பாகிஸ்தான் மீது எந்தவொரு நாடாவது போர் தொடுக்குமானால் அந்த நாட்டுக்கு பேரிழப்பு ஏற்படும் என்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ரஹீல் ஷெரீப் மிரட்டியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பெயரை அவர் குறிப்பிடவில்லை என்ற போதும் நம்முடைய நாட்டையே அவர் குறிப்பிடுகிறார் என்று புரிந்து கொள்வது கடினமல்ல. இந்தியாவுடன் கடந்த 1965ம் ஆண்டு நடைபெற்ற போரின் 50 வது ஆண்டு தினத்தில் அவர் இவ்வாறு பேசியுள்ளார். உண்மையில் தற்போது பாகிஸ்தான் மீது போர் தொடுத்துக் கொண்டிருப்பது பயங்கரவாதம்தான். அமெரிக்காவுடன் அனுசரணையான போக்கை கடைப்பிடித்த பாகிஸ்தான், அமெரிக்காவின் சுயலாபத்திற்காக தன்னுடைய நாட்டை தலிபான் பயங்கரவாதிகள் தளமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தது.

இதன் விளைவை தற்போது அந்த நாடு அனுபவித்து வருகிறது. அமெரிக்காவை பொறுத்தவரை எது நடந்தாலும் அதை தனக்கு ஆதாயமாக பயன்படுத்திக் கொள்ளும் நரித்தனம் மிக்கது. ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆதரவுடன் இருந்த அரசை கவிழ்க்க தலிபான்களை வளர்த்துவிட்டது. பிறகு ஒரு நிலையில் அவர்கள் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பினார்கள். இப்போது பயங்கரவாதத்தை ஒடுக்குவதாகக் கூறிக்கொண்டு ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை தன்னுடைய கைப்பாவையாக வைத்திருத்திருக்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் தன்னுடைய பிரச்சனைகளை பரஸ்பரம் சுமுகமாகப் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். போர்ப்பதற்றம் மற்றும் எல்லைப் பகுதியில் ஊடுருவல் இரு நாடுகளுக்கும் பலன்தராது என்று இடதுசாரிகள் உள்ளிட்ட நடுநிலையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பாகிஸ்தான் நாட்டை தொடர்ந்து தங்களது பிடிக்குள் வைத்துக் கொண்டு ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து வரும் ராணுவத்தினர் அவ்வப்போது, ஆத்திரமூட்டும் பேச்சுக்களை பேசுவதோடு பயங்கரவாதிகள் ஊடுருவலையும் ஊக்குவிக் கின்றனர்.

இதைப் பயன்படுத்திக் கொண்டு அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் ஆயுதங்களை விற்று கொள்ளை லாபம் ஈட்டுகிறது. அண்டை நாடுகளான இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மக்களுக்குச் செய்ய வேண்டிய பணிகள் எவ்வளவோ உள்ளன. உலக அளவிலான பல்வேறு மனித வளக் குறியீடுகளில் இரு நாடுகளும் பின் தங்கியே உள்ளன. வறுமை, வேலையின்மை போன்ற பிரச்சனைகள் இரு நாடுகளுக்கும் பொதுவாகவே உள்ளன. ஆனால் பரஸ்பரம் பகைமை கக்கும் பேச்சுக்கள் மூலம் அமைதி பாதிக்கப்படுவதோடு வளர்ச்சயும் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. மத்தியில் மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பைக்கக்கும் பேச்சுகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு ஒரு சாக்காக பாகிஸ்தானை பயன்படுத்திக் கொள்கின்றது. இந்தியாவின் ராணுவத் தளபதி தல்பீர் சிங் சுஹாக் குறுகிய காலப் போருக்கு இந்தியா தயாராக இருப்பதாக கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தான் தளபதி போர் எவ்வளவு காலம் நீடித்தாலும் தங்கள் நாடுதான் வெற்றி பெறும் என்று கொக்கரிக்கிறார். இத்தகைய பேச்சுகள் யாருக்கும் பலனளிக்கப் போவதில்லை. ஏற்கனவே பாதுகாப்புத் துறை ஆலோசகர்கள் அளவில் நடக்கவிருந்த இருதரப்பு பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது ஒரு பின்னடைவாகும். எனினும் இரு தரப்பு பேச்சுவார்த்தையை பல்வேறு நிலைகளில் துவக்குவதே இரு நாடுகளுக்கும் நல்லதாகும்.

Leave A Reply

%d bloggers like this: