சிம்லா, அக். 16 –

இமாச்சலப் பிரதேசத்தில் பசுக்களைக் கடத்தியதாக கூறி ஒருவரை இந்துத்துவா மதவெறியர்கள் கொடூரமாக தாக்கி படுகொலை செய்தனர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த நோமன் என்பவரை, பசுக்களை கடத்தி வந்தவர் என்று கூறி பஜ்ரங்தள் ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கினர். படுகாயம் அடைந்த நோமனை கடந்த புதன் கிழமை காலையில் இமாச்சலப் பிரதேச போலீசார் மீட்டனர். நாகான் அருகே உள்ள ஷராகன்கிராமத்தில் நின்ற டிராக்டரில் காயம் அடைந்த நிலையில் கிடந்த அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

டிராக்டரில் நோமனுடன் இருந்த இம்ரான் அஸ்கார் என்பவர் கூறுகையில், பஜ்ரங்தள் அமைப்பினர் பசுக்களை ஏற்றிச் சென்ற எங்களுடைய டிராக்டரை நிறுத்தினர்; பின்னர் நோமனை அவர்கள் கொடூரமாகத் தாக்கினர் என்று கூறினார். டிராக்டரில் இருந்த மற்ற நான்கு பேர் மீது இமாச்சலப் பிரதேசம் மாநில பசுவதை தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே பஜ்ரங்தள் அமைப்பினரால் தாக்கப்பட்ட நோமன் உயிரிழந்துவிட்டார். இது தொடர்பாக போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் கவுதமபுத்தா நகர் மாவட்டம் தாத்ரி கிராமத்தில் அண்மையில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி இக்லாக் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த பிரச்சனை நாடும் முழுவதும் பெரும் எதிர்ப்பை கிளப்பியது. இந்நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply