சென்னை, அக்.5-

லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு மத்திய அரசு உடனே தீர்வு காண வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் திங்களன்று விடுத்துள்ள செய்தி வருமாறு:- நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்தும், சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்றும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலைநிறுத்தத்திற்கான அறிவிப்பு முன்னதாகவே கொடுக்கப்பட்டுள்ளது.

தவிரவும், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இதற்கு முன்னரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர். பின்னர் மத்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க அது ஒத்திவைக்கப்பட்டது. இந்த வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்பாகவே மத்திய அரசாங்கம் லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்க முடியும். ஆனால், மத்திய அரசு இந்த பிரச்சனையில் எவ்வித அக்கறையுமின்றி இப்போது தான் பேச்சுவார்த்தையை துவக்கி இருக்கிறது. சுங்க வசூல் என்ற பெயரில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்போரையும், சரக்கு வாகனங்களையும் கடுமையாகப் பாதிக்கிறது. இந்த சுமை முழுவதும் வாகன உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தலையிலேயே சுமத்தப்படுகிறது. சில இடங்களில் சுங்கம் வசூலிப்பதற்கான காலம் முடிந்த பிறகும் சுங்கம் வசூலிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் லாரிகளின் வேலைநிறுத்தத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளின் விலை மிகக்கடுமையாக உயர்ந்துள்ளது. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு மத்திய அரசாங்கம் லாரி உரிமையாளர்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்று மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.