( இந்து குழுமத்தின் தலைவர் என்.ராம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் சுருக்கம் )

கேள்வி:-

காங்கிரஸ் நாட்டு விடுத லைக்கு பாடுபட்டபோது இதழியல் துறையில் உங்கள் குடும்பம் அதற்கு தனது பங்களிப்பை கொடுத்தது. ஆனால் நீங்கள அதிலிருந்து விலகி மார்க்சியம் நோக்கி நகர்வதை பார்க்க முடிந்தது. எது உங்களை மார்க்சியத்தை நோக்கி அப்படி ஈர்த்தது?

என். ராம்:-

சென்னை பிரசிடெண்ட்சி கல்லூரியில் எம். ஏ. முடித்து பிறகு அமெரிக்காவில் கொலம்பியா பல்கலையில் இதழியல்துறை கல்வியை 1968 இல் முடித்தேன். 1967- 1968களில் எனக்கு முற்போக்கான இடதுசாரி அரசியலில் செல்லலாம் என்ற வலிமையான உந்துதல் ஏற்பட்டது. அப்போது நேருதான் எனக்கு பெரிய `ஹீரோ. காங்கிரஸ்கட்சியிலேயே அவர் முற்போக்காக தென்பட்டார். அவருக்கு கடவுள் நம்பிக்கை கிடை யாது. எனக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது.அணி சேரா கொள்கை, மதச்சார்பின்மை. ஆகியவைகளால் அவர் என்னை அப்போது பெரிதும் கவர்ந்தார். என்றாலும் அவரது வரம்பு பின்னர் எனக்கு தெரியவந்தது. இந்திய சீன உறவில் அவரது கடுமையான தவறுகளை கண்ட பிறகு எனது எண்ணம் மாறியது. அமெரிக்காவில் இடதுசாரி அரசியல் என்னைக் கவர்ந்தது.

குறிப்பாக வியட்நாம் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதற்கு எதிரான அமெரிக்க மக்களது எழுச்சி இயக்கம் மிகவும் சக்தியாக இருந்தது. அடுத்துஆப்பிரிக்க- அமெரிக்க கறுப்பின மக் களது இன சமத்துவ போராட்டம். பல இடங்களில் வெள்ளை அமெரிக்கர் களுக்கு பக்கத்தில் கறுப்பின மக்கள் சமமாக அமர முடியாது. அமெரிக்காவிலேயே அப்படி இன ஒதுக்கல் இருந்ததென்றால் இந்தியாவில் தீண்டாமை ஜாதிக் கொடுமை எப்படியிருக்கும். இவைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. நாம் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் வந்தது. இது ஆரம்பம்தான். பின்னர் வாசிப்பு இருந்தது. உங்களை கவர்ந்த புத்தகங்கள் எவை எதை நீங்கள் பரிந்துரைக்கிறீர்கள் என்று என்னை ஒரு ஆங்கில இதழின் பேட்டியின்போது கேட்டார்கள். ஜான் ரீட் என்ற அமெரிக்க பத்திரிகையாளர் எழுதிய ‘உலகை உலுக்கிய பத்து நாட்கள்’ என்ற பிரபலமான நூல்.

அதற்கு பின்னர் லெனின் எழுதிய ஆழமான புத்தகம் அரசும் புரட்சியும் மற்றொன்று ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற நூல். உலகமொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டபோதுதான் உலகமக்களுக்கு புரிந்தது. எட்கர்ஸ்னோஅமெரிக்க முற்போக்கு பத்திரிகையாளர். இவர் மாசேதுங்கை பேட்டிகண்டவர். அவரால் சீனத்தைப் பற்றி 1937 இல் எழுதப்பட்ட நூல்தான் ‘சீனத்தின் மீது சிகப்பு நட்சத்திரம்’.இந்த நான்கு நூல்கள்தான் என்னை மிகவும் கவர்ந்தவை என்று அந்த பேட்டியில் சொன்னேன். அதே போல பகத்சிங் எழுதிய அரசும் புரட்சியும் என்று சக்திச் செறிவுள்ள புத்தகம். இவைகள் எனக்குள் புதிய பார்வையை கொடுத்தன. இந்தியாவந்தவுடன் தி இந்துவில் இணைந்தேன். அதே வேளையில் ரேடிக்கல் ரெவ்யூ என்ற பத்திரிகையை நடத்தினோம்.

நல்ல கட்டுரைகள், புலனாய்வு கட்டுரைகளும் எழுதி னோம். இதழியலில்எனக்கு ஆர்வம் இருந்தது. தன்னுரிமையாக தற்சார்பாக இருக்க வேண்டும். சமூக பொறுப்புணர்ச்சி தேவை என்பதால் அதில்ஆர்வம் இருந்தது. அரசியலுக்கு அப்பாற்பட்டு இதழியல் இருக்க முடியாது என பின்னர் புரிந்தது. முன்பெல்லாம் இதழியல் நடுநிலையாக இருக்க வேண்டும் என்பார்கள். இந்தப்பக்கம் அந்தப்பக்கம் போகக்கூடாது. செய்தியா ளர் என்றால் பாரபட்சம் இன்றி செய்தியை மட்டும் கொடுக்க வேண்டும் என்பார்கள். இதை போலி நடுநிலை என கூறலாம். எல்லோருக்கும் தனிப்பட்ட விருப்பம் சார்பு உண்டு. சில செய்தியாக்கம் ஓரளவிற்கு நிகழ்ச்சிகள் சார்ந்ததாக இருக்கும். இதில் செய்திகள் என்ற வடிவத்தில் தனது சொந்தக் கருத்தை இதழியல் கருத்தாக கொடுப்பது கூடாது.

கேள்வி:-

வெளிநாட்டு அனுபவங் களுடன் இந்திய மாணவர் சங்கத்தில் துடிப் புடன் இணைந்தீர்கள். இந்துகுழுமத்தில் ஊழியர்கள் பிரச்சனை வந்தபோது நீங்கள் ஊழியர்கள் பக்கம்தான் நின்றீர்கள். குடும்பத்தில் இதை எப்படி பார்த்தார்கள். எப்படி எடுத்துக்கொண்டார்கள்?.

என்.ராம்:-

நான் தொழிலாளர்களுடன் தான் நின்றேன். சில பிரச்சனைகள் வந்தன. அப்போது நான் இந்துவிலிருந்து நானாகவே வெளியேறினேன். அதற்பு பிறகு அந்தபிரச்சனைகள் தீர்க்கப்பட்டன. பின்னர் 1977இல் நான் முழுநேரமாக மீண்டும் இந்துவிற்குள் வந்தேன். கேள்வி: இந்து குழுமத்திற்கென ஒரு வரலாறு உள்ளது. பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலேயருடனான அனுபவத்துடன் தி இந்து பயணித்திருந்தது. நீங்கள் இதழிய லாளராக இந்துவிற்குள் வந்தபோது சமகாலத்தைய பிரச்சனைகளுக்கேற்ப இந்து நாளிதழின் பயணத்தில் மாற்றம் செய்ய முடிந்ததா? என்.ராம்: அப்படி நான் உரிமை கோர முடியாது. ஆனால் பல கிளர்ச்சியூட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நான் நிறைய எழுதிக்கொண்டிருந்தேன்.

எனது பங்களிப்பில் குறிப்பாக புலனாய்வு இதழியல் துறையில் பல துறைகளைப் பற்றி எழுதியிருந்தேன். பின்னர் நான் ஆசிரியரான போது சில மாற்றங்களை செய்தோம். 1878இல் இந்து குடும்பம் மட்டுமல்ல, அதற்கு முன்பு சுப்பிரமணிய ஐயர் அவரது நண்பர்கள் என அதற்கொரு சரித்திரம் உண்டு. மகாத்மா காந்திஅந்தகாலக்கட்டத்தில் தான் தென்னாப்பிரிக்காவிலிருந்து ‘இந்து’ வில் எழுதத்தொடங்கியிருந்தார். 1905ஆம் ஆண்டிற்கு பிறகு வந்த நீண்ட காலக்கட்டத்தில் தனிப்பட்ட ஒருவர் மாற்றத்தை செய்யமுடியுமா என்பது கேள்விதான். இருந்தாலும் பல பத்தாண்டுகள் சுறுசுறுப்பாக நிறைய தலையங்கங்கள் எழுதிக் கொண்டிருந்தேன்.ரூபாயை மதிப்பிறக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட ஐஎம்எப் நிபந்தனைகள் அடங்கிய1981 ஆம் ஆண்டின் ஆவணத்தைகொண்டு வந்தோம். அதே ஆண்டுதான் தாராபூர் அணு மின் நிலையத்திற்கான எரிபொருள் தருவதை அமெரிக்கா நிறுத்திக் கொண்டது. 1987-லிருந்து 1991 வரை போபோர்ஸ் விசாரணை. பின்னர் பிரண்ட்லைன் ஆரம்பித்தோம். எந்த அளவிற்குமாற்றம் ஏற்பட்டது. அந்த மாற்றங்கள் நீடிக் குமா என்று என்னால் சொல்லமுடியாது. இருந்தாலும் நான் முயற்சித்தேன்.

கேள்வி:-

நீங்கள் மார்க்சியம் பயின்று உங்களுக்கென்று ஒருஅரசியல் பார்வை இருக்கும்போது கொள்கை சார்ந்து இருப்பதற்கான வாய்ப்பில்லை என்ற நிலை உருவானபோது உங்களை ஒரு இதழியலாளராக எப்படி தயார் செய்து கொண்டீர்கள்.

என்.ராம்:-

எந்த இடத்தில் எதை எப்படி எந்த மொழியில் எழுதவேண்டும். எதை தவிர்க்கவேண்டும் என்ற பார்வை இருக்கவேண்டும். உங்களுக்கு பிடிக்காத ஒரு வரை பேட்டி காணவேண்டுமென்றாலும் அவர் சொல்வதை அப்படியே எழுத வேண்டும். அதில் தவறு ஏற்பட்டால் பின்பு அதில் நியாயமில்லை என்று தெரியவந்தால் அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இவைகள் ஒரு பத்திரிகையாள னுக்கு இருக்கவேண்டிய நேர்மையாகும்.

கேள்வி:-

சுதந்திர இந்தியாவில் நவீன அரசுகள் கருத்துச் சுதந்திரத்திற்கு எந்த அளவிற்கு இடமளிக்கிறார்கள்.

என்.ராம்:-

பிரிட்டிஷ் இந்தியாவில் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக பல சட்டங்கள் இருந்தன. அபராதம், பத்திரிகையை தடை செய்வது, சிறைதண்டனை அளிக்கும் சட்டங்கள் மற்றும் நிர்வாக ஆணைகள் இருந்தன. அதை எதிர்த்த போராட்டத்தில்தான் இந்து உள்ளிட்ட இந்திய பத்திரிகைகளுக்கு பலம் கிடைத்தது. ஆனாலும் பல கருத்துக்களை எழுதக்கூடிய இடைவெளியும் அப்போது இருந்தது.  இன்று அது முழுமையாக மாறிப்போய்விட்டது. நமது அரசியல் நிர்ணய சட்டத்திலேயே பலவீனம் உண்டு. சாசன விதி 19-இல் நியாயமான கட்டுப்பாடுகள் என்ற தலைப்பில் சட்டத்தின் மூலம் பல பத்திரிகைகளை வரையறை- கட்டுப்பாடு செய்யலாம்.

குற்றவியல்அவதூறு வழக்கிற்கான சட்டம். பாதிக்கப்பட்ட நீதிபதிகளே தண்டிக்க வகைசெய்யும் நீதிமன்ற அவமதிப்பு சட்டம். மூன்றாவதாக அரசின் சட்டமியற்றும் சிறப்புரிமை. இந்த மூன்றுமே ஏற்றுக்கொள்ளும் வகையில் நியாயமாக இல்லை என நான் கருதுகிறேன். இந்தச் சட்டங்களை வைத்து மட்டுமே இவைகளை கணிக்க முடியாது.எனது மத உணர்வை மொழி உணர்வைகொச்சைப்படுத்துகிறது என யார் வேண்டு மானாலும் கூறலாம். பல திரைப் படங்களை தடைசெய்ய வேண்டும் என கேட்பதையும் இதற்கு உதாரணமாக சொல்லலாம். தமிழ்நாட்டில் இது கொஞ்சம் பரவாயில்லை. சமீபத்தில் பெருமாள்முருகனின் நூலை படித்துப் பார்த்தேன்.

அதில் தவறாக ஏதும் இல்லை. அவர் ஒருநல்ல ஆக்க சிந்தனையுள்ள எழுத்தா ளர்தான். அவரை ஆதரித்து நாங்கள் இயக்கம் நடத்தினோம். ஆனால் பெருமாள் முருகன் மறைந்து விட்டான் என்று தனது முகநூல் பக்கத்தில் போட்டு எழுதாமல் இருக்கிறார். அவர் மீண்டும் எழுதுவார்என கருதுகிறேன். நாம் ஜனநாயக பாதையில் செல்லவில்லை. சகிப்புத்தன்மையில்லாததை குறிப்பிடவேண்டும். குறிப்பாக இன்று இந்துத்துவா என்னும் போர்வையில் எல்லா எழுத்தாளர்களையும் தாக்கத் துவங்கியுள்ளனர்.

கேள்வி:

1980- 1990களில் நாட்டில் இருதுருவக்கட்சி என்னும் நிலை மாறி மாநில கட்சிகள் எழுச்சி பெற்று ஒரு கூட்டணியுகம் வந்த காலகட்டம். இதைத்தொடர்ந்து வந்த மண்டல் கமிஷன் பரிந்துரைகள், அதற்கு பிறகு பாபர் மசூதி இடிப்பு பின்னர் ராஜீவ்காந்தி படுகொலை, புதிய பொருளாதார கொள்கை. அடுக்கடுக்காக இவைகளை வைத்துதான் நாம் ஒரு புதிய இந்தியாவிற்குள் வந்த மாற்றங்களை அனுமானிக்க முடியும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

என்.ராம்:-

இது ஒரு நல்ல காலக்கட்ட ஆய்வு. இதில் பல பிரச்சனைகளை கொண்டு வரமுடியும். இந்தக் காலக் கட்டத்தில்தான் புதிய பொருளாதார கொள்கைகள் வந்தன. இதற்கு பின்னால் தான் பெரிய அளவில் ஊழல்கள் வந்தன.

கேள்வி:-

இந்தக் காலக் கட்டத்தை ஒருபத்திரிகையாளராக எப்படி கடந்து வந்துள்ளீர்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்?

என்.ராம்:-

மண்டல் கமிஷனுக்கு எதிரான இயக்கத்தை பிற்போக்கான இயக்கமாக அன்றே நான் பார்த்தேன். பிரண்ட்லைனில் நிறைய இதைபற்றி எழுதினோம். சாதிக்கொடுமை இருக்கக்கூடிய ஒரு சமுதாயத்தில் அனைவருக்கும் தனி அடையாளம் கொடுப்பதென்றால் சட்ட ரீதியில் மட்டும் சமத்துவம் போதாது. இதனால் எல்லோரும் சமம் என நடிக்க முடியாது. உண்மையில் அவர்கள் சமுதா யத்தில் அடுத்தகட்ட மேல்நிலைக்கு கொண்டு வரப்படவேண்டும். இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் முன்பே வந்தது.

ஜஸ்டிஸ் கட்சிக் காலத்தில் இருந்து அதற்கு ஒரு பாரம்பரியம் உண்டு. அதில் சிலர் பாதிக்கப்படலாம். கூடுதலாக கேட்கலாம். சிலருக்கு அதிகமாக இருக்கலாம். தகுதியில்லாதவர்கள் கூட அதில் இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் கல்வியில், சமூகத்தில் பின்தங்கியிருந்தவர்களுக்கு நிச்சயமாக அது உதவி செய்தது. பொறியியல் கல்வி தகுதித்தேர்வில் பின்தங்கியவர்களுக்கும் முற்படுத்தப்பட்டவர்களுக்கும் மிகச்சிறிய இடைவெளி உள்ளது. தலித் பிரிவிற்கு இது அதிகமாக இருக்கிறது. எனவே இதில் நாம் இன்னும் செய்ய வேண்டியிருக்கிறது.

இடஒதுக்கீட்டு வாய்ப்புகளில் நியாயமான சமத்துவம் இருக்க வேண்டும். வெறும் விதிமுறைக்குரிய சடங்காக மட்டும் சமத்துவம் இருக்கக்கூடாது. அதற்கு இது போன்ற திட்டம் தேவை. உதவித்தொகை அளிக்க வேண்டும். இடஒதுக்கீடு இருக்க வேண்டும். ஆனால் படேல் பிரிவினருக்கான இடஒதுக்கீடு வேறு விஷயம். ஒன்று கொடு இல்லையென்றால் வேண்டாம். அது இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் இருந்தது. மண்டல் கமிஷன் எதிர்ப்பு ஒரு மோசமான பிற்போக்கான இயக்கம். பல இளைஞர்கள் அதில் தீக்குளித்தார்கள். அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந் தவர்களைதான் நாம் கண்டிக்க வேண்டும். அதை வீரமுள்ள செயலாக சித்தரித்த பத்திரிகையாளர்களையும் சேர்த்து நாம் கண்டிக்க வேண்டும்.

மிகவும் அபாயகர மான சம்பவம் பாபர் மசூதி இடிப்பு. ஒருகாட்டுமிராண்டித்தனமான செயல் அது. இந்தியாவிற்கு வந்துசேர்ந்த மாபெரும் அவமானம். வெறும் மசூதியை மட்டும் அவர்கள் இடிக்கவில்லை. அந்த காலக்கட்டத்தில் நிலவிய வகுப்பு நல்லி ணக்கத்தையும் சுமுக உறவினையும் அது முற்றிலும் நாசப்படுத்தியது. இன்று மதச்சார்பின்மைக்கு எதிராக சவால்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதை நிச்சயம் நாங்கள் எதிர்க்கிறோம். இதற்கு என்னஆதாரம் என்றால் சங்பரிவாரத்திலிருந்து பலபேர் எழுதுகிறார்கள். ட்வீட்டர் போன்றவற்றில் நிறைய வருகிறது. குறிப்பாக‘இந்து’என்பதை முஸ்லிம் என்று மாற்றிக்கொள் என்று எழுதுகிறார்கள். அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள்.

கேள்வி:

புதிய பொருளாதார கொள் கையால் இந்தியாவிற்கு கிடைத்த பலன் என்ன?

என்.ராம்:

பல மாநிலங்களுக்கு ஒருசிலவளர்ச்சி வந்திருந்தாலும் ஒட்டுமொத்த மாக பார்க்கும்போது சாதாரண மக்களுக்கு எந்தப்பலனும் கிடைக்கவில்லை. அவர்களுக்கு சில வருமானம் கூடியிருக்கலாம், ஆனால் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிக மாகியிருக்கிறது. இதுதான் விமர்சனம். நாட்டு பொருளாதாரம் பலமாகவில்லை. மக்களை கையறுநிலையிலிருந்தும் வறுமையிலிருந்தும் வெளிக்கொணர முடிய வில்லை. வேளாண்மை மற்றும் இந்திய கிராமங்களின் நெருக்கடி இரண்டிலும் புதிய பொருளாதார கொள்கை தோல்வியடைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

பேட்டியின் எழுத்தாக்கம்:– ப.தெட்சிணாமூர்த்தி

Leave A Reply

%d bloggers like this: