புதுதில்லி, அக். 5 –

மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்து ஜம்மு – காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை 2 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தடை குறித்து, சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தில் 3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரித்து தீர்ப்பளிக்கவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பசுக்கள் இறைச்சிக்காக கொல்லப்படுவதை தடுத்துநிறுத்த வேண்டும் என்று ஜம்மு – காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பரிமோக் ஷ்ஷேத் என்பவர் பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜம்மு- காஷ்மீரில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடைவிதித்து கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி உத்தரவிட்டனர். மேலும், மாடுகளை இறைச்சிக்காக கொல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இதற்காக மாநிலம் முழுவதிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட ஒருவாரத்தில் ஜம்மு- காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் மற்றொரு பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாடுகளை கொல்வதற்கு தடைவிதிக்கும் சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மாநில அரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. உயர்நீதிமன்றத்தின் இந்த முரண்பட்ட இருவேறு உத்தரவுகளை எதிர்த்து அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான அமர்வின் முன் திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாட்டிறைச்சி விற்பனைக்கு தடைவிதிக்கும் ஜம்மு – காஷ்மீர் உயர்நீதிமன்ற ஆணையை 2 மாத காலம் நிறுத்தி வைக்கவேண்டும், மேலும் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி 3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வை அமைத்து இந்த விவகாரத்துக்கு தீர்வு காண வேண்டும் என்று உத்தர விட்டது.

Leave A Reply

%d bloggers like this: