K.Kanagaraj

K.Kanagaraj

ஆஹா. பிரதமர் வாய் திறந்துவிட்டார். தாத்ரியில் முஸ்லீம் ஒருவர் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக அடித்துக் கொல்லப்பட்டதை பற்றியும், பாகிஸ்தான் பாடகர் குலாம் அலிகான் நிகழ்ச்சி மகாராஷ்ட்டிராவில் ரத்து செய்யப்பட்டது பற்றியும் “அது வருந்தத்தக்கது, துரதிர்ஷ்டவச மானது, நடந்திருக்கக் கூடாதது” என்று பேசிவிட்டார். இந்தப் பேச்சுக்காகத்தான் தாத்ரி சம்பவம் நடந்த செப்டம்பர் 28-ந் தேதி முதல் அக்டோபர் 14- ந் தேதி வரை இந்திய சமூகமே ஏங்கி கிடந்தது போன்ற தோற்றத்தில் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. இதோடு சேர்த்து “இதுவெல்லாம் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை. மாநிலங்களின் உரிமை. இதற்காக மத்திய அரசை குறை கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது” என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். கொலை செய்யப்பட்டவருக்கு அனுதாபமோ, கொன்றவர்களுக்கு கண்டனமோ கூட தெரிவிக்கவில்லை.

வாய் திறந்தது; வரமா வந்தது!

பிரதமர் வாய்த்திறக்க வேண்டும் என்று கேட்டதன் பொருள் இந்தப் பிரச்சனையை அவர் கண்டிக்க வேண்டும். அவரது பரிவாரத்தை அடக்கி வைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தான். அக்டோபர் 8-ந் தேதியன்று பீகார் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட இந்தப் பிரச்சனையில் அவர் திருவாய் மலர்ந்தார். “இந்துக்கள் -முஸ்லீம்களோடும், முஸ்லீம்கள் இந்துக்களோடும் ஏன் சண்டை போடுகிறீர்கள், இருவரும் இணைந்து வறுமைக்கு எதிராக சண்டையிடுங்கள்” என்று பேசினார். மேலோட்டமாய் பார்த்தால் புத்தர் பிரான் எழுந்தருளி போதித்தது போல் தோன்றும். உண்மையில் இந்துக்களும், முஸ்லிம்களுமா சண்டை போட்டுக் கொண்டார்கள். இக்லாக் என்கிற ஒரு முஸ்லீம் வீட்டில் மாட்டிறைச்சி இருப்பதாக வதந்தியை கிளப்பி, அந்த வதந்தியை அந்த ஊரின் கோயில் ஒலிபெருக்கியிலிருந்து பசுவைக் கொன்று அதன் இறைச்சியை இக்லாக் தன்வீட்டில் வைத்திருக்கிறார் என்று அறிவித்து, கும்பல் சேர்த்து வீட்டுக்குள் புகுந்து இக்லாக்கை அவர் பயன்படுத்திய தையல் இயந்திரத்தாலயே அடித்துக் கொலை செய்தார்கள்.

அவரது மகன் டேனீஷ் ஆபத்தான நிலையில் இப்போதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தக் கொலையில் 11 பேர் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றிருக்கிறார்கள். இதில் 8 பேர் அந்தப் பகுதியில் பிரபல பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சஞ்சய் ரானாவின் உறவினர்கள். அதில் ஒருவர் அவரது மகன் விவேக். மற்றொருவர் பெயர் ரீட்டு ரத்தோர். இவர் பாரதிய ஜனதா கட்சியின் சமூக ஊடகக் குழுவில் உள்ளவர். இவர் தான் வதந்தியை சமூக ஊடகங்களில் பரப்பியவர். கொல்லப்பட்டவர் இக்லாக் என்கிற முஸ்லிம். கொலை செய்தவர்கள் பாரதிய ஜனதா கட்சியினர். இதைத்தான் இந்து – முஸ்லிம் சண்டை என்கிறார் பிரதமர். மோடி வருந்தத்தக்கது என்பதோடு முடித்துக் கொண்டார். இது தான் உண்மையான மோடி. குஜராத்தில் 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டது குறித்து 2013 ல் “நீங்கள் ஓட்டுநராகவும் இருக்கலாம் அல்லது பயணம் செய்பவராகவும் இருக்கலாம், உங்கள் காரில் ஒரு நாய்க் குட்டி அடிபட்டு செத்துப்போனால் அதற்காக வருத்தப்படுவீர்கள் தானே” என்று ராய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு திருவாய் மலர்ந்து அருளியவர் தான். குஜராத் கொடுமைகள் நடந்து முடிந்த 2002 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 9-ந் தேதி தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி முஸ்லிம்கள் குறித்து இவ்வாறு கூறினார்.

“அவர்கள் (முஸ்லிம்கள்) நாம் ஐவர், நமக்கு இருபத்தைவர் என்பதை கடைப்பிடிக்கிறார்கள்” என்றும் நிவாரண முகாம்கள் பற்றி “நாங்கள் என்ன குழந்தைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையா நடத்திக் கொண்டிருக்கிறோம்” என்றும் கூறினார்.

மாநில பிரச்சனையா?

இந்த சம்பவங்கள் குறித்து பேசிய பிரதமர் மோடி இது மாநில பிரச்சனை இதற்காக மத்திய அரசை குறை கூறலாமா? என்று மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார். சட்டம் – ஒழுங்கு மாநில பிரச்சனை தான். ஆனால் சட்டம்-ஒழுங்கை கெடுப்பவர்கள் பாஜக தலைவர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் எப்படி பேசியிருக்கிறார்கள் என்பதை பாருங்கள். சங்கீத் சிங் சோம்:- இவர் பாஜக எம். எல்.ஏ. இக்லாக்கை கொன்றவர்கள் அப்பாவிகள் என்றும், 2017 ல் நாங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வருவோம், யாராவது பசுவை வதைத்தால் அது கொலைக் குற்றமாக 302 வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மகேஷ் சர்மா:- இவர் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர். அந்த தொகுதியின் எம்.பி. இது ஒரு விபத்து, வந்தவர்கள் இக்லாக்கை கொன்றிருக்கிறார்களே தவிர அவரது மகளை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை. இக்லாக் குடும்பத்துக்கும் நீதி கிடைக்கும், ‘அப்பாவி’ குற்றவாளிகளுக்கும் நீதி கிடைக்கும் என்று பேசியிருக்கிறார்.

சஞ்சீவ் பால்யான்:- இவர் மோடி அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சர். பசுவதையை நிறுத்தவில்லை என்றால் இன்னும் இது மாதிரி நடக்கும் என்று பேசியிருக்கிறார். யோகி

ஆதித்யநாத்:- இவர் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர். எம்.பி.யும் கூட. மாட்டிறைச்சி வைத்திருப் பவர்களுக்கு எதிராக இந்துக்கள் போராடும் போது அவர்கள் துன்புறுத்தப்பட்டால் அவர்களுக்கு துப்பாக்கி தருவேன் என்று கூறியிருக்கிறார்.

சாக்ஷி மகராஜ்:- இவரும் நாடாளுமன்ற உறுப்பினர் தான். “பசுவை காப்பாற்ற கொல்லவும் தயார், கொல்லப்படவும் தயார்” என்று பேசியிருக்கிறார். இதேபோன்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், பீகார் முன்னாள் துணை முதல மைச்சர் சுஷில் குமார் மோடி ஆகியோரும் பேசியிருக்கிறார்கள்.

இவர்களில் சங்கீத் சிங் சோம் மற்றும் சஞ்சய் பால்யான் இருவரும் முசாபர்நகர் கலவரத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள். இருவருக்கும் மத்திய அரசு இசட் பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. சங்கீத் சிங் சோமுக்கு உள்ள இன்னொரு சிறப்பு இவர், இறைச்சி ஏற்றுமதி தொழில் நடத்தியவர். இவர் கம்பெனிக்கு அல்-துவா மற்றும் அல்-அய்னாஎன்று அரபு மொழியில் பெயர் வைத்திருந்தார். ஒளரங்கசீப் பெயரை சாலைக்கு மாற்றினார்கள். ஆனால் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் தன் நிறுவனத்திற்கு அரபு மொழியில் பெயர் வைக்கிறார் மாடுகளின் பாதுகாவலர். மாட்டிறைச்சி விற்ற காசு கவிச்சி நாற்றம் அடிக்காது போலும். மோடியின் கட்சியினரும், நிர்வாகிகளும், அமைச்சர்களும், எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் அடித்துக் கொல், துப்பாக்கியை எடு, பாலியல் வன்கொடுமையா நடந்து விட்டது என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள். இதை தட்டிக் கேட்கவோ, அதட்டிச் சொல்லவோ மோடி முன்வரவில்லை.

மாநிலங்கள்தான் சட்டம் – ஒழுங்கிற்கு பொறுப்பு என்கிற கூற்றோடு இதை ஒப்பிட்டால் “எங்கள் ஆட்கள் இப்படித்தான் அடிப்பார்கள், முடிந்தால் நீ நடவடிக்கை எடு” என்று சவால் விடுவதற்கு சமம். திருடர்களுக்கு தலைமை தாங்குகிற ஒருவர் திருட்டு நடந்தால் அதை தடுப்பது போலீசின் கடமை என்று சொன்னால் அதற்கு என்ன மரியாதை உண்டோ அது தான் மாநிலங்களின் பொறுப்பு என்கிற மோடியின் இந்த பேச்சுக்கும் உண்டு. இன்னும் சொல்லப்போனால் மோடி இந்தியாவிலிருக்கும் 125 கோடி மக்களையும் பாதுகாப்பதற்கு தான் பொறுப்பு என்பதிலிருந்து விலகிக் கொள்வதாக அர்த்தம். மாநிலங்களில் எது வேண்டுமானாலும் செய்து கொள் என்று தன் கட்சியினருக்கு ஊக்கமூட்டும் செயல்.

இது ஒருபுறமிருக்க மகாராஷ்ட்டிராவில் பாகிஸ்தான் பாடகர் குலாம் அலி இசை நிகழ்ச்சி சிவசேனாவின் மிரட்டலால் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் கசூரியின் புத்தக வெளியீட்டு விழாவை நடத்தியதற்காக சுதீந்திர குல்கர்னி முகம் முழுவதும் மையால் அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் சுதீந்திர குல்கர்னி வாஜ்பாய்க்கும், அத்வானிக்கும் உதவியாளராக இருந்தவர். மகாராஷ்ட்டிராவில் இப்போது பாஜக ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு யார் பதில் சொல்ல வேண்டும்?, யார் நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்பதை மோடி தான் விளக்க வேண்டும். இந்தப் பிரச்சனை தொடர்பாகவும் இதற்கு முன்பு நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம். கல்புர்கி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டது சம்பந்தமாகவும், எழுத்தாளர் பகவானுக்கு கொலை மிரட்டல் விடப்படுவது சம்பந்தமாகவும் தங்கள் கண்டனத்தை தெரிவித்தும், சாகித்ய அகாடமியின் மயான அமைதியை கண்டித்தும், எழுத்தாளர்கள் பலபேர் தங்கள் விருதுகளை திரும்ப ஒப்படைத்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு போன்ற இடங்களில் எல்லா வகையான கருத்து நிலை கொண்டோரும் ஒன்றிணைந்து கண்டனம் முழங்கியிருக்கிறார்கள். சிலர் சாகித்ய அகாடமியின் பொறுப்பிலிருந்து விலகியிருக்கிறார்கள். இது குறித்து கலாச் சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா “தைரியம் இருந்தால் எழுதுவதை நிறுத்துங்கள்” என்கிறார்கள். சாகித்ய அகாடமியின் தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரி, சாகித்ய அகாடமி விருதை திருப்பி கொடுத்தவர்கள், விருது பெற்ற புத்தகங்கள் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதால் கிடைத்த பலனையும் திருப்பி தருவார்களா என்று கேட்டிருக்கிறார். இது குறித்தெல்லாம் பல பேர் நரேந்திர மோடியிடம் இறைஞ்சி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றை நினைவூட்ட வேண்டியிருக்கிறது. இப்போதாவது விருதை திருப்பி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 5 வருடத்திற்கு முன்பாக குஜராத்தில் அகில் ஷாத்திர் என்கிற கவிஞருக்கு குஜராத் உருது சாகித்ய அகாடமி கொடுத்த விருதை திரும்ப ஒப்படைக்கச் சொன்னார்கள். அதுமட்டுமல்ல, அந்த விருதுடன் கொடுக்கப்பட்ட ரூ. 10,000/-த்தையும் திருப்பி கேட்டார்கள். விருதுபெற்ற பிறகு அவர் எழுதிய ஒரு புத்தகத்தில் நரேந்திர மோடிக்கு எதிராக கருத்துச் சொன்னார் என்பது தான் அந்த ஒற்றைக் காரணம். விருதுகள் தங்களுக்கு அடிமைச் சேவகம் செய்ய எழுத்தாளர்களுக்கு கொடுக்கப்பட்ட விலையாக கருதுகிறார்கள். இது தான் இவர்களின் கலாச்சார நேர்மை, கருத்துச் சுதந்திர பாதுகாப்பு, குஜராத் மாடல்.

அனைத்து மாறுபட்ட கருத்துக்களுக்கும் ஜனநாயகத்தில் இடமுண்டு. எதிரும், புதிருமான கருத்துக்கள் மோதுவதன் மூலமாகவே சமூகம் முற்போக்கான கருத்துக்களை நோக்கி முன்னேறுகிறது. ஆனால் சிலபேர் கடந்த காலத்திலேயே தங்கி போகிறார்கள். அதனால் எத்தனை முன்னேற்றம் வந்தாலும் மீண்டும் கடந்த காலத்தை புதுப்பிக்க முயற்சிக்கிறார்கள். இந்துத்துவ வாதிகளைப் பொறுத்தமட்டில் அவர்களின் எந்தக் கருத்தையும் அவர்களால் விவாதங்களின் மூலம் தர்க்க ரீதியாகவோ அறிவியல் பூர்வமாகவோ நிலைநிறுத்த முடியாது. அதன் காரணமாகவே அவர்கள் கருத்துக்களை தாக்குவதற்கு பதிலாககருத்துச் சொல்பவர்களை தாக்குகிறார்கள். தாக்குவது மட்டுமல்ல, அழித்தொழிப்பதன் மூலம் அடுத்து யாரும் இப்படி பேசக்கூடாது என நினைக்கிறார்கள். நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன் சாரே, எம்.எம். கல்புர்கி ஆகியோரை கொல்வதின் மூலம் முற்போக்கு கருத்துக்களை, மூட நம்பிக்கை எதிர்ப்பை, கருத்துச் சுதந்திரத்தை அழித்தொழித்து விட முடியும் என்று நினைக்கிறார்கள்.

ஏற்கனவே குறிப்பிட்ட நரேந்திர மோடிக்கு எதிராக கருத்துச் சொன்னதற்காக குஜராத் உருது சாகித்ய அகாடமி விருது பறிக்கப்பட்ட அகில்ஷாத்தீர் அவர்களின் கவிதையை இவர்களுக்கு பதிலாக சொல்ல விரும்புகிறேன். “நான் இன்னும் கூட உயிரோடு இருக்கிறேன் என்னுள் இருந்த மனிதன் இன்னும் இருக்கிறான் என்னுடைய உடம்பு துளையிடப்பட்டிருக்கிறது ஆனாலும் என்னுள் இன்னும் உயிர் இருக்கிறது என்னை கொலை செய்தவர்களே உங்கள் குறிக்கோளை விட்டுவிடாதீர்கள் தியாகத்திற்கான ஆவல் இன்னும் என்னுள் எரிந்து கொண்டிருக்கிறது” இந்த சத்திய ஆவேசம் எழுத்தாளனை கொன்றாலும், எழுதுகோலை பறித்தாலும், இத்தேசம் முழுவதும் சிறை எனக் கூறி வாய்ப்பூட்டு போட்டாலும் எப்போதும் வெற்றி பெற்றே தீரும். ஆங்கிலேயரின் வாய்ப் பூட்டு சட்டத்தையும், அவசர நிலை கொண்டு வந்த காங்கிரசையும் இவர்கள் தான் முறியடித்தார்கள். இப்போதும் அதே ஆவேசத்தோடு அவர்கள் புறப்பட்டிருக்கிறார்கள். இறுதியாக ஒன்று, கள்ளிகளை விதைப்பதற்கு எந்த விவசாயியும் விரும்புவதில்லை, ஆனால் கள்ளிகள் தங்களால் மல்லிகைப் பூவை பூக்க முடியும் என கூவி அழைத்த போது 2014 தேர்தலில் இந்தியமக்களின் ஒரு பகுதியினர் ஏமாந்து தான் போனார்கள். கள்ளிச் செடியில் மல்லிகை ஒருபோதும் பூக்காது. அப்படி பூப்பதாக தோன்றினால் அது ஏமாற்றுவதற்கான அழைப்பு என்பதை மீண்டும் ஒருமுறை மோடி நிரூபித்திருக்கிறார்.

Leave A Reply

%d bloggers like this: