நமது 34 ஆண்டு கால ஆட்சியில் மேற்கு வங்கம் அரிசி உற்பத்தியில் முன்னணியில் இருந்தது. மதக்கலவரங்கள் இல்லை. உள்ளாட்சிகளுக்கு இடைவெளியின்றி தேர்தல்கள் நடைபெற்றன. நிலச்சீர்திருத்தத்தில் மற்ற மாநிலங்களுக்கு நாம் முன்மாதிரியாக இருந்தோம். ஆனால், கல்வி, உடல் ஆரோக்கியம், ஊட்டச்சத்து, ஆயுள் காலம், தொழில்மயம் ஆகியவற்றில் மற்ற மாநிலங்களைவிட மிகவும் பின்தங்கியிருந்தோம். கேரளாவில் மேற்கு வங்கத்தைவிட ஊதியம் 3 அல்லது 4 மடங்கு அதிகமாக இருப்பதால் இலட்சக்கணக்கான மேற்கு வங்க இளைஞர்கள் இங்கு வருகின்றனர். ஏன் இவ்வாறு நடந்தது? மேற்கு வங்கத்தில் நமது கட்சி திரிணாமுல் காங்கிரசின் அடக்குமுறைகளுக்கு இடையே செயல்படவேண்டியுள்ளது. 200க்கும் அதிகமான நமது ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.

நமது கட்சி அலுவலகங்கள் தாக்கப்படுகின்றன. பல அலுவலகங்கள் கைப்பற்றப்படுகின்றன. ஆயிரக்கணக்கான நமது ஊழியர்கள் துரத்தப்படுகின்றனர். அனைத்து ஜனநாயக உரிமைகளும் நமக்கு மறுக்கப்படுகின்றன. உள்ளாட்சி அல்லது கல்லூரி தேர்தல்களில் நமது தலைவர்கள் வேட்பு மனு தாக்கல் கூட செய்ய இயலவில்லை. நமக்கு தற்பொழுது என்ன நடக்கிறதோ அதுதான், நமது 34 ஆண்டுகால ஆட்சியில் திரிணாமுல் காங்கிரசுக்கு நடந்தது என்றும், நமது ஆட்சியில் திரிணாமுல் காங்கிரசுக்கு ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டது என்றும் கேரளாவில் கார்ப்பரேட் ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன. இது பற்றி விளக்கம் அளிக்கவும்.

-சி. சத்யகுமார்/திருவனந்தபுரம்/கேரளா.

பதில்: 34 ஆண்டு கால இடது முன்னணி ஆட்சியில் மேற்கு வங்கம் பல முனைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டது. நீங்களே குறிப்பிட்டது போல நிலச்சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டது; அரிசி உற்பத்தி நாட்டிலேயே மிக அதிகமாக விளைச்சல் அடைந்ததன் மூலம் விவசாயம் வேகமாக வளர்ந்தது; உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டது மட்டுமல்லாமல் அவற்றிற்கு அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட்டது. மத ஒற்றுமைக்கு மேற்கு வங்கம் ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தது. முதல் இருபது ஆண்டுகளில் ஆரம்பக்கல்வி, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் இருந்தது. சிசு மரணமும், பிரசவத்தின் பொழுது தாய்மார்கள் உயிரிழப்பதும் பெரும் அளவிற்கு குறைக்கப்பட்டது.

தொழிலாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்கள் தமது அமைப்புகளை உருவாக்கி ஜனநாயக இயக்கம் நடத்துவது உத்தரவாதப்படுத்தப்பட்டது. எனினும் அடிப்படை வசதிகளைத் தருவதில் சில குறைபாடுகளும் இருந்தன. காலப்போக்கில் கல்வியின் தரமும் மருத்துவத்தின் தரமும் உயரவில்லை. அடிப்படை வசதிகளை தனியார்மயப்படுத்துவதில்லை என மாநில அரசாங்கம் உறுதியாக முடிவு எடுத்தது. இதன் காரணமாக நவீனமயம் மற்றும் தாராளமயக் கொள்கைகளுக்குப் பிறகு மாநில அரசாங்கத்திற்கு போதுமான நிதி ஆதாரங்கள் இல்லாமல் போனது. இதனால் தரமான கல்வியும் மருத்துவமும் அளிப்பதில் குறைகள் ஏற்பட்டன. மேற்கு வங்க உழைப்பாளிகள் கேரளத்திற்கு புலம்பெயர்வதற்கு காரணம் என்னவெனில், விவசாயம் மற்றும் உடல் உழைப்பு ஆகிய இரண்டு பணிகளுக்கும் கேரளா அதிகபட்ச ஊதியத்தைக் கொண்டுள்ளது.

இது தொழிலாளி வர்க்கத்தின் வலுவால் உருவானது ஆகும். மேலும் கேரளாவில் இருந்து அதிக அளவில் தொழிலாளர்கள் வளைகுடா நாடுகளுக்கு சென்றுவிடுவதால் பணிகளுக்கு உள்ளூர் நபர்கள் குறைவாக உள்ளனர். எனவே மேற்கு வங்கத்திலிருந்து மட்டுமல்ல; ஒடிசா, பீகார், அசாம் ஆகிய கிழக்கு மாநிலங்களிலிருந்தும் உழைப்பாளிகள் கேரளாவிற்கு வருகின்றனர். மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை அங்கு தொழில் வளர்ச்சி இல்லாததும் புதிய வேலை வாய்ப்புகள் இல்லாததும் இடம் பெயர்வது நிகழ்வதற்கு கூடுதல் காரணங்களாகும். 2011 மேற்குவங்க சட்டமன்றத் தேர்தல்கள் குறித்த பரிசீலனையில் இடது முன்னணியின் தோல்விக்கான அரசியல், ஸ்தாபன, நிர்வாக காரணங்கள் என்ன என்பதை கட்சியின் மத்தியக்குழு கூர்மையாக சுட்டிக்காட்டியுள்ளது. கட்சி மற்றும் இடது முன்னணிக்கு எதிராக வன்முறையும் பயங்கரவாத தாக்குதல்களும் கட்ட விழ்த்து விடப்பட்டன என்பதும் தோல்விக்கு ஒரு காரணம். திரிணாமுல் ஆட்சி அமைந்ததிலிருந்து வன்முறையும் அடக்கு முறைகளும் தொடர்கின்றன. எனினும் இந்த வன்முறை என்பது இடது முன்னணி ஆட்சியின் பொழுது நடந்த வன்முறைக்கு பதிலடி தான் என கார்ப்பரேட் ஊடகங்களும் கம்யூனிச எதிர்ப்பு வட்டங்களும் செய்யும் பிரச்சாரம் பொய்யானது மட்டுமல்ல; தவறான உள்நோக்கம் கொண்டதும் ஆகும். இடது முன்னணி ஆட்சியில் மற்ற எதிர்க்கட்சிகளைப் போலவே திரிணாமுல் காங்கிரசும் சுதந்திரமாக செயல்பட்டது மட்டுமின்றி தேர்தல்களிலும் போட்டியிட முடிந்தது. இன்னும் கூறப்போனால் 1999 சட்டமன்ற மற்றும் பல தேர்தல்களில் திரிணாமுல் காங்கிரஸ் கணிசமாக வென்றது. பல ஆண்டுகள் கொல்கத்தா மாநகராட்சி திரிணாமுல் வசம் தான் இருந்தது. இடது முன்னணி ஆட்சியில் ஒரு போதும் கல்லூரிகள் மற்றும் வளாகங்களிலிருந்து திரிணாமுல் ஆதரவாளர்கள் துரத்தப்பட்டது இல்லை.

மேற்குவங்கத்தில் தற்பொழுது நடப்பது என்னவெனில் முற்றிலும் ஜனநாயகத்தின் மீதும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதும் தொடுக்கப்பட்டுள்ள அப்பட்டமான தாக்குதல் ஆகும். மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமல்லாது ஏனைய எதிர்கட்சிகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடது முன்னணியும் இந்த தாக்குதல்களை துணிவுடனும் உறுதியுடனும் சந்தித்துக் கொண்டுள்ளன. இத்தகைய கடினமான சூழ்நிலையிலும் உழைக்கும் மக்களின் நலன்களுக்காக பல்வேறு இயக்கங்களை நடத்திக் கொண்டுள்ளன. அதே வேளையில் ஜனநாயகம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீட்கவும் மார்க்சிஸ்ட் கட்சியும் இடது முன்னணியும் இயக்கங்கள் நடத்திவருகின்றன.

நாம், மார்க்சிஸ்ட் கட்சி, ஏன் அணுமின்சக்தி மற்றும் அணு தொழில்நுட்பத்தை முற்றிலுமாக எதிர்ப்பது இல்லை? ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டு தாக்குதலுக்கு பிறகு அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் மிகவும் மன உளைச்சலில் இருந்தார் என்பதை நாம் அறிவோம்.

சில இடது தீவிர அமைப்புகள் முற்றிலுமாக அணு ஆராய்ச்சிக்கு எதிராக உள்ளனர். பொது பாதுகாப்பைக் கருதி சில நாடுகள் அணு சக்தி குறித்து எவ்வித ஆராய்ச்சியும் செய்வதில்லை. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அணு ஆராய்ச்சியை ஆதரிப்பது ஏன்? இத்தகைய ஆராய்ச்சியை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும்?- பிஸ்வஜித் கோஷ்/பாராநகர்/மேற்கு வங்கம்.

பதில்: அணுஆராய்ச்சி மற்றும் அணுசக்தியை மின் உற்பத்தி செய்யப் பயன்படுத்துவதற்கும் அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்யப் பயன்படுத்துவதற்கும் இடையே வேறுபாடு உள்ளது என்பதை கட்சி பார்க்கிறது. நாம் அணு ஆயுதங்களை எதிர்க்கிறோம். அணு ஆயுத உற்பத்தியை கடுமையாக எதிர்க்கிறோம். அணு ஆயுதங்கள் இல்லாத ஒரு உலகம் உருவாக்கிட இயங்கும் பல இயக்கங்களோடு நாம் இணைந்து இயக்கம் நடத்தியுள்ளோம். அதே தருணத்தில் அமெரிக்கா போன்ற வல்லரசுகள் “அணு மின்சக்தி கிளப்” போன்ற அமைப்புகளை உருவாக்கி அணுசக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் உரிமையையும் அணு ஆயுதங்களை உருவாக்கும் உரிமையையும் தமக்கு மட்டுமே சொந்தமாக்கிக்கொள்ள முயற்சி செய்யும் கபடவேடத்தை கடுமையாக எதிர்க்கிறோம். இவர்களைத் தவிர ஏனையோர் அணுசக்தி மூலம் மின்சாரம் அல்லது அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதை அங்கீகரிக்க மறுத்து அதற்குத் தடைகளை உண்டாக்குவதை நாம் வலுவாக எதிர்க்கிறோம். மின் உற்பத்தி செய்வதற்கும் பொதுப் பயன்பாட்டிற்கும் உதவிடும் வகையில் உள்நாட்டு அணு உலைகள் உருவாக்கப்படுவதை நாம் ஆதரித்தோம். அதே சமயத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் அமெரிக்காவுடன் செய்த அணு ஒப்பந்தத்தை எதிர்த்தோம். என்ன காரணங்கள்? இந்த ஒப்பந்தம் அணு தொழில் நுட்பத்தை உருவாக்கவோ அல்லது அதனை மற்றவர்களிடமிருந்து பெறுவதற்கோ உண்டான உரிமையை தடுக்கிறது. நமது சுயேச்சையான வெளியுறவுக் கொள்கைகளை இது சமரசத்திற்கு உள்ளாக்குகிறது. மேலும் இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் அணு உலைகளை அபரிமிதமான விலைக்கு வாங்கிட நிர்ப்பந்திக்கிறது.அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை தம் மீது எவ்விதத்திலும் சுமத்தக் கூடாது எனும் அமெரிக்க நிறுவனங்களின் நிபந்தனையை இந்த ஒப்பந்தம் நம்மீது திணிக்கிறது. (இந்த அழிவுப்பூர்வமான நிபந்தனைகளை மோடி அரசாங்கமும் ஏற்றுக்கொண்டுள்ளது). இன்று பல புதிய நிகழ்வுகள் அணு மின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்த முக்கியமான அம்சங்களை முன்னுக்கு கொண்டு வந்துள்ளன. உள்நாட்டில் உருவாக்கப்படும் அணு உலைகளும் தீவிரமான பாதுகாப்பு விதிகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என நாம் கோருகிறோம். சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளும் ஆய்வு செய்யப்பட்டு தவிர்க்கப்பட வேண்டும். அணு உலைகள் குறித்து விரிவான விவரங்களை உள்ளூர் மக்களுக்கு தெரிவிக்காமல், அவர்களின் ஜனநாயகப் பூர்வமான அனுமதியின்றி இத்தகைய அணு உலைகள் நிறுவப்படுவதையும் நாம் எதிர்க்கிறோம். எங்கெல்லாம் அணு உலைகள் நிறுவவதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்துகின்றனரோ அங்கெல்லாம் அரசாங்கம் இது குறித்த பணிகளை தொடரக் கூடாது என்பது நமது நிலை. நம் தேசத்தின் மின்சக்திக்கான தேவையை அணுசக்தி மூலம் சிறந்த முறையில் பூர்த்தி செய்ய இயலாது எனும் நிலை உருவாகியுள்ளது. புதை படிம எரிபொருட்களுக்கு மாற்றாக (அதாவது, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு) சூரியசக்தி மற்றும் காற்றாலைகள் மூலம் மின்சாரம் பெறுவதற்கும் வேறு பல மாற்று வழிகளையும் உருவாக்கிடவும் கூடுதல் முயற்சிகள் செய்யப்பட வேண்டும்.

Leave A Reply

%d bloggers like this: