திருநெல்வேலி,செப்.30-

மெக்காவிற்கு ஹஜ் புனிதப் பயணம் சென்ற தென்காசியைச் சேர்ந்தவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. நெல்லை மாவட்டம் தென்காசி மவுண்ட்ரோடு பகுதியை சேர்ந்தவர் முகம்மது பாரீஸ் (44). இவர் சவூதிஅரேபியாவில் அல் ஜூபைல் என்ற ஊரில் உள்ள மேடன் பாஸ்பேட் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். அவருடன் அவரது மனைவி தமீம் பாத்திமா (32) மகன்கள் சல்மான் பவாஸ் (11), அப்துல் ரகுமான்(8) ஆகியோரும் இருந்து வந்தனர்.

இவர்கள் 4பேரும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ரியாத் நகரில் உள்ள மேங்களூர் ஹஜ் உம்ரா என்ற நிறுவனத்தின் மூலம் மெக்காவிற்கு புனிதப்பயணம் சென்றனர். அங்கு கல் எறியும் நிகழ்ச்சியில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் 2 குழந்தைகளையும் உடன் சென்றவர்களிடம் விட்டு விட்டு கணவன் – மனைவி இருவரும் மினா பகுதிக்கு சென்றனர். அங்கு விபத்து ஏற்பட்டதற்கு பிறகு இதுவரை அவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. பெற்றோரை காணாமல் 2 குழந்தைகளும் தவித்து கொண்டு உள்ளனர். தென்காசியில் உள்ள உறவினர்களும் மிகுந்த கவலையுடன் உள்ளனர். இத்தனை நாட்கள் ஆனதால் அவர்கள் இறந்திருக்கலாமா? என அஞ்சுகிறார்கள். ஏற்கனவே தென்காசி அரிப்புகார தெருவை சேர்ந்த முகைதீன் பிச்சை என்பவர் இறந்து விட்ட தகவல் உறுதி படுத்தப்பட்டுவிட்டது. இவர்கள் சவூதி அரேபியாவில் இருந்தே மெக்காவிற்கு சென்றதால் தமிழகத்திற்கு தெரிவிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. எனவே இதுகுறித்து உண்மை நிலையை கண்டுபிடிக்க கோரி தமீம் பாத்திமாவின் உறவினர் ஜமால் முகம்மது மற்றும் உறவினர்கள் தென்காசி உதவி ஆட்சியர் அலுவலத்தில் செவ்வாயன்று கோரிக்கை மனு கொடுத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: