வாஷிங்டன், அக். 16-

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் என்ற தனது வாக்குறுதியை மீறும் வகையில், படைகள் அங்கு தொடர்ந்து இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவித்திருக்கிறார்.2001 ஆம் ஆண்டில் அங்கு ஆட்சிப் பொறுப்பிலிருந்த தலிபான்களை அகற்றி விட்டு, அமெரிக்கப் படைகள் ஆக்கிரமித்தன. மக்களால் தேர்வு செய்யப்படுபவர்கள் பெயரளவுக்கு ஆட்சியில் இருந்து வருகிறார்கள். தலிபான்களின் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்கள். இருந்தாலும், ஆப்கன் மண்ணிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் என்று கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது பராக் ஒபாமா வாக்குறுதி அளித்தார். தான் பதவியிலிருந்து வெளியேறும்போது, அதாவது 2016 ஆம் ஆண்டின் இறுதிக்குள் படைகள் வெளியேறி, ஒரு தூதரகம் மட்டுமே இருக்கும் என்றார். படைகள் விலக்கம் என்ற அறிவிப்புகள் கூட வந்தன.

ஆனால், தற்போது படைகளை விலக்கிக் கொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.தற்போது அங்குள்ள பத்தாயிரம் ராணுவத்தினர் நீடிப்பார்கள். இந்த எண்ணிக்கையை உயர்த்துவது பற்றி விரைவில் முடிவெடுப்பார்கள். ஆயுதங்கள், போர் விமானங்கள், பீரங்கிகள் போன்றவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறோம் என்று அமெரிக்க ஜனாதிபதி மாளிகை அதிகாரியொருவர் கூறியுள்ளார். எங்களது இந்த முடிவு ஆப்கானிஸ்தான் அரசுக்கு எந்தவித நெருக்கடியையும் தராது. சொல்லப்போனால் நாங்கள் தொடர வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் என்றார்.

நிலைமையில் மாற்றமில்லை

ஆப்கானிஸ்தானில் படைகளை மேலும் நீட்டிப்பது அமெரிக்காவுக்கு பெரும் செலவாகக்கூடிய விஷயம் என்ற கருத்து எழுந்தாலும், வெளிநாடுகள் மீதான படையெடுப்புகளுக்கான செலவை கூட்டாளி நாடுகள் மீது ஏற்றும் வேலையைத்தான் அமெரிக்கா செய்து வருகிறது. செலவுக்கணக்கு பற்றிக் கருத்து தெரிவித்த அமெரிக்க அரசு அதிகாரி, அது 1460 கோடி டாலராக இருக்கும் என்றார். அமெரிக்கப் படைகளால் பதவியிலிருந்து அகற்றப்பட்ட தலிபான்கள் மீண்டும் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் மீது எந்தெந்த காரணங்களைச் சொல்லி அமெரிக்கா தனது படைகளைக் கொண்டு வந்து நிறுத்தியதோ, அதில் எதுவுமே தீர்க்கப்படவில்லை என்று சில சர்வதேச விவகார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.கடந்த 14 ஆண்டுகளில் பிற நாடுகளின் தூதரகங்கள், திருமண நிகழ்ச்சிகள், அப்பாவி மக்களின் வாகனங்கள் என்று பல முறை அமெரிக்கா குண்டுவீசித் தாக்கியிருக்கிறது. தவறுதலாக நடந்த சம்பவங்கள் என்று வழக்கமான பதிலைச் சொல்லுவது அமெரிக்காவுக்கு வழக்கமாக இருந்துள்ளது. இந்த மாதத்தின் துவக்கத்தில் குண்டுஸ் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டன. மருத்துவ ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் உள்ளிட்டு 22 பேர் கொல்லப்பட்டார்கள், அங்கு தொண்டுப் பணியாற்றிக் கொண்டிருந்த நிறுவனம் தற்போது வெளியேறிவிட்டது. 2001 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையில் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.