மூச்சுத் திணறும் தமிழக மக்கள் போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்துக: சிபிஎம்

சென்னை, அக்.16-

பருப்பு வகைகளின் வரலாறு காணாத விலை உயர்வால் தமிழக மக்கள் மூச்சு திணறி வருகின்றனர். விலை உயர்வை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள செய்தி வருமாறு:- அண்மைக் காலத்தில் துவரம்பருப்பு, உளுந்து உள்ளிட்ட பருப்புகளின் விலை ரூ.190-210 வரை சென்று விண்ணை முட்டியுள்ளது. சென்ற வருடம் இதே காலத்தில் இருந்த விலை இரண்டு மடங்குக்கும் மேல் எகிறியுள்ளது. சாப்பாட்டுஅரிசி ஓரளவு தரமாகக் கிடைக்க வேண்டும் என்றால் கிலோ ரூ.60 வரை செலவழிக்க வேண்டியிருக்கிறது. காய்கறிகள் விலையும் உயர்ந்திருக்கிறது. வெங்காயம் மற்றும் பருப்புகளின் விலை உயர்வின் அடிப்படையில் ஓட்டல் உணவு பொருட்களின் விலையும் உயரும் என்று கூறப்படுகிறது. எளிய மக்கள் மட்டுமல்ல, நடுத்தர வர்க்கமே சமாளிக்க முடியாமல் விழிபிதுங்கும் நிலை உருவாகியுள்ளது

கொடிய வலை

இதன் விளைவாக, ஏழை குடும்பங்களில் மேலும் உணவுக்கான செலவினங்கள் அதிகரிக்கும். உணவைக் குறைத்துக் கொள்வது அல்லது இதர அத்தியாவசிய செலவினங்களை சுருக்குவது என்ற கொடுமையான வலைக்குள் அவர்கள் விழுந்து கொண்டிருக்கிறார்கள்.

பண்டிகைப் பரிசா?

மத்திய அரசு வழங்கும் பண்டிகை காலப் பரிசா இது? மத்திய – மாநில அரசுகளின் கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளால் ஏற்படும் விளைவு தான் இந்த நெருக்கடி. பருவ மழைப் பற்றாக்குறையும், பருப்பு உற்பத்தி குறைவும் தேசிய அளவில் நிலைமையைத் தீவிரப்படுத்துகிறது. ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருக்கும் உணவுப் பாதுகாப்பு மேலும் சீர்குலையும். இது மிகவும் அபாயகரமானதாகும். இதன் அறிகுறி ஏப்ரல் மாதம் முதலே தெரிந்தாலும், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட விலை உயர்வைச் சொல்லி ஆட்சிக்கு வந்த பாஜக அரசும் அதேபாதையில், அதே கொள்கைகளைப் பின்பற்றுவதால் நெருக்கடிகள் தொடர்வது மட்டுமல்ல, தீவிரமாகின்றன. இது தமிழக மக்களையும் பாதிக்கிறது. பிரதான திராவிடக் கட்சிகளான அதிமுகவும், திமுகவும் இதே நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றுபவையாதலால், இதற்கான மாற்றை முன்மொழிய இயலவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிகளும் தொடர்ச்சியாக மாற்றை முன்வைத்துக் கொண்டிருக்கிறோம். உணவு தானியங்களில் முன்பேர வர்த்தகம் தடுக்கப்படுவதும், பதுக்கலைத் தடுப்பதும், இடைத்தரகர்களின் தலையீடுகளைக் கட்டுப்படுத்துவதும், பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிவிகிதத்தைக் குறைப்பதும், விவசாயத்தைப் பாதுகாப்பதும் மத்திய அரசின் கொள்கையாக மாற வேண்டும்.உடனடியாக பருப்பு இறக்குமதி செய்தாவது விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். மாநில அரசோ, ரேஷன் கடைகளில் மலிவுவிலையில் பிரதி மாதம் ஒவ்வொரு கிலோ துவரம்பருப்பும், உளுந்தும் தருவதாக வாய்ச் சவடால் அடித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, கடைகளில் மக்களுக்குக் கிடைத்தபாடில்லை. பண்டிகை காலத்தில் உடனடி நிவாரணத்துக்கான நடவடிக்கைகளை மாநில அரசும் மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது.உணவுப் பொருட்களின் விலை உயர்வினை எதிர்த்தும், அதனைக் கட்டுப்படுத்த ஆட்சியாளர்களை வலியுறுத்தியும் கண்டனக்குரல் எழுப்பிட வேண்டுமென அனைத்துப்பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

 

Leave A Reply

%d bloggers like this: