கோழிக்கோடு:-

கேரள உள்ளாட்சி தேர்தலில் மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நவம்பர் மாதம் நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 2-ந் தேதி நடக்கிறது. இரண்டாம் கட்டமாக பத்தினம் திட்டா, கோட்டயம், ஆலப்புழை, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு நவம்பர் 5-ந் தேதி நடக்கிறது.

மாநிலம் முழுவதும் மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரம்பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மாநிலத்தில் அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 661 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். குறைந்த பட்சமாக வயநாடு மாவட்டத்தில் 4,776 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மாவட்ட வாரியாக வேட்புமனு தாக்கல் விவரம்: காசர்கோடு-5,295, கண்ணனூர்-9,275, கோழிக்கோடு- 11,814, பாலக்காடு-11,671, திருச்சூர்-10,658, எர்ணாகுளம்- 10,302, இடுக்கி-6,706 கோட்டயம்-7,230, பத்தினம்திட்டா-6,063, ஆலப்புழை-7,646, கொல்லம்-9,262, திருவனந்தபுரம்-12,664. கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 1 லட்சத்து 49 ஆயிரத்து 649 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த முறை 14 ஆயிரத்து 649 வேட்புமனுக்கள் குறைந்துள்ளன.

கடந்த உள்ளாட்சி தேர்தலில் மாநிலம் முழுவதும் 21 ஆயிரத்து 595 வார்டுகள் இருந்தன. மக்கள் தொகை பெருக்கம் அடிப்படையில் கூடுதல் வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதால் இந்த முறை மாநிலம் முழுவதும் வார்டுகளின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 871 ஆக உயர்ந்துள்ளது. இந்த தேர்தலில் பெண்களும் திரளான அளவில் மனுதாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு வாபஸ் அக்டோபர் 17 சனிக்கிழமை நடைபெறுகிறது. கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: