் சொத்துக்களை உள்ளடக்கியதே ஆகும். குடும்பங்களின் மொத்த சொத்து மதிப்பில் இது 86 சதவீதமாக உள்ளது. இந்தியாவில், வயது வந்தவர்களின் எண்ணிக்கையில் 3 சதவீதத்தினரே நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பணக்காரர்கள் ஆவர். 2000 ஆம் ஆண்டு முதல்இவர்களின் சொத்து மதிப்பு 150 சதவீதம் வளர்ச்சி கண்டு 78,000 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது நாட்டின் மொத்த சொத்து மதிப்பில் 23 சத வீதமாகும். டாலர் மதிப்பு அடிப்படையில் நடுத்தர கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டிற்குள் 65 சதவீதம் உயர்ந்து 3.05 லட்சத்தை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த எண்ணிக்கை 1.85 லட்சமாக உள்ளது என கிரெடிட் சுயூசி ஆய்வறிக்கை கூறுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.