அழகுநம்பி வெல்கின்

[email protected]

இணையத்தின் முக்கியம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதனுடைய தாக்கம் அமெரிக்காவில் வால்ஸ்டீரீட்டை கைப்பற்றுவோம் இயக்கமாக, துனிசியா மற்றும் எகிப்தில் மக்கள் புரட்சியாக, ஸ்பெயினில் 15-M இயக்கமாக மற்றும் பல இடங்களில் அரசிற்கு எதிரான ஒத்துழையாமை இயக்கங்களாக பரவி வருகிறது.

இத்தகைய தாக்கம் மக்கள் மத்தியில் ஏற்படுவதற்கு மிக முக்கியக் காரணம், இணையத்தின் ஜனநாயகத் தன்மையும் சுதந்திரமான தகவல் பரிமாற்றமும், மக்கள் தாங்கள் சுரண்டப்படுகிறார்கள் என்பதை சமூக வலைத் தளங்கள் மூலமாக தோலுரித்துக் காட்டியதுதான்.

இதைப் புரிந்து கொண்ட ஆளும் வர்க்கம், தேவைப்படும் இடங்களில் அரசுடனும், கார்ப்பரேட்களுடனும் கைகோர்த்துக் கொண்டு இணையத்தின் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை மாற்றியமைக்க SOPA, PIPA, NSA Mass Surveillance, Censorship, Net Neutrality Violation மற்றும் வேறு சில வடிவங்களிலும் தொடர்ந்து கடுமையாக முயற்சி செய்து வருகிறது. அதில் பெரும்பாலான முயற்சிகள் வெற்றியும் பெற்றிருக்கிறது. சில முயற்சிகள் மக்களின் கூட்டு முயற்சியால் முறியடிக்கப்பட்டிருகிறது.

ஆளும் வர்க்கம் அரசையும், கார்ப்பரேட்டுகளையும் கொண்டு, இணையத்தை மற்ற தொலைத் தொடர்பு சாதனங்களான தொலைக்காட்சி மற்றும் ரேடியோ போல், அதனுடைய முழுக் கட்டுபாட்டையும் தன்வசம் வைத்துக் கொள்ள குறிவைத்து செயல்படுகின்றது.

NSA Mass Surveillance, Censorship, Net Neutrality Violation ஆகியவை இணையத்தின் தன்மையை தற்போது மாற்றத் துவங்கிவிட்டன. இணையமும் தொலைக்காட்சி போல சில சேனல்களை மட்டும் பார்க்கும் நிலைக்கு வந்துவிட்டது.

இணையத்தின் இத்தகைய மாற்றமே, ‘மக்கள் இணையம்’ என்ற சிந்தனையை மக்கள் மத்தியில் உருவாக்கி வருகிறது. ஆளும் வர்கத்தினரிடமிருந்து இணையத்தை வென்றெடுக்க தேவையான தொழில்நுட்பங்களையும், உள்கட்டமைப்பையும் உருவாக்குவதுதான் இந்த இயக்கங்களின் நோக்கம்.

இயக்கம்:

ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் இணையத்தைக் கட்டுவதற்கு வலுவான சில இயக்கங்கள் உருவாகியுள்ளது. குறிப்பாக ஸ்பெயின், ஜெர்மனி, கிரேக்கம், இத்தாலி போன்ற நாடுகளில் பல லட்சக் கணக்கான மக்கள் உருவாக்கியும், பயன்படுத்தியும் வருகின்றனர்.

ஸ்பெயினில் guifi.net, 2004 இல் துவங்கி, தற்போது உலகிலேயே மிகப் பெரியதும், வேகமாக வளர்ந்து வரும் இயக்கமாகவும் இருக்கிறது. தற்போது 53818.3 கி.மீ தூரத்துக்கு இணைய உள்கட்டுமானத்தை தன்னார்வளர்கள் உருவாக்கியுள்ளனர். அதன் மூலம் பல லட்ச மக்கள் எந்தவித கட்டணமும் கட்டுப்படுமின்றி இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

அதேபோல் ஜெர்மனியில் freifunk.net கடந்த 2002 ஆம் ஆண்டு ரேடியோ குழுவாக துவங்கி, பின்பு மக்கள் இணைய அமைப்பாக மாறியது. தற்போது 20,000 பயனர்களையும், உள்கட்டமைப்பை உருவாக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களை உள்ளடக்கிய தன்னார்வலர்களைக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

அமெரிக்கா, இத்தாலி, ஆஸ்திரியா, கிரேக்கம், ஸ்லோவேனியா போன்ற நாடுகளிலும் இதைப் போன்ற இயக்கங்கள் உருவாகி, மக்களின் வரவேற்புடன் சர்வேதேச இயக்கமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

இவ்வியக்கங்கள் பெரும்பாலும் மூன்று கொள்கைகளை முன்னெடுத்துச் சென்கின்றன.

1. பரவலாக்கப்பட்ட அமைப்பு

இத்தகைய இயக்கங்கள் மக்களுக்கு தடையற்ற இணைய சேவையைத் வழங்குவதற்கு தங்களின் அமைப்பு வடிவத்தை வழக்கமான கட்டமைப்பை பயன்படுத்தினால் அரசாலோ அல்லது கார்ப்பரேட்களினாலோ சட்டம், காவல்துறை மற்றும் பண பலத்தால் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் மத்தியப்படுத்தப்பட்ட கட்டமைப்பைப் பயன்படுத்தாமல் பரவலாக்கப்பட்ட அமைப்பு முறையை கையாள்கின்றனர். இதனால் எகிப்தில் நடந்தது போல மக்கள் புரட்சின் போது இந்த மக்கள் இணையத்தை ஒருபோதும் முழுமையாக துண்டிக்க முடியாது.

2. கூட்டு முயற்சி

பரவலாக்கப்பட்ட அமைப்பு முறையினால் இணைய இயக்கங்களை விரிவுபடுத்த ஒவ்வொரு வட்டாரத்திலும் தன்னார்வலர்கள் தொழில்நுட்பத்தைப் புரிந்து கொண்டு மக்களுக்கு எளிமையாக எடுத்துச் சொல்லி அவர்களை இவற்றில் சேர்க்கின்றனர். அவ்வாறு சேர்க்கிறவர்கள் ஒரு குழுவாக இயங்குவதின் தேவையை உணர்ந்து ஆர்வமுடன் பங்கேற்கின்றனர்.

3. சமத்துவம்

பெரும்பாலான இயக்கங்கள் நகர்புறத்தில் துவங்கி கிராமப்புறத்தை நோக்கி விரிவடைகின்றன. நகர்புறத்தில் கிடைக்கும் விரைவு இணைய இணைப்புதான் இதற்கு காரணம். நகர்புறத்தின் இணைய இணைப்புகளை கிராமத்து மக்களுக்கு எடுத்து செல்வது இந்த இயக்கங்களின் மிகப்பெரிய வெற்றி. பொருளாதார பாகுபாடு இல்லாமல் எல்லோரும் சமமாக இணையத்தை பயன்படுத்துகின்றனர்.

பயன்கள்

  • கிராமப்புறத்தில் விவசாயிகள் காலநிலை மற்றும் வானிலை அறிந்து விவசாயம் செய்ய முடிகிறது.
  • சந்தையில் இருக்கும் இன்றைய விலையை தெரிந்து கொள்ள முடிகிறது.
  • சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள முடிகிறது.
  • இவை அனைத்தும் உடனுக்குடன் இணையம் மூலமாக சாத்தியப்படுகின்றன.
  • நகர்புறத்தில் வீட்டுக்கு ஒரு இணைய இணைப்பு வாங்கினால் மட்டும் போதும், வெளியில் போகும் இடத்தில் இலவசமாக மக்கள் இணையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • தன்னிடம் இருக்கும் இணைய இணைப்பை மக்கள் இணையத்துடன் இருப்பதினால் பயணம் செய்யும்போது மற்றவர்களும் உபயோகிக்கலாம்.
  • மொபைல் போனுக்கென்று இன்னொரு இணைய இணைப்பு வாங்கத் தேவையில்லை. செலவில்லாமல் மற்றவர்களுக்கும் இலவசமாகவும் மிக வேகமாகவும் தரவு பரிமாற்றம், ஆடியோ, வீடியோ அழைப்பு செய்து கொள்ள முடியும்.

தொழில்நுட்பம் மற்றும் சட்டம்

இத்தகைய மக்கள் இணையம் Peer to Peer என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட Wireless Mesh Network என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பொது ஸ்பெக்ட்ரம் எல்லையான 2.4 Ghz மற்றும் 5 Ghz இல் இயங்குகின்றது.

நாம் தினம்தோறும் பயன்படுத்தும் Bluetooth, Microwave, WIFI ஆகியவை ஒன்று சேர்ந்து இந்த ஸ்பெக்ட்ரம் எல்லையில்தான் இயங்குகின்றன.

முடிவாக…

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கல்வி வெறும் வேலைவாய்ப்பை மையமாகக் கொண்டு இயங்குகிறது. இதனால் மக்களின் படைப்பாற்றல், ஆய்வுத் திறன், பரிசோதிக்கும் முறை போன்றவை மெல்ல மெல்ல அழிந்து வருகிறது.

தினம் தினம் பிரதான ஊடகங்கள் மூலமாக மக்கள் பயமுறுத்தப்பட்டு தங்களின் விழிப்புணர்வை இழந்து நுகர்வுக் கலாச்சாரத்தை நோக்கி திசைதிருப்பப்படுகின்றனர். இத்தகைய சூழலை மாற்ற, மக்களைச் சிந்திக்க வைக்க, மக்களை விழித்தெழ வைக்க, ஒற்றுமை வளர்த்தெடுக்க “மக்கள் இணையம்” பெரும் பங்காற்றும்.

Leave A Reply

%d bloggers like this: