திருநெல்வேலி, அக். 15

நெல்லை, மதுரையில் பலாத்காரம் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை இந்திய குற்றவியல் கழகம் தெரிவித்துள்ளது. இந்திய குற்றவியல் கழகத்தின் 38வது மாநாடு நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் வியாழனன்று காலையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு இந்திய குற்றவியல் கழக தலைவர் பாண்டே தலைமை தாங்கினார். பல்கலைக்கழக குற்றவியல் துறைத்தலைவர் மாதவ சோமசுந்தரம் வரவேற்றார். மாநாட்டில் இந்திய குற்றவியல் கழக செயலாளர் லதா அறிக்கை வாசித்தார். தேசிய பசுமை தீர்ப்பாய குழு உறுப்பினர் நீதிபதி ஜோதிமணி இந்திய குற்றவியல் கழக விருதுகளை வழங்கி பேசுகையில், அமெரிக்கா போன்ற நாடுகளில் குற்றம் செய்தவர்களுக்கு வழங்கும் தண்டனைகள் விதிமுறைகளில் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் நமது நாட்டில் கொலைக்குற்றம் செய்தவருக்கு ஆயுள்தண்டனை அல்லது மரணதண்டனை விதிக்கப்படுகிறது. அந்த வழக்கை புலனாய்வு செய்த அதிகாரி குற்றப்பத்திரிக்கை. நேரில்பார்த்த சாட்சி ஆகியவற்றின் அடிப்படையிலேயே குற்றவாளிக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக விசாரணை நடக்கும் போது தீர்ப்பை முடிவு செய்துவிடுகிறோம். இறுதியாக குற்றவாளியிடம் கேட்கும் போது அவர் இந்த வழக்கில் எனக்கு ஒன்றும் தெரியாது என்கிறார். எனினும் அவருக்கு தண்டனை அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக இந்த மாநாட்டில் விவாதிக்க வேண்டும் என்றார். இதன்பின்னர் இந்திய குற்றவியல் கழக தலைவர் பாண்டே பேசுகையில், புதுதில்லியில் 2012ம் ஆண்டு மாணவியை பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. தென்னிந்தியாவில் நெல்லை, மதுரை போன்ற நகரங்களில் பலாத்கார சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன என்றார். இந்த மாநாட்டில் முதுநிலை உதவி பேராசிரியர் ஜெய்சங்கர் நன்றி கூறினார்.

Leave A Reply