விடுதலை ஏட்டின் ஞாயிறு மலர் பகுதியில் கவிஞர் கலி. பூங்குன்றன் ‘கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம் – காம்ரேட்களின் கனிவான கவனத்திற்கு’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் மற்றும் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் ஆகியோர் திராவிடர் இயக்கத்தைப் பற்றியும், நீதிக்கட்சி குறித்தும் சகட்டு மேனிக்கு சேற்றை வாரி இறைத்துள்ளனர் என்று கூறி அந்தக் கட்டுரையை துவக்கியுள்ளார் கலி. பூங்குன்றன். திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி முரசொலி ஏட்டில் இந்தக் கட்டுரையை வழிமொழிந்துள்ளதோடு, கலி. பூங்குன்றன் மற்றும் திராவிட இயக்க ஆய்வாளர் நண்பர் க. திருநாவுக்கரசு ஆகியோர் ஆதாரப்பூர்வமாக அருமையாகபதிலளித்து எழுதி வரும் கட்டுரைகளை படித்து திமுகவினர் தங்களது பரப்புரையில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

இத்துடன் சேர்த்து திராவிடர் கழகம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு “சமூக நீதிகாத்த வீராங்கனை” என்று பட்டம் கொடுத்து பரவசம் அடைந்திருந்த நிலையில் விடுதலையில் வெளிவந்த கட்டுரை களையும், க. திருநாவுக்கரசு முன்பு மதிமுகவின் ‘சங்கொலி’ ஏட்டில் எழுதிய விளக்கக் கட்டுரைகளையும் படிப்பதை தவிர்த்திடுக என்றும் சேர்த்து சொல்லியிருந்தால் திமுகவினர் குழப்பம் அடையாதிருக்க உதவி யாக இருந்திருக்கும். கலி. பூங்குன்றன் பிரகாஷ் காரத்தின் கட்டுரை மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் உரைகளை சற்று பொறுமையாகப் படித்திருந்தால், அவை ஆத்திரத்தில் அள்ளி வீசப்பட்ட அவதூறு அல்ல, திராவிடக் கட்சிகள் திசைமாறி சென்று விட்டனவே என்ற ஆதங்கத்தில் முன்வைக்கப்பட்ட தோழமைப்பூர்வமான விமர்சனம் என்பதை அறிந்திருக்க முடியும். பிரகாஷ் காரத் தனது கட்டுரையில் ‘பெரியாரின் சுயமரியாதை இயக்கம், சாதிஎதிர்ப்பு, மத எதிர்ப்பு மேடைகளில் முற் போக்கான பங்கு வகித்தது. பிராமணிய இந்துத்துவத்தையும் அதன் வர்ணாசிரம தர்மத்தையும் உறுதியுடன் எதிர்த்தது.

இந்த மரபில் வந்த திமுக 1967 ம் ஆண்டு ஆளும் கட்சியானது. 1972ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அதிமுக 1977 ஆம் ஆண்டில் தனது முதல் தேர்தலை வென்றது.இரண்டு கட்சிகளும் தமிழக முத லாளிகளின் நலன்களை பிரதிநிதித்துவப் படுத்தி வளர்ந்தன. இந்த நிகழ்வுப் போக்கில், பெரியாரால் பிரச்சாரம் செய்யப்பட்ட முற்போக்கான சமூகக் கருத்துக் களை கைவிட்டன. சமூக, சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம் மேலோட்ட மான அளவிலேயே நிறுத்தப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதில் என்ன தவறு? நியாயமாகப் பார்த்தால் கலி. பூங்குன்றன் இந்தக் கருத்துக்களை ஆதரித்து எழுதியிருக்க வேண்டும். ஆனால் திமுக, அதிமுக கட்சிகளுடன் தொடர்ந்து மாறி மாறி ‘இனமான’ அடிப்படையில் நட்பு கொண்டிருந்ததால் நியாயமான விமர்சனத்தையும் ஏற்க மறுக்கிறது ‘விடுதலை’. ‘பிராமணியமும் முதலாளித்துவமுமே நாட்டின் இரு எதிரிகள்’ என்று பேராசிரியர் அருணன் அவர்கள் துல்லியமாக கருத்து தெரிவித்திருக்கிறார் என்று கலி. பூங்குன்றன் கூறியுள்ளார்.

அருணன் போன்ற மார்க்சிய ஆய்வாளர்கள் உண்மையை உரத்துச் சொல்ல ஒருபோதும் தயங்கியதில்லை. இந்திய சமூகத்தில் சாதியத்தின் தாக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவாக உணர்ந்து அது குறித்து தனது கட்சி திட்டத்திலேயே குறிப்பிட்டுள்ளது. மேலும் வர்க்கப் போராட்டத்தையும் சமூகநீதிக்கான போராட்டத்தையும் இணைந்து நடத்த வேண்டும் என்றும் கட்சி கூறுகிறது. நீதிக்கட்சியின் சாதனைகள் குறித்துகலி. பூங்குன்றன் வரிந்து வரிந்து எழுதியுள்ளார். நீதிக்கட்சி குறித்து அருணனின் கணிப்பை கலி. பூங்குன்றனின் கனிவான பார்வைக்கு முன் வைக்கிறோம். ‘நீதிக்கட்சி என்பது பிராமணர் அல்லாத உயர் சாதியினருக்காக அவர்களால் நடத்தப்படுகிற அவர்களது கட்சியாகவே பிறப்பெடுத்தது. அரசியல் அதிகாரத்தையும் உத்யோக செல்வாக்கையும் தங்களுக்காக வென்றெடுப்பதே அவர்களது குறிக்கோள். இப்படி ஒரு குறுகிய நோக்கத்துடன் துவக்கப்பட்டிருந்ததால், இவர்கள் இயல்பாகவே ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சிக்கு அனுசரணை யாகவே நடந்து கொண்டார்கள். தங்கள் கையில் அரசியல் அதிகாரம் வரும் வரைதேசத்தின் சுதந்திர லட்சியத்தையே ஒத் திப்போடலாம் என்றார்கள்’ (தமிழகத்தில் சமூக சீர்திருத்தம்-இரு நூற்றாண்டு வரலாறு). இந்த நூலில் நீதிக்கட்சி முன் வைத்த வகுப்பு வாரிய பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கையில் ஒரு ஜனநாயகத் தன்மை இருந்தது என்பதையும் அருணன் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் – இரு நூற்றாண்டு வரலாறு என்ற நூலை திமுக தலைவர் கருணாநிதிதான் வெளியிட்டார்.

ஆனால் அடுத்த நாளே மதவெறி பாஜகவின் பக்கம் திமுகவின் கனிவான பார்வைசென்றது என்பதும், அதிமுகவை தொடர்ந்து திமுகவும் பாஜகவிடம் பாசம் காட்ட தொடங்கியது என்பதும் கடந்த காலகசப்பான வரலாறு. இது குறித்து நாம் கூறுவதைவிட திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறுவது பொருத்தமாக இருக்கும். ‘அதிமுக ,பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்ததற்கு அதி முகவிற்கு பெரியார், அண்ணா பெயரை உச்சரிப்பதற்கு எந்தத் தகுதியும் இல்லை என்று சொன்ன திராவிட முன்னேற்றக் கழகத்தினரே, நீங்கள் என்ன ஆனீர்கள்?, நீங்கள் கொள்கை உள்ளத்தோடு நின்றிருந்தால் எந்தப் பக்கத்திலும் அந்த பிஜேபிக்கு தமிழ்நாட்டிலே கால் ஊன்ற இடமே கிடைத்திருக்காது. ஆனால் என்னசெய்தீர்கள்? இதைவிட வேறு நல்ல வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்தீர் கள், நீங்கள் உங்கள் கட்சியை கூட்டவில்லை. உங்களுடைய பொதுக் குழுவை கூட்டவில்லை. ஜனநாயகம் என்று வாய் கிழியபேசிக் கொண்டிருக்கின்ற நீங்கள் முடி வெடுத்துவிட்டு, அந்த முடிவுக்கு ஒரு ஒப்புதலைப் பெறத்தான் நினைத்தீர்களே தவிர, திமுக தோழர்களுடைய எண்ணங் களை, முடிவுகளைக் கூட நீங்கள் கேட்கத்தயாராக இல்லை’ (எனது மரண சாசனம்- கி. வீரமணி, தி.க. வெளியீடு). திமுக இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது என்ற சி. சுப்பிரமணியத்தின் நற்சான்றிதழ் கையில் இருந்தபோதும், குஜராத்தில் மிகக் கொடூரமான முறையில் சிறுபான்மை முஸ்லிம் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட போது ‘அது வேறு மாநில பிரச்சனை’ என்று கண்ணை மூடிக் கொள்ளவும் முடிந்தது என்பது தான் வேதனை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை நீதிக்கட்சி ஆதரித்ததால் மக்களிடம் செல்வாக்கை இழந்து அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்வி பள்ளத்தாக்கை நோக்கி பயணம் செய்தது.

இந்த நிலையில் தான் சமூக நீதிக்காக காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து போராடி சலித்துப் போன பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக்கப்பட்டார். அதற்கு முன்பு பெண்களின் விவாகரத்து உரிமையை ஆதரித்து செங்கல்பட்டு மாநாட்டிலேயே தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால் நீதிக்கட்சியின் ஆங்கில ஏடான ‘ஜஸ்டிஸ்’ ஏடு அதை விமர்சித்தது. பெரியார் சொன்னார் ‘இந்த விவாகரத்து தீர்மானத்தை வைதீக பத்திரிகைகள் தான் கண்டித்தன என்றால் நமது “ஜனநாயக” தினசரியான ஜஸ்டிஸ் பத்திரிகை யும் கண்டித்ததும்தான் நமக்கு விளங்க வில்லை’ இப்படி பெரியாரால் கூட விளங்கிக் கொள்ள முடியாத பல விசயங்கள் நீதிக்கட்சிக்குள் இருந்தன. வேலைத்திட்டம் ஒன்றை நீதிக் கட்சிக்கு அனுப்பி வைத்து அதை அவர்கள் ஏற்ற பிறகு தான் அந்தக் கட்சியின் தலைவரானார் பெரியார். 1944 இல் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சி என்ற பெயரை திராவிடர் கழகம் என பெயர்மாற்றம் செய்யும் தீர்மானத்தை பெரியார்முன்னிலையில் அண்ணா முன்மொழிந்தார். நீதிக்கட்சி சீமான்கள், கோமான்களின் கட்சியாக அறியப்படுவதாலும், பிரிட்டிஷாரை ஆதரிப்பதால் நற்பெயருக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறித்தான் பெயர் மாற்றம் அவசியமாகிறது என்றார் அண்ணா. நீதிக்கட்சியின் காலத்தில் நிகழ்ந்த பல்வேறு சமூக சீர்திருத்த, சமூக நீதி நடவடிக்கைகளை கம்யூனிஸ்ட்டுகள் அங்கீகரிக்கின்றனர். ஆனால் அந்தக் கட்சியின் சமூக, பொருளாதார உள்ளடக்கம் குறித்தும் வரலாற்று நோக்கில் ஆய்வு செய்கிற போது ஆத்திரப்படுவதால் பலனில்லை. ஒரு ஆதி திராவிடரை முதன் முதலாக மந்திரியாக்கிய பெருமை நீதிக் கட்சியையே சாரும் என்று பெருமை கொள்கிறார் கலி. பூங்குன்றன் உண்மைதான். 1967 முதல் திராவிடக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோதும் சட்டசபை துணை சபாநாயகர், ஆதி திராவிடர் நலத்துறை ஆகியவற்றை தாண்டி முக்கிய துறைகளுக்குள் பெரும்பாலும் அவர்கள் நுழைய முடிய வில்லை என்பதும் உண்மையல்லவா.திராவிடர் கழகமும் திமுகவும் தலித்துகளுக்காக வரிந்து கட்டிக் கொண்டு பேசியது என்பது ஆ. ராசா அலைவரிசை கற்றை ஊழலில் சிக்கிய போதும், நீதிபதி தினகரன் ‘தலித்’ மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து சிக்கலில் சிக்கிய போதும் தான். சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பொற்பதக்கம் அளித்தது திமுக ஆட்சிதான் என்கிறார் கலி. பூங்குன்றன் உண்மை. இன்றைக்கு தமிழகத்தில் சாதி மறுப்புக் காதல் திருமணம் செய்து கொண்டதற்காக 60 க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து திமுக ஒரு இடத்திலாவது ஆர்ப்பாட்டம் நடத்தியது உண்டா?

அந்தக் காலத்தில் ராஜசூய யாகத்திற்கு முன்பு வலம் வரும் அசுவமேத யாக குதிரையைப் போல, சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி ‘நமக்குநாமே’ பயணம் மேற்கொண்டுள்ள திமுகவின் தளபதி மு.க. ஸ்டாலின் சாதி ஆணவக்கொலை குறித்து எங்கேயாவது பேசியது உண்டா? ‘மாநிலக் கட்சிகள் மாநில முதலாளித்துவ நலனை பிரதிநிதித்துவப் படுத்துபவை . உலக மய சூழலில் இந்தக் கட்சிகள் நவீன தாராளமய கொள்கைக்கு எதிராக உறுதியான நிலை எடுப்பதில்லை. மாநிலங்களில் அரசமைத்து அவ்வப்போது மத்திய அரசில் பங்குபெற்று பிரதான மாநிலக் கட்சிகளுக்கு- பெரும் முதலாளித்துவ கட்சிகளான காங்கிரஸ் பாஜகவால் அமலாக்கப்படும் நவீன தாராளமயக் கொள்கைகளுடன் எந்த முரண்பாடும் இல்லை’ என்று பிரகாஷ் காரத் குறிப்பிட்டுள்ளார். ஒரு காலத்தில் அண்ணா ‘பணத்தோட் டம்’ என்ற நூலை எழுதினார். அதில் வட இந்திய முதலாளிகள் தென்னிந்தியாவை குறிப்பாக தமிழகத்தை கொள்ளையடிப்பதாக எழுதியிருந்தார். கால ஓட்டத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான மத்திய கூட்டணி அரசுகளில் திமுக மாறி மாறி பங்கேற்றது. அப்போது திமுக தலைவர் கலைஞர் ‘வடக்கு வழங்குகிறது-தெற்கு தேறுகிறது’ என்றார். பணத் தோட்டம் , பணத்தேட்டமாக மாறி பல்வேறு ஊழல் வழக்குகளில் கழகத்தை சிக்க வைத்தது. சிங்கூரில் என்ன நடந்தது என்று கேள்வி எழுப்புகிறார் கலி.பூங்குன்றன். சிங்கூர் , நந்திக் கிராமம் பிரச்சனைகளை கையாண்டதில் தவறு ஏற்பட்டதை பகிரங்கமாக ஒத்துக் கொண்டது கட்சி. ஆனால் இத்தகைய அணுகுமுறை திமுகவிடம் உண்டா?

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தின் போது திமுக ஆட்சியில் இருந்தது. போராடிய ஒரே குற்றத்திற்காக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தொழிலாளர்களின் பிணங்கள் தாமிரபரணி ஆற்றில் மிதக்க விடப்பட்டன. துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது அவரைமாற்றினால் அவரது சாதியைச் சேர்ந்தவர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்றாரே அன்றைய முதல்வர் கலைஞர். அது என்ன சமூக நீதி அணுகுமுறை? முதலாளித்துவ கட்சியா? சோசலிச கட்சியா? என்று முத்திரை குத்தும் அதிகாரம் கம்யூனிஸ்ட்டுகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளதா என்று கேட்கிறார் கலி. பூங்குன்றன். அதிமுகவுடன் அனு சரணையாக இருந்தால் அந்தக் கட்சி சமூகநீதி காத்த கட்சி, திமுகவுடன் அனுசரணையாக இருந்தால் அந்தக் கட்சி சமூக நீதி காத்த கட்சி என்று அக்மார்க் முத்திரை குத்தும் அங்கீகாரத்தை வழங்கும் அதிகாரம் உங்களிடம்தான் உள்ளதா? எந்தவொரு கட்சியையும் முத்திரை குத்த வேண்டிய அவசியமில்லை. அந்தக் கட்சி பின்பற்றும் அணுகுமுறைதான் அளவுகோல். அந்த வகையில் திமுகவை ஆதரித்த காலத்திலும் அந்தக் கட்சி சோசலிச கட்சி என்று அங்கீகரிக்கவில்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. மதம், கடவுள் நம்பிக்கை போன்ற விசயங்களில் திராவிடர் கழகத்தின் அணுகு முறை அல்ல, மார்க்சிய அணுகுமுறை. மதம் ஒரு அபின் என்று கூறிய மாமேதை மார்க்ஸ் அது இதயமில்லாத உலகத்தின் இதயமாக இருக்கிறது என்றும், ஒடுக்கப் பட்டவர்களின் பெரு மூச்சாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கட்சியில் சேரத் தடையில்லை. ஆனால் வரலாற்றுப் பொது முதல்வாதத்தை கற்றறியும்போது கடவுள் காணாமல் போய் விடுவார். இயங்கியல் அடிப் படையிலான அணுகுமுறைதான் மார்க்சிய நாத்திகம். அது உறுதியானது.அதிமுக ஆட்சியில் மத மாற்ற தடைச்சட்டம் கொண்டு வரப்பட்ட போது. இது தலித்துகளுக்கும், சிறுபான்மை யினருக்கும் எதிரானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக எதிர்த்தது. ஆனால் மதங்களையும் , கடவுள்களையும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு மதமாற்ற தடைச்சட்டத்தை வரவேற்பதில் தயக்கம் இல்லை என்றது திராவிடர் கழகம். அதுபோல ஆடு, கோழி பலியிட தடைச்சட்டம் கொண்டு வரப்பட்ட போதும் அதையும் ஆதரித்தது திராவிடர் கழகம். இதில் இருக்கிற வர்ணாசிரம அரசியலை பிரித்துப் பார்க்க முடியவில்லைஅன்று திராவிடர் கழகத்தால். இதன் ஒரு பகுதிதான் இன்றைய பாஜகவின் மாட்டிறைச்சி அரசியல். அதை திராவிடர் கழகமும் எதிர்த்து நிற்பது வரவேற்கத் தக்கது.

அதே நேரத்தில் ‘திராவிட’ என்ற முன் ஒட்டுடன் இயங்கும் பல்வேறு கட்சிகள் (திராவிடர் கழகம் நீங்கலாக) கடவுள் விசயத்தில் எந்த அளவுக்கு தடுமாறி, தடம் மாறி சென்றுள்ளன என்பதை தமிழகம் அறியும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அஞ்சா நெஞ்சரின் பெயர் சூட்டப்பட்டவர் நரசிங்கப் பெருமாள் கோவிலில் உள்ள அனுமார் சன்னதி முன்பிருந்துதான் பிரச்சாரத்தை ‘பகுத்தறிவுடன்’ துவக்கினார். இப்போது நமக்கு நாமே பயணத்தின் ஒரு பகுதியாக ஆலய தரிசனமும் இடம்பெற்றுள்ளது என்பதும் ஊடகங்களில் உலா வந்து கொண்டுதான் இருக்கிறது.குமரி முனையிலிருந்து ‘விடியட்டும், முடியட்டும்’ பரப்புரை துவங்குகிற போது சிறுபான்மை மதத் தலைவர்களை மட்டுமின்றி, ஆர்எஸ்எஸ் சார்பு மதத்தலை வரையும் தளபதி சந்தித்ததாகவும், இந்து மதத்திற்கு எதிராக பேசவேண்டாம் என அவர் அறிவுறுத்தியதாகவும், அதற்கு இவர் இப்போது அப்படியெல்லாம் இல்லையே எங்கள் தொலைக்காட்சியிலேயே ‘ராமானுஜர்’ வந்து கொண்டிருக்கிறாரே என்று எடுத்தியம்பியதாகவும் ஒரு பெட்டிச் செய்தி கூறுகிறது. காஞ்சி சங்கராச்சாரியார், ஜெயேந்திரர் கைது செய்யப்பட்ட போது அவர் நடத்தப்பட்ட விதம் தமக்கு வருத்தம் அளிப்பதாக சீத்தாராம் யெச்சூரி கூறிய தாக கலி.பூங்குன்றன் கூறியுள்ளார்.

இந்த செய்தி வந்த அடுத்த நாளே இவ்வாறு தாம்கூறவில்லை என யெச்சூரி மறுத்திருந்தார். அதுவும் ஏடுகளில் வந்தது. முதல் நாள் வந்த செய்தியை துண்டித்து கலி.பூங் குன்றன் வைத்திருக்கிறார். நல்லது. அடுத்தநாள் பேப்பரில் வந்த செய்தியை வெட்டித் தருபவர் விடுமுறையில் போய் விட்டார் போலிருக்கிறது.ஜெயேந்திரர் அதிமுக ஆட்சியில் கைது செய்யப்பட்டார். அடுத்து திமுக ஆட்சிவந்தபோது அந்த வழக்கு நடந்து கொண்டிருந்தது. அப்போது கும்பகோணத்தில் ஜெயேந்திரரை அன்றைய அமைச்சர் கோசிமணி சந்தித்தது பகுத்தறிவு ஆராய்ச்சிக் காக என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். சங்கரராமன் கொலை வழக்கு தொடர்ச்சியாக நீர்த்துப் போகச் செய்யப் பட்டதை இதனுடன் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை. தமிழுக்கு செம்மொழி தகுதி கொண்டு வந்தது திராவிடர் இயக்கமான திமுக அல்ல வா? என்று கேட்கிறார் கலி.பூங்குன்றன். இடதுசாரிகளின் ஆதரவுடன் செயல் பட்ட ஐமுகூ ஆட்சியில்தான் இது சாத்திய மானது. பாஜக கூட்டணியில் திமுக இருந்தபோது முடியவில்லை என்பது ஒரு புறம் இருக்க தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் மத்திய ஆட்சி மொழி ஆக்க முடியவில்லையே, தமிழ்நாட்டில் இயங்கும் உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் வர முடியவில்லையே, மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது பணம் கொழிக்கும் துறைகளை கேட்டுப் பெற்றதில் காட்டிய அக்கறையை இதிலும் கொஞ்சம் காட்டியிருக்கலாமே.

மாநில சுயாட்சி குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தமிழகத்திலேயே போட்டு விட்டு போன தற்கு பதிலாக, அலைவரிசை ஏலத்தில் காட்டிய ஆர்வத்தில் கொஞ்சம் இதிலும் காட்டியிருக்கலாமே.திமுகவுடன் தோளோடு தோள் நின்று பணியாற்றினால் மதவெறி சக்திகள் மருண்டு ஓடுமே என்று ‘விடுதலை’ ஆலோசனை வழங்குகிறது. பல்லடத்தில் நடைபெற்ற மதிமுக மாநாட்டில் ஏனைய திராவிடர் கழக தோழர்களோடு தோளோடு தோள் சேர்ந்து படத்திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தால் மதவெறி சக்திகள் மருண்டிருக்கும் அல்லவா? ஒரு தவறு செய்துவிட்டு பிறகு அதைதவறு என்று ஒப்புக் கொள்வது இடதுசாரிகளுக்கு கை வந்த கலை என்கிறார் கலி.பூங்குன்றன்.

நீதிக்கட்சி காலத்தில் நிகழ்ந்த தவறுகளைக் கூட ஒப்புக் கொள்ளாமல் நியாயப்படுத்துவதுதான் பகுத்தறிவு கலைபோலும். ‘அய்யா நினைத்ததை நீங்கள் (ஜெயலலிதா) செய்யும் போது பெரியார் தொண்டர்களாகிய நாங்கள் பாராட்டுகிறோம். இதில் என்ன வியப்பு? உங்களுக்கு எதிர்ப்பு ஏற்படுமானால் கருப்புச் சட்டை படை, தற்கொலை பட்டாளம், கருப்பு மெழுகுவர்த்தி தங்களை அழித்துக் கொண்டு சமுதாயத்திற்கு ஒளி கொடுப்பவர்கள் என்றென்றைக்கும் அவற்றை முறியடித்து ஆட்சிக்கு உறுதுணையாக இருப்போம் ’(விடுதலை 14.3.1994) இவ்வாறு அதிமுகவை ஆதரித்து முழங்கினார் கி. வீரமணி. இன்றைக்குஅதிமுக ஒரு பஜனை மடமாகவே மாற்றப் பட்டுவிட்டது. பூஜை, புனஸ்காரங்கள் தூள் பறக்கின்றன. கோவில் வழியாக கோட்டை நோக்கி செல்வதே நோக்கம் என்றாகி விட்டது. இந்தத் தவறுக்கு கருப்பு மெழுகுவர்த்திகள் வருத்தப்படுவார்களா? அல்லது மாட்டார்களா? என்று தெரியவில்லை. எதிரிகள் யார், தோழர்கள் யார் என்பதை மார்க்சிஸ்ட்டுகள் புரிந்து கொள்ளவில்லை என்கிறார் கலி.பூங்குன்றன். தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நான் தான் வளராமல் பார்த்துக் கொண்டேன் என்று சொன்ன நண்பர்கள் யார் என்பதை யும் மார்க்சிஸ்ட்டுகள் அறிந்துதான் வைத்திருக்கிறார்கள். மதவெறியும், நவீன தாராளமயமாக்கலும்தான் முதன்மையான எதிரிகள் என்ற தெளிவு மார்க்சிஸ்ட்டுகளுக்கு உண்டு. இந்தச் சூழலில் ரசம் போன கண்ணாடியில் முகம் பார்க்க முடியாது.

Leave a Reply

You must be logged in to post a comment.