புதுதில்லி, அக்.5

உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரி கிராமத்தில் இஸ்லாமிய முதியவர் முகமது இக்லக் படுகொலைக்கு காரணமான பாஜக சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சோமை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு திங்களன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரி ஊராட்சிக்குட்பட்ட பிஷாதா கிராமத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சோம், மதவெறியைத் தூண்டும் விதத்தில் பேசியிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் அரசியல் தலைமைக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தாத்ரி கிராமத்தில் கடந்த செப்டம்பர் 27 அன்று இரவு மதவெறிக் கும்பல் ஒன்று முகமது இக்லக் என்ற பெரியவரை முன்கூட்டியே திட்டமிட்டு கொடூரமான முறையில் அடித்து படுகொலை செய்தது. இதற்கு காரணமான சங்கீத் சோம் மீது உரிய சட்டவிதிகளின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.கடந்த 2013ம் ஆண்டு முசாபர் நகர் மாவட்டத்தில் மதவெறிக் கலவரங்களை தூண்டிவிட்டவர் சங்கீத் சோம். அந்த கலவரம் தொடர்பாக மேற்படி கிராமத்தில் பேசிய அவர், சிறுபான்மை மக்கள் மீது `பதிலடி தாக்குதல்’ நடத்த வேண்டும் என்று பேசியிருக்கிறார். அதுமட்டுமல்ல, தாத்ரி கிராமத்தில் முகமது இக்லக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அவர் பகிரங்கமாக நியாயப் படுத்தியிருக்கிறார், மேலும் இந்த படுகொலையில் ஈடுபட்டவர்களை `அப்பாவிகள்’ என்று குறிப்பிட்டுள்ள அவர், கைது செய்யப்பட்ட நபர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். 2013 ல் முசாபர் நகர் மாவட்டத்தில் பாஜக – ஆர்எஸ்எஸ் அமைப்புகளால் கொடூரமான முறையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட மதவெறி வன்முறைகளில் முக்கிய குற்றவாளியான இவர் மீது அந்த சம்பவங்கள் தொடர்பாக பல வழக்குகள் உள்ளன என்பது கவனிக்கத்தக்கது. முசாபர் நகர் உள்ளிட்ட மேற்கு உத்தரப்பிரதேசத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக பல்வேறு இந்துத்வா அமைப்புகள் கொலைவெறியுடன் மதவெறிப் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது. எனவே இத்தகைய நபர்கள் மீது உத்தரப்பிரதேச அரசு கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.