சென்னை, அக். 16-

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு அலுவலர் மற்றும் ஓய்வூதியதாரர் ஆகியோருக்கான அகவிலைப் படியை 1.7.2015 முதல் 6 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 1.7.2015 முதல் 6 சதவீதம் உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அகவிலைப்படி உயர்வு உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர்கள் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைத்து அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதார்களுக்கும் வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வினால் அரசு அலுவலர்களுக்கு ரூ.366/- முதல் ரூ.4,620/- வரையில் சம்பள உயர்வும், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.183/- முதல் ரூ.2,310/- வரை ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும்.

இந்த அகவிலைப்படி 1.7.2015 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும். இந்த உயர்வினால் சுமார் பதினெட்டு லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் பயனடைவர். இந்த அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1,501 கோடியே 24 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.இந்த அகவிலைப்படி உயர்வு, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் மக்கள் பணியில் புதிய உத்வேகத்துடன் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள உதவும் என நான் நம்புகிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.