பட்டியலின மக்கள் மீதான வன் கொடுமைகள் குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒருங்கிணைத்த பொது விசாரணை அறிக்கை ‘சாதி என்கிற வன்முறை’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. நீதியரசர் கே.சந்துரு தலைமையில் நடைபெற்ற இந்தப் பொது விசாரணைக் குழுவின் முன் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக, பல்வேறு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டியும், அரசுக்குப் பல்வேறு பரிந்துரைகளை அளித்தும், மிகுந்த பொறுப்புணர்வுடன் இந்த அறிக்கையை திரு.சந்துரு அவர்கள் தொகுத்தளித்துள்ளார். இத்தகைய சிறந்த பணிக்கு முதலில் மனம் நிறைந்த பாராட்டுக்கள். வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 குற்றவாளிகளுக்கு தண்டனையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் கிடைக்க வழி செய்யும் சட்டம் தான்.

ஆனால் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளின் கையில் தான் இருக்கிறது. அவர்களை மீறி சட்டத்தை அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டாலும் நீதிமன்றத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு ஆதிக்க சமூகத்தினருக்கு ஆதரவாக அதிகாரிகள் எப்படி திறமையாக செயல்பட்டுள்ளனர் என்பது சிவகங்கை மாவட்டம் ஈசனூர் கிராமத்தில் புரவி எடுப்பு விழா தொடர்பான வழக்கில் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. அதிகாரத்தில் உள்ள சதிகார அதிகாரிகள் எப்படி நீதியையும் நியாயத்தையும் குழி தோண்டி புதைப்பதில் கொஞ்சமும் வெட்கப்படமாட்டார்கள் என்பதற்கு இந்த வழக்கு ஓர் உதாரணம். திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் என்கிற குக்கிராமத்தில் பள்ளர் சாதியைச் சேர்ந்த 60 வயதான மாரியம்மாள் என்பவரை சிங்கிகுளம் ஆதிக்கச் சாதியை சேர்ந்த 26 வயதே ஆன சின்னதுரை என்பவன் பாலியல் வன்புணர்ச்சி செய்து விட்டான்.

முனிர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்படுகிறது. மாரியம்மாள் பெயரை வேண்டுமென்றே ‘h’ வெட்டிவிட்டு மரியம்மாள் என்று போலீசார் புகாரில் எழுதிக் கொண்டனர். மருத்துவமனையிலிருந்து 5 நாட்கள் கழித்து திரும்பி வந்த பிறகு தான் பெயரை மாற்றி எழுதியுள்ளதை அறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து தான் பட்டியல் சாதியை சார்ந்தவள் என்றும் எனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்றும் புகார் கொடுக்கிறார். இதையறிந்த காவலர்கள் தாங்கள் திட்டமிட்டு செய்த தவறை மெய்யாக்க துணை வட்டாட்சியரிடம் சம்பந்தப்பட்டவர் கிறிஸ்துவ பள்ளர் (பிற்படுத்தப்பட்ட வகுப்பு) என்று சாதிச்சான்று வாங்குகின்றனர். இதைத் தொடர்ந்து மாரியம்மாள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்கிறார். ஆட்சியர் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடுகிறார். கோட்டாட்சியர் தனது விசாரணை அறிக்கையில் மாரியம்மாள் ‘இந்து பள்ளர்’ என்பதை உறுதி செய்கிறார். எனவே, வட்டாட்சியர் ஏற்கனவே வழங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பு சாதிச் சான்றிதழை திரும்ப பெற்றுக் கொண்டு இந்து ஆதிதிராவிடர் பள்ளர் என்று மீண்டும் சாதிச் சான்று வழங்குகிறார். ஆனால் அதில் மரியம்மாள் என்ற மாரியம்மாள் என்று பெயரை குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பாதிக்கப்பட்டவரிடமிருக்கும் ஆவணங்கள் அனைத்திலும் மாரியம்மாள் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளன. குற்றவாளியை வன்கொடுமைத் தடுப்பு சட்டப்பிரிவுகளிலிருந்து காப்பாற்ற வேண்டுமென்று காவல்துறை, வருவாய்த் துறையைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். குற்றவாளியைக் காப்பாற்றும் நோக்கோடு இத்தகைய இழிசெயலில் ஈடுபட்ட எவர் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை. இன்றைய தேதி வரை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டிய தீருதவி தொகையை அரசு வழங்கவில்லை.

சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்த வேண்டிய அதிகாரிகள் சட்டத்தை குழி தோண்டி புதைத்துவிட்டு தங்கள் விருப்பம் போல் செயல்பட்டுள்ளனர். இத்தகைய கயவர்களை என்ன செய்யலாம்? வன்புணர்ச்சியில் ஈடுபட்டவனை விட இந்த அதிகாரிகளின் வன்கொடுமை கொடூரமானதாக அல்லவா இருக்கிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகளைப் பார்த்தால் அவர்கள் முகத்தில் உமிழ வேண்டும் என்று தோன்றுகிறது. இப்படி ஒவ்வொரு வழக்கிலும் ஆதிக்க சமூகத்தினருக்கு ஆதரவாக மாவட்ட காவல் துணைகண்காணிப்பாளர், கோட்டாட்சியர் உட்பட எப்படி செயல்பட்டுள்ளார்கள் என்பது இந்நூலில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. சமூக நீதியை நிலைநாட்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பணி எவ்வளவு கடினமானது என்பதை இந்நூலை வாசிப்பவர்களால் உணர முடியும். அதிகாரிகள் சாதீய கண்ணோட்டத்துடன் செயல்படும் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

அதற்கு இவ்வாறு செயல்படும் அதிகாரிகள் மீது அரசும், நீதி மன்றங்களும் கடுமையான தண்டனை விதிப்பதுடன் பணியிலிருந்தே நீக்க வேண்டும். அத்தகைய நிர்ப்பந்தத்தை அரசுக்கு ஏற்படுத்தும் வகையில் போராட்டங்கள் வலுவடைய வேண்டும். ஒரு ‘h’ எழுத்து குற்றவாளிகளைப் பாதுகாப்பதில் எவ்வளவு தூரம் செயலாற்றுகிறது என்பதை எண்ணிப் பாருங்கள். விளிம்பு நிலை மக்களிடையே பணியாற்றுகிற ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது. வன்கொடுமை வழக்குகளில் தலையிடுகிற எல்லோரும் மேலும் விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையாகவும் செயல்பட வழிகாட்டும் நூல் இது. ஒடுக்குமுறைக்குள்ளாகும் ஒவ்வொருவர் மனதிலும் அதிகார வர்க்கத்திற்கெதிராக ஆவேசத்தீயை மூட்டும் நூல் என்பதில் சந்தேகமில்லை. வன்கொடுமை வழக்குகளை அதிகார வர்க்கம் கையாளும் அயோக்கியத்தனத்தை தோலுரித்து காட்டும் இந்த நூலை வாங்கிப் படியுங்கள். பாதுகாத்து வைத்திடுங்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.