திருவனந்தபுரம் :-

கேரளாவில் அடுத்த மாதம் (நவம்பர்) 2, 5 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று கேரள தேர்தல் ஆணையர் சசிதரன் நாயர் அறிவித்துள்ளார். கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் குறித்து கேரள தேர்தல் ஆணையர் சசிதரன் நாயர் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நவம்பர் மாதம் 2 , 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும். நவம்பர் 2-ந் தேதி திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு, காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கும், நவம்பர் 5-ந் தேதி கோட்டயம், பத்தனம் திட்டை, ஆலப்புழை, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய 7 மாவட்டங்களுக்கும் தேர்தல் நடத்தப்படும். நவம்பர் 7- ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் இந்த மாதம் அக்டோபர் 14-ந் தேதி யாகும். 15-ந் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் அக்டோபர் 17-ந் தேதியாகும்.

நோட்டா இல்லை:-

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவிற்கு முற்றிலும் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும். நோட்டா ஓட்டு பதிவு செய்யும் முறை இந்த தேர்தலில் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது. வேட்பாளர்களின் புகைப்படங்களும் இடம்பெறாது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடைமுறை சட்டம் அமலுக்கு வந்ததாக அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், தேர்தல் பிரச்சாரத்திற்கு விளம்பர பலகைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். கேரளாவில் 6 மாநகராட்சிகள், 86 நகராட்சிகள், 14 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 152 பிளாக் பஞ்சாயத்துக்கள் மற்றும் 941 கிராம பஞ்சாயத்துக்களுக்கு தேர்தல் நடத்தப் படுகிறது. 35 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். இதற்காக 21 ஆயிரத்து 871 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தேர்தல் பணியாளர் களுக்கு பணி இடை மாறுதல் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.