“ஒருவர் தனது சொந்த மதத்தைப் பின் பற்றுவதில் பிரச்சனையில்லை. ஒரு மதத்தைச் சேர்ந்தவர் இயல்பாக வேறு மதத்திற்கு மாறுவதும் ஏற்புடையது தான். ஆனால் தீவிரமான சிலர் தங்களது சித்தாந்தத்தை மற்றவர்கள் மீது திணிக்க முயல்வதால் தான் மோதல்கள் ஏற்படுகின்றன.” -எல்லோரும் ஏற்கத்தக்க இந்தக் கருத்தைக் கூறியிருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி. பீகார் மாநிலம் புத்த கயா நகரில் மூன்று நாட்கள் நடைபெற்ற சர்வதேச இந்து-புத்த மாநாட்டு நிறைவு நாளில் (செப்.5) பிரதமர் இவ்வாறு பேசியிருக்கிறார். நாட்டின் பிரதமர் பொறுப்பில் இருக்கிறவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட நிகழ்வில் அவரிடமிருந்து இப்படிப்பட்ட சமய நல்லிணக்கக் கருத்துகள் வருவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், எந்தப் பின்னணியில் இப்படிப்பட்ட கருத்தை அவர் கூறுகிறார்? இது அவரது உள்ளத்தில் உதித்த உண்மையான எண்ணம்தானா, அல்லது சம்பிரதாயமாக எழுதி வாசிக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுகிறது.

எந்த மாநிலத்தில் பாரம்பரிய நகரில் இந்த மாநாடு நடைபெற்றதோ அதே மாநிலத்தில், தேர்தல் நெருங்குவதையொட்டி, சாதிய மதவாத உணர்வுகளை அரசியல் ஆதாயமாக்குகிற திட்டத்தை அவருடைய கட்சி செயல்படுத்தவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. குஜராத்திலும், உத்தரப்பிரதேசத்திலும் கையாளப்பட்ட உத்தியை தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பயன்படுத்த அக்கட்சி முனைந்திருப்பதைப் பார்க்காமல் கண்ணை மூடிக்கொள்வதற்கில்லை. இந்துத்துவா நோக்கங்களுக்காகக் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது ஆர்எஸ்எஸ். ஒரே தேசம், ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்ற அதன் கோட்பாட்டில் சித்தாந்தத் திணிப்பு இல்லையா என்பதை, அதன் தொண்டர்களில் ஒருவராகத் தன்னைக் கூறிக்கொள்வதில் பெருமிதமடையும் நரேந்திர மோடி விளக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் தலைமை அரசை இயக்கவில்லை என்று பாஜக தலைவர்கள் கூறிக்கொண்டாலும், ஆர்எஸ்எஸ் நடத்துகிற கூட்டத்தில் பிரதமரும், முக்கிய பாஜக தலைவர்களும் கலந்துகொண்டு அரசின் செயல்பாடு குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டிய தேவை என்ன வந்தது? மத நம்பிக்கையை மாற்றிக் கொள்வது பற்றிபிரதமர் சொல்லியிருப்பதில் வெளிப்படும் பக்குவம், நாடு முழுவதும் மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று அவ்வப்போது சங்பரிவார அமைப்புகளின் தலைவர்களும், பாஜக தலைவர்களுமே கூட பேசுவதற்குத் தடை விதிக்கிற பக்குவமாக மாறவில்லையே!எந்த மதத்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற மக்கள் தொகை கணக்கெடுப்புத் தகவல் வேண்டுமென்றே கசியவிடப்பட்டு, அதன் அடிப்படையில் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை சிறுபான்மையினருக்கு எதிராகத் திருப்பும் கருத்துகள் பரப்பப்படுவதைத் தடுக்க பிரதமர் முன்வரவில்லையே!

பிரதமர் அண்மைக்காலமாக இவ்வாறு நல்லிணக்கம் பற்றிப் பேசுவது கூட, நாடு நாடாகப் பயணம் செய்து ஈர்க்க முயலும் பன்னாட்டு முதலீட்டாளர்களை திருப்திப்படுத்தத் தான் என்ற விமர்சனமும் இருக்கிறது. வெறும் வார்த்தைகளின் அடிப்படையில் அல்லாமல், செயல்களின் அடிப்படையிலேயே மத நல்லிணக்கத்தில் இந்த அரசு உண்மையாகவே அக்கறையோடு இருக்கிறதா என்பதை மக்கள் எடைபோடுவார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.