நாகர்கோவில், அக்16-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் என்.முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

குமரி மாவட்ட மக்களின் அடிப்படை வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் மாவட்டம் முழுவதும் நடைபயணங்கள் மேற்கொண்டு ஏப்ரல் மாதத்தில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடத்தி கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தனியார் வனப்பாதுகாப்புச் சட்டத்திலிருந்து குமரி மாவட்ட மக்களுக்கு முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும் என்ற பிரச்சனையில் தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட திருத்த அரசாணையானது விவசாயிகளின் நிலங்களை வனப்பகுதியாக மாற்றியதை உறுதிப்படுத்தி அனைத்து அதிகாரங்களும் வனக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது மக்களை அலைய வைப்பதற்கு இட்டு செல்லுமே தவிர பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படுத்தக் கூடியதாக இல்லை. முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது கையாளப்பட்ட தவறான இறக்குமதி கொள்கையினை அப்படியே மத்திய பிஜேபி அரசும் பின்பற்றுவதால் மாவட்டத்தின் மலையோர கிராமங்களில் பொருளாதாரம் நிலைகுலைந்து சிறுதோட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுதோட்டத் தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு மூலம் எவ்வித நிவாரணமும் வழங்கப்படுவதும் இல்லை.கடற்கரை பகுதியில் வாழும் மக்களுக்கு மீன்பிடித் தொழில் பெரும் பாதிப்பு, ஆழ்கடலில் மீன்பிடிக்க அந்நிய நாட்டுக் கம்பெனிகளுக்கு அனுமதி, மீன்பிடி துறைமுகங்கள் வேலை ஆமை வேகத்தில் நடைபெறுகிறது.

மேற்கண்ட சூழ்நிலையில் தனியார் வனப் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து குமரி மாவட்டத்திற்கு விலக்கு அளித்தல் ரப்பருக்கு நியாயவிலை நிச்சயித்தல் நான்கு வழிச் சாலைக்காக நிலம் வீடுகளை இழந்த மக்களுக்கு சந்தை விலை அடிப்படையில் இழப்பீடு வழங்குதல், அனைத்துச் சாலைகளையும் சீரமைத்து தரமான பேருந்துகளை இயக்குதல், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தரமான சிகிச்சைக்கான ஏற்பாடுகள், 2006 வன உரிமைச் சட்டப்படி ஆதிவாசி மக்களுக்கு நிலம் பகிர்ந்தளித்தல், ஆற்றுப் பகுதிகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது நடவடிக்கை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 17-ந் தேதி மாலை 3 மணிமுதல் இரவு 8 மணி வரை குலசேகரம் அரசமூடு சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தக்கலை – திருவட்டார் – குலசேகரம் வட்டாரக் குழுக்கள் சார்பில் பெருந்திரள் தர்ணா நடைபெறுகின்றது. இப்போராட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

Leave a Reply

You must be logged in to post a comment.