திருவாரூர், அக். 5

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கமாக செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் பொதுக்கூட்டம் திருவாரூரில் திங்களன்று (அக்டோபர் 5 ) மாலை தெற்கு வீதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கூட்டு இயக்கத்தின் தலைவர்களான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் திருவாரூருக்கு வருகை தந்தனர். இந்தத் தலைவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் திங்களன்று காலை 10.30 மணியளவில் திருவாரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:-

தமிழக மக்களின் நலன் காக்க மக்கள் நல கூட்டு இயக்கம் உறுதியோடு செயல்படும். இந்த இயக்கம் குறித்து சிலர் கற்பனையான தகவல்களை கூறிவருகின்றனர். இந்த இயக்கத்தின் செயல்பாட்டையும் இதன் வெற்றியையும் கண்டபிறகு தற்போது எதிர் மறையாக பேசுபவர்கள் என்ன சொல்ல போகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த இயக்கம் திடீரென்று தோன்றவில்லை. இரண்டு மாதங்களாக பல்வேறு விபரங்களை கூடிப் பேசி ஆய்வு செய்து மத்திய- மாநில அரசுகளின் செயல்பாடுகளை பரிசீலித்து அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மலிந்துள்ள ஊழல் அரசியல், கலாச்சார சீர்கேடு போன்ற வற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு மனவேதனையோடு உள்ளனர். இவர்களுக்கு ஒரு மாற்றத்தை தரவேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையோடு ஜூலை 27- ஆம் தேதி இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கம் சிறப்பாக செயல்படுவதற்கு தமிழக மக்களும் ஊடகதுறையினரும் ஒத்துழைப்பு தரவேண்டும்.

ஊழல் எதிர்ப்பு

இந்த இயக்கம் ஊழல் எதிர்ப்பு, மக்கள் நலன், சமூக நலன், சாதி மத பேதமில்லாத சமூகம், தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு இழைத்து வரும் துரோகங்களை எதிர்ப்பது, குறிப்பாக காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் வகையில் செயல்படும் மத்திய அரசை எதிர்ப்பது, மேலும் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு தண்ணீர் பெற்றுத்தருவது, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்று குழு அமைப்பது, கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்டுவதை தடுக்க மத்திய அரசை வலியுறுத்துவது, தமிழகத்தில் சுரண்டப்படும் மணல், கிரானைட் போன்ற இயற்கை வளங்களை பாதுகாப்பது, ஊழலற்ற நிர்வாகத்தைத் தருவது என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் செயல்படுவது என்று எடுத்த முடிவின் அடிப்படையில் கடந்த ஜூலை 27- ஆம் தேதி இந்த இயக்கம் உருவானது. ஆகஸ்ட் 13- ஆம் தேதி ஐந்து மண்டலங்களில் மக்கள் நலன்காக்கும் கோரிக்கைகளுக்காக இயக்கங்கள் நடத்தப்பட்டது. மனித நேய மக்கள் கட்சி என்ன காரணத்தினாலோ தற்போது இந்த இயக்கத்திலிருந்து விலகி இருக்கிறது. இது குறித்து அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். மற்றபடி மக்கள் நல கூட்டியக்கத்தில் தற்போதுள்ள நான்கு கட்சிகள் உறுதியாக செயல்படுவதென முடிவெடுத்து மக்கள் மன்றத்தை சந்திக்கிறோம். இந்த இயக்கத்தில் சேரவிரும்புகிற அரசியல் கட்சிகள் கூட்டு இயக்கத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு இணைவதை வரவேற்கிறோம். மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் நிதானத்தோடும், உறுதியோடும் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறது. இது ஊழல் அரசியல் வாதிகளுக்கு ஒரு பெரிய அடியை கொடுக்கும் என்று ஊழலை எதிர்க்கும் மக்களை நம்பி மிகுந்த நம்பிக்கையோடு களத்தில் இறங்கியுள்ளோம்.  இவ்வாறு அவர் கூறினார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தின் தலைவர்கள் உடனிருந்தனர்.

ஒருங்கிணைப்பாளராக வைகோ

திங்களன்று நடைபெற்ற மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தின் கலந்தாய்வுக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக வைகோ ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த இயக்கத்தின் குறைந்தபட்ச செயல் திட்டத்தை தயாரிக்க மு.செந் தில் அதிபன், வே. ஈசுவரன் (மதிமுக), கே.பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ, பி. சம்பத் (சிபிஎம்), கே.சுப்பராயன், கோ. பழனிசாமி (சிபிஐ), சிந்தனை செல்வன், எஸ்.எஸ். பாலாஜி (விடுதலை சிறுத்தைகள் கட்சி ) ஆகிய எட்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும் 23- ஆம் தேதி சென்னையில் மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்க தலைவர்கள் கூடி 2016- ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அணுகுமுறை குறித்தும் குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை குறித்தும் விவாதித்து இறுதி செய்வார்கள். இறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை நவம்பர் 2-ஆம் தேதி சென்னையில் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து குறைந்தபட்ச செயல்திட்டம் குறித்த விளக்க பொதுக்கூட்டம் நவம்பர் 28- ஆம் தேதி கோயம்புத்தூரில் நடைபெறும்.

Leave a Reply

You must be logged in to post a comment.