பெரும்பாவூர் :-

நடிகை மீரா ஜாஸ்மின் படப்பிடிப்புக்கு சரியாக வராததால் பாதிப்பு மற்றும் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் அவர் மீது வழக்கு தொடரப்போவதாகவும் மலையாள டைரக்டர் மனோஜ் கூறினார். சண்டைக்கோழி உள்ளிட்ட தமிழ்ப்படங்களிலும், மலையாள படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் டைரக்டர் மனோஜ் இயக்கிய ‘இதினும் அப்புறம்’ என்ற மலையாள படத்தில் நடித்தார்.

எர்ணாகுளத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் டைரக்டர் மனோஜ் கூறியதாவது:- நான் இயக்கிய ‘இதினும் அப்புறம்’ படத்தில் நடித்து வந்த மீரா ஜாஸ்மின், படப்பிடிப்புக்கு சரியாக வரவில்லை. இதனால் படப்பிடிப்பு முடிவடைய மிகவும் தாமதம் ஆனது. ரூ.25 லட்சம் சம்பளம்பேசி, ரூ.15 லட்சத்தை முன் தொகையாக பெற்றுக்கொண்டார். மீதம் உள்ள ரூ.10 லட்சத்தை துபாய்க்கு வந்து தருமாறு கூறினார். கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்புக்கு வராததால் அந்த காட்சி இல்லாமல் படத்தை முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மீரா ஜாஸ்மின் சரியாக படப்பிடிப்புக்கு வராததால் எனக்கு இழப்பு மற்றும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த படம் தொடர்பான விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள மறுத்துவிட்டார். இதனால் எனக்கு சிரமம் ஏற்பட்டது. எனக்கு ஏற்பட்ட சிரமத்தின் காரணமாக, மன அழுத்தம் ஏற்பட்டது. எனவே மீரா ஜாஸ்மின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.