சென்னையில் செப்டம்பர் 9,10 தேதிகளில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் போதும் மாநாட்டிற்குப் பிறகும் தமிழகத்தில் தொழிலதிபர்களின் முதலீடு வந்து கொட்டப்போவது போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்த அரசு தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஊடகங்களும் இது குறித்து விரிவான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. முதலீட்டாளர் மாநாட்டிற்கு தடையின்றி மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஒரு செய்தி. இதே அதிமுக ஆட்சியில் நிலவிய கடுமையான மின்பற்றாக்குறை காரணமாக தமிழகத்தில் இருந்த ஏராளமான சிறு, குறு தொழில்களின் முதுகெலும்பு முறிக்கப்பட்டது நினைவுக்கு வருகிறது. மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்கிற பெயரில் பல் வேறு பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லாத மின்சாரத்தை இலவசமாகவும் சலுகை விலையிலும் வழங்கியதும் அந்நிறுவனங்களில் சில கொள்ளை லாபம் ஈட்டிக் கொண்டு,

கம்பி நீட்டியதும் நினைக்கத்தக்கது. மேலும் அண்மையில் அதானி நிறுவனத்துடன் சூரிய ஒளி மின்சாரத்தை மற்ற மாநிலங்களைவிட கூடுதலான விலையில் வாங்கிக் கொள்ள தமிழக அரசு உடன்பாடு செய்து கொண்டது பற்றிய செய்தியையும் மறந்து விட முடியவில்லை. இந்த முதலீட்டாளர் மாநாட்டை அதிமுக அரசு தாமதப்படுத்தியது குறித்து எதிர்க்கட்சியான திமுக குற்றம் சாட்டியது. அதே நேரத்தில் திமுக ஆட்சியில் பல்வேறு புரிந்துணர்வு உடன்பாடுகள் எட்டப்பட்டதாகவும் அந்தக் கட்சி மார்தட்டிக் கொண்டது. ஆனால், இந்த இரு கட்சிகளின் ஆட்சியின் போதும் பல்வேறு பன்னாட்டு, உள்நாட்டு தொழில் நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்பாடுகள் குறித்த உண்மைநிலை மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதே இல்லை. நவீன தாராளமயமாக்கல் கொள்கை நடைமுறைக்கு வந்த காலத்திலிருந்து மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள அரசுகள் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தங்களது அரசு பெரும் வெற்றி பெற்றுள்ளதாக தம்பட்டம் அடித்துக் கொள்வது வழக்கமாகிவிட்டது. ஆனால் இந்த முதலீடுகள் பெரும்பாலும் வேலைவாய்ப்பை உருவாக்குவதில், பெருமளவு உதவவில்லை என்பதே நடைமுறை அனுபவமாக உள்ளது.

சில ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்தாலும் அவர்களை நிரந்தரப்படுத்தாமல் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே பணியமர்த்தி, ஒட்டச் சுரண்டிவிட்டு ‘பயன்படுத்து, தூக்கி எறி’ என்ற உலகமயக் கோட்பாட்டின் அடிப்படையில் விரட்டி விடுகின்றனர்.அங்கு தொழிற்சங்கங்கள் அமைக்க அனுமதிக்கப்படுவதில்லை. நமது நாட்டில் தற்போதுள்ள தொழிலாளர் நலச்சட்டங்களை பன்னாட்டு நிறுவனங்கள் கண்டு கொள்வதேயில்லை. அரசுகளும் அவர்களுக்கு அனுசரணையாகவே உள்ளன. இப்போதிருக்கும் சட்டங்களையும் வெட்டிச் சுருக்கி நீர்த்துப் போகச் செய்ய முனைப்புக் காட்டி வருகின்றன.நோக்கியா, பாக்ஸ்கான் போன்ற கசப்பான அனுபவங்களும் தமிழகத்திற்கு உள்ளன. இதையும் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தும் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மாநிலத்தின் தொழிற் வளர்ச்சி குறித்து அரசுக்கு ஒரு தெளிவான பார்வை இல்லாமல், முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் மட்டும் குறியாக இருக்கும்போது, சமச்சீரற்ற தொழில் வளர்ச்சி ஏற்படுகிறது. மாநிலத்தின் பெரும்பகுதி தொடர்ந்து வஞ்சிக்கப்படும் நிலை உருவாகிறது. இதனால் பொருளாதாரத் தளத்தில் மட்டு மின்றி சமூகத்தளத்திலும் பல்வேறு பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன. முதலீடு முக்கியம் தான். ஆனால் அந்த முதலீடுகள் மாநிலத்திற்கும், மக்களுக்கும் பயன் தருவதாக இருப்பது மிக முக்கியம்.

Leave a Reply

You must be logged in to post a comment.