நாகர்கோவில்,செப்.30-

இந்திய அரசு நடத்தும் தேசிய திறனறித் தேர்வுக்கு சிகரம் அகாடமி ஆப் எக்சலன்ஸ் வழிகாட்டுதல் மையத்தின் நாகர்கோவில் மற்றும் முளகுமூடு மையங்களில் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமை மத்திய விஞ்ஞான அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தில்லி விஞ்ஞான மைய விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் துவக்கி வைத்தார். அறிவுபூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் புரிந்து கற்றால் சிறந்த மாணவர்களாக உருவாக முடியுமென்றார்.

சிகரம் அமைப்பின் நிறுவனர் மற்றும் இயக்குநராகிய அருட்பணி செபாஸ்டின் தலைமைவகித்தார். தேசிய திறனறித் தேர்வை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளைப்பற்றி விளக்கி கூறினார். தேசிய திறனறித் தேர்வு இந்திய அளவில் அறிவுத்திறன் மிக்க மாணவ, மாணவிகளை கண்டுபிடித்து மாதந்தோறும் கல்வி ஊக்கத்தொகை வழங்கவும் உயர்கல்வியை ஊக்குவிக்கவும் தேசிய திறனறித் தேர்வு ஆண்டுதோறும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவால் நடத்தப்படுகிறது. இந்திய அளவில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படுகிற தேர்வுகளில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததும் சிறப்புத்தரம் வாய்ந்த தேர்வும் இதுவே. அனைத்து கல்வி முறைகளிலும் 10 ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதலாம்.

இத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மேல்நிலை முதலாமாண்டு முதல் முனைவர் பட்டம் வரை கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பயிற்சி தேவை இந்திய அளவில் நடைபெறும் திறனறித்தேர்வாக இருப்பதாலும் மனத்திறன் பகுதி கேள்விகள் இடம் பெறுவதாலும் இத்தேர்வு எழுத சிறப்பு பயிற்சி தேவைப்படுகிறது. 9 மற்றும் 10 ம் வகுப்பு பாடங்களை நுட்பமாக அறிந்துகொள்ள வேண்டும்.மாதிரித் தேர்வுகள் எழுதியும் பழக்கப்படுத்தியிருக்க வேண்டும். நகர்புற மாணவர்களுக்கு மட்டுமே இதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கிராமப்புற மாணவர்களுக்காக இச்சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அனைத்து போட்டி மற்றும் நுழைவுத்தேர்வுகளுக்கும் அடிப்படை பயிற்சிகளை சமூக நோக்கோடு செய்துவரும் சிகரம் மையம் தேசிய திறனறித் தேர்வுக்கு இலவசப் பயிற்சியை ஆண்டுதோறும் நடத்துகிறது. குமரி மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப் பட்டிருக்கிறார்கள். பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கும் வல்லுநர்கள் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஒவ்வொரு நாளும் இரண்டு தேர்வுகளும் இறுதியில் இரண்டு முழு மாதிரித் தேர்வும் நடத்தப்படும். மாணவர்களுக்கு பயிற்சி கையேடும் வழங்கப்படும். என்று பயிற்சி பொறுப்பாளர் சிகரம் மைய டீன் காட்வின் ஜினு கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: