பேராசிரியர் ராஜநாயகம் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் ஒரு கருத்துத் திணிப்பை வெளியிட்டாலும் வெளியிட்டார் தமிழக அரசியல் புகையத் தொடங்கிவிட்டது. அதிலும், குறிப்பாக திமுகவில் புகைகிற புகைச்சலுக்கு அளவேயில்லை. தமிழகத்தில் உள்ள வெறும் 3000 பேரிடம் கருத்துக் கேட்டு இது தான் அடுத்த தேர்தல் முடிவுக்கான சாம்பிள் என்று சொல்லி விட்டார்கள். கடுகை வைத்து பெரும்பூசணியை அளந்து விட்டார். இந்த பேராசிரியர் தமிழகத்தில் 234 தொகுதிகள் உள்ளன. 3000 த்தால் வகுத்துப் பார்த்தால் தொகுதிக்கு 12 பேரிடம் இவர் கருத்துக்கேட்டிருக்கிறார்.

ஒரு தொகுதியில் குறைந்தபட்சம் வாக்காளர் எண்ணிக்கை 2.25 லட்சம். இவ்வளவு பெரிய எண்ணிக்கைக்கு வெறும் 12 பேரிடம் கருத்துக் கேட்டால் என்ன கருத்து கிடைக்கும். ஒரு தொகுதிக்குள்ளேயே ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு கட்சிக்கு செல்வாக்கு உண்டு. இந்த கருத்துக்கணிப்பு பொருந்தாத நிலைமை தான் என்றைக்கும் உண்டு. இந்த லட்சணத்தில் திடீரென இவர் வெளியிட்ட கருத்துத் திணிப்பு சில, பல கட்சிகளிடம் சில, பல சலசலப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது. இவருடைய கருத்துத் திணிப்பின் படி தமிழ் நாட்டில் அதிமுக, திமுக தவிர வேறு கட்சிகளே இல்லாதது போன்று ஒரு சித்திரத்தை உருவாக்க நினைக்கிறார். காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல. அதிமுக வெற்றிபெறும்; முதல்வர் வேட்பாளர் பந்தயத்தில் ஜெயலலிதா முதலிடத்தில் இருக்கிறார் என்ற இவரது கருத்துத்திணிப்பு அதிமுகவிற்கு கசக்கவா செய்யும்? கீறல் விழுந்த கிராமப்போன் போல ஜெயா டிவி அதையே 2 நாட்கள் ஒளிபரப்பி ஓய்ந்துபோனது.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இந்த கருத்துத் திணிப்பு பற்றி தெள்ளத்தெளிவாக மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்தினை வெளிப்படுத்திவிட்டார். இது கருத்துக்கணிப்பல்ல – திணிப்பு. தமிழக மக்கள் மனதிலிருந்து அதிமுக, திமுக தவிர இதர கட்சிகளை ஓரங்கட்டச் செய்யப்படும் ஒரு ஏற்பாடு என்று. அதுதான் உண்மையும் கூட 2007 காலத்தில் தினகரன் பத்திரிகை ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டது. அவ்வளவு தான் தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் 3 அப்பாவி ஊழியர்கள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியது. பொதுவாக கருத்துக்கணிப்புகள் திணிப்புக்களாக இருக்கின்ற காரணத்தினால் பெரும்பாலான சமயத்தில் அவை வெற்றி பெறுவதில்லை. தில்லி சட்டமன்ற தேர்தலில் இவ்வளவு பெரிய வெற்றியை கெஜ்ரிவால் பெறுவார் என்று எந்த கருத்துக்கணிப்பும் சொல்லவில்லை.

மக்கள் வாக்களித்தார்கள்; வென்றார். தில்லியில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கூட பெறமுடியாத அதே கெஜ்ரிவால் பஞ்சாபில் 4 இடங்களில் வெற்றிபெற்றார். இதுவும் எந்த கருத்துக்கணிப்புக்கும் உடன்படாத ஒன்று. ஏன் தமிழகத்தில் இதுமாதிரி பல தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியை அளித்திருக்கிறது? பர்கூரில் ஜெயலலிதா தோற்பார் என்று எந்த கருத்துக்கணிப்பு சொன்னது? 1962 தேர்தலில் அண்ணா, ஒரு பேருந்துமுதலாளி நடேச முதலியாரிடம் தோற்றுப்போனார். இந்த தேர்தல் முடிவு தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 1967 தேர்தலில் காமராஜர் மாணவர் தலைவர் சீனிவாசனிடம் தோற்றுப்போனார். 1977ல் இந்திராகாந்தியின் தோல்வி எந்தக் கருத்துக்கணிப்புக்கும் உட்படாதது.

எம்ஜிஆர் நின்றால் மாநாடு, நடந்தால் பேரணி என்பார்கள். அவரது கட்சி 1980 நாடாளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது.இதே போல் எம்ஜிஆர் முதலமைச்சராக இருக்கும்போது 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. 2ல் தான் வெற்றி பெற்றார். 2ல் தோல்வி. தோல்வியை தாங்க மனமில்லாமல் ஊட்டியில் சென்று 10 நாள் அவர் முகாமிட்டு உட்கார்ந்து கொண்டதும், அரசு நிர்வாகமே ஸ்தம்பித்ததும் அன்று பரபரப்பான செய்தி. இதே போல், உள்ளாட்சி தேர்தல்களிலும் மிகப்பெரிய தோல்விகளை எம்ஜிஆர் சந்தித்தார். எம்ஜிஆருக்கு இப்படிப்பட்ட தோல்விகள் ஏற்படுமென்று எந்தக் கருத்துக்கணிப்பும் சொல்ல வில்லை. பெரியகுளம் நாடாளுமன்ற இடைத்தேர்தலை அவசர அவசரமாக அறிவிக்கச் செய்து எம்ஜிஆர் பம்பரம் போல் சுழன்று பிரச்சாரம் செய்தார். ஆனால், காவல் துறையின் கருத்துக்கணிப்பு திமுக தான் வெற்றிபெறும் என்பது.

காவல் துறையின் கருத்துக்கணிப்பை நம்பிய எம்ஜிஆர் தேர்தல் முடிவு வருவதற்கு முதல் நாள் அன்றைக்கு அதிமுகவில் அமைச்சராகவும், முதல்நிலை தலைவர்களில் ஒருவராகவும் இருந்த அரங்கநாயகம் பெயரில் பெரியகுளம் நாடாளுமன்றம் தேர்தலில் தோற்றது ஏன் என்பதற்கு விளக்கம் சொல்லி ஒரு அறிக்கை வெளியிட்டு அது தினத்தந்தி நாளிதழிலும் செய்தியாக வெளிவந்துவிட்டது. ஆனால், ஒன்றரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வெற்றிபெற்றது. காவல் துறையின் கருத்துக்கணிப்பு லட்சணம் இது தான்.நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் பெரும் தோல்வியை சந்திக்குமென்று எந்த கருத்துக் கணிப்பும் சொல்லவில்லை. திமுகவிற்கு 12 இடங்கள் கிடைக்குமென்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. தமிழகத்தில் இன்றைக்கு நிலவக்கூடிய அரசியல் சூழல் என்பது ஆளும்கட்சிக்கு எதிரானது.  திராவிட இயக்கம் என்ற பெயரில் நாங்கள் தான் மாறி மாறி ஆளுவோம். எங்களை விட்டால்வேறு நாதியில்லை என்ற கருத்தை 2 கட்சிகளுமே உருவாக்குகின்றன. இன்றைய சூழலில் இக்கருத்து ஒரு மாயை. தமிழக மக்களிடம் இது எடுபடாது. தமிழகத்தில் மின்வெட்டே இல்லையென்கிறார் மின்சார மந்திரி. இத்தனைக்கும் குக்கிராமங்களை கொண்ட நத்தம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  கூசாமல் பொய் சொல்கிறார். தமிழகம் முழுவதும் இன்றைக்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது மின்சார வெட்டு. விலைவாசி விண்ணைமுட்டி நிற்கிறது. வேலைவாய்ப்பு குதிரைக்கொம்பாக இருக்கிறது. சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. வீட்டிலும் ஒற்றை ஆளாக பெண்கள் இருக்க முடியவில்லை. ரோட்டிலும் நடக்க முடியவில்லை. கொலைகளுக்கும், கொள்ளைகளுக்கும் பஞ்சமே இல்லை. மதுவிலக்கு கொள்கையில் அதிமுக அரசு மக்களது எதிர்ப்பின் காரணமாக தனிமரமாக நிற்கிறது. டாஸ்மாக்கிற்கு மது சப்ளை செய்யும் தொழிற்சாலைகளை நடத்துபவர்களே இந்த 2 கட்சியை சேர்ந்தவர்கள் என்பது வலை தளங்களில் தினமும் வாசகப் பெருமக்கள் புட்டுப்புட்டு வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அரசு மருத்துவமனைகள் அடிப்படை வசதியின்றி நாற்றமெடுத்துகிடக்கிறது. காவிரி, வைகை, பாலாறு காய்ந்து போய்க்கிடக்கிறது. சென்ற தேர்தலில் அறிவிக்கப்பட்ட மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி இன்னும் கிடைக்காத குடிமக்களே தமிழகத்தில் அதிகம். கொடுத்ததிலும் 3 க்கு 2 பழுது. பழுதில்லாததும் மின்வெட்டி னால் பயன்படுத்த முடியாத சூழல். டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகு படிக்கு தண்ணீர் கிடைக்க துரும்பைக்கூட அசைக்காமல் 12 லட்சம் ஏக்கர்களை தரிசாக போட்டது தமிழக அரசு. இவையெல்லாம் தமிழக மக்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய வரமா? சாபமா? பேராசிரியர் ராஜநாயகத்திற்கே வெளிச்சம். சிலரை சில காலம் ஏமாற்றலாம். பலரை பல காலம் ஏமாற்றலாம் – ஆனால் எல்லோரையும் எல்லாக்காலமும் ஏமாற்ற முடியாது என்பதை 2016 சட்டமன்ற தேர்தல் எடுத்துக்காட்டும்.

Leave A Reply

%d bloggers like this: