சென்னை, அக். 5-

லாரிகள் வேலைநிறுத்தம் தொடருவதால் சென்னைக்கு வரவேண்டிய காய்கறி லாரிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால் காய்கறி விலைகள் அதிகரித்துள்ளன:– நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வேலை நிறுத்தம் திங்களன்று (அக்.5) 5–வது நாளாக நீடிக்கிறது. இதனால் நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொருட்களின் வரத்து குறைந்ததால் விலையும் அதிகரித்துள்ளது. பொது மக்களை கடுமையாக பாதிக்கும் இந்த லாரி வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தில்லியில் லாரி உரிமையாளர்களுடன் மத்திய அரசு பேச்சு நடத்துகிறது.

இதில் உடன்பாடு எட்டப்பட்டால் லாரி வேலைநிறுத்தம் திருப்பப்பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் லாரி வேலைநிறுத்தம் காரணமாக கோயம்பேடு மொத்த காய்கறி சந்தைக்கு காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இங்கு மொத்தம் 1900 கடைகள் உள்ளன.தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் இருந்து தினமும் 700 லாரிகளில் காய்கறிகள் கொண்டு வரப்படும். வேலைநிறுத்தம் காரணமாக இந்த லாரிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இன்று 220 லாரிகளில் மட்டுமே மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வந்தது. இதனால் வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ் உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

2 மடங்கு அளவுக்கு விலை உயர்வு காணப்பட்டது. ஞாயிறன்று 35 ரூபாய்க்கு விற்பனையான 1 கிலோ பெரிய வெங்காயம் திங்களன்று ரூ. 55–க்கு விற்கப்பட்டது. தக்காளியின் விலை ரூ.10–ல் இருந்து 25 ஆகவும், கேரட்டின் விலை ரூ.10 ல் இருந்து 35 ஆகவும், பீன்சின் விலை ரூ. 20–லிருந்து 40 ஆகவும், அவரைக்காயின் விலை ரூ.20–ல் இருந்து 40 ஆகவும், உயர்ந்துள்ளது. கிலோ ரூ. 10–க்கு விற்பனையான வெண்டைக்காய் ரூ.30–க்கும், கத்தரிக்காயின் விலை ரூ. 10–ல் இருந்து 25 ஆகவும் உயர்ந்துள்ளது. 12 ரூபாய்க்கு விற்பனையான தேங்காய் ரூ. 25–க்கு விற்பனையாகிறது. லாரி வேலைநிறுத்தத்தினால் காய்கறிகளின் விலை மேலும் உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

கோவில்பட்டியில் கோடிக்கணக்கான ரூபாய் தீப்பெட்டி பண்டல்கள், நூல்கள் தேக்கம்

கோவில்பட்டி, அக். 5-கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தீப்பெட்டித் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகள் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் லாரிகள் வேலைநிறுத்தத்தால் கோவில்பட்டியில் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கமடைந்துள்ளன. மேலும் தீப்பெட்டிகள் தயாரிக்க தேவையான மூலப்பொருள்கள் வரத்தும் தடைபட்டுள்ளது. இதுபோல் கோவில்பட்டி, இராஜபாளையம் உள்பட தென்மாவட்டப் பகுதிகளில் உள்ள நூற்பாலைகளிலும் பெரும்பாலான நூல்கள், துணிகளை வெளியிடங்களுக்கு அனுப்ப முடியவில்லை. நூற்பாலைகளுக்கு தேவையான முக்கிய மூலப்பொருளான பஞ்சு பேல்கள் தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து வருவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கோவில்பட்டி லாரி உரிமையாளர்கள் சங்க பொருளாளர் பால்சாமி கூறும்போது, ‘வெளி மாநிலங்களுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான லாரிகள் ஆங்காங்கே சரக்குகள் ஏற்றப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே இதில் அரசு தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும்’ என்றார். நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பரமசிவம் கூறும் போது, ‘லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக, தீப்பெட்டி தயாரிக்க தேவையான மூலப்பொருள்களின் வரத்து தடைபட்டுள்ளது’ என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.