திருவனந்தபுரம்:-

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டம் முழுவதும் உள்ள தேயிலை, ரப்பர், ஏலக்காய் தோட்ட தொழிலாளர்கள் ரூ.500 சம்பளம் வழங்க வேண்டும் என கோரி கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சிஐடியு, ஐஎன்டியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களும் போராட்டம் நடத்தின. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தொழிலாளர் துறை அமைச்சர் சிபு பேபி ஜான், மாவட்ட ஆட்சியர் ரதீசன் மற்றும் அதிகாரிகள் 5 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தொழிலாளர்கள் கேட்கும் சம்பள தொகையை வழங்க இயலாது என தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்ததால் அந்த பேச்சு வார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் தொழிலாளர் துறை அமைச்சர் தலைமையில் 6-ம் கட்ட பேச்சுவார்த்தை திருவனந்தபுரத்தில் நடந்தது.

இதில் தொழிற்சங்க நிர்வாகிகள், தோட்ட உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத் தொகையான ரூ.232-ல் இருந்து ரூ.69 அதிகரித்து ரூ.301-ஆகவும், ஏலக்காய் தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ.267-ல் இருந்து ரூ.63 அதிகரித்து ரூ.330-ம், ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ.317-ல் இருந்து ரூ.64 அதிகரித்து ரூ.381-ம் சம்பளமாக வழங்குவதாக தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்தனர். மேலும் அடுத்து வரும் ஆண்டுகளில் முறையான சம்பள உயர்வை வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதற்கு தொழிலாளர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Leave A Reply

%d bloggers like this: