“ஒன்றுக்கும் மேற்பட்ட உயிர் பெறுவேனாகில் அவ்வுயிர்களையும் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன்.”

என்று சுதந்திரத்திற்காக தூக்குக் கயிறை முத்தமிட்ட பகத்சிங்கின் தியாக முற்போக்கு பாரம்பரியத்தோடு, சுதந்திரத்திற்காகவும் மாணவர் ஜனநாயக உரிமைக்காகவும் தொடர் போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்ற அமைப்பு இந்திய மாணவர் சங்கம் ‘எஸ்எப்ஐ’. போராட்டத்தை மட்டுமே உரமாகக் கொண்டு உரிமைக்காக தொடர்ந்து முன்னெடுத்து தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக உறுதிமிக்க வீரமிக்க போராட்டத்தை நடத்தி தமிழக மாணவர்களுக்கு போராட கற்றுக்கொடுத்த மாணவர் அமைப்பு இந்திய மாணவர் சங்கம். நேற்றைய வரலாறு தெரியாமல் போனால் இன்று நடப்பது புரியாது. இன்று நடப்பது புரியாமல் போனால் நாளை நம் வசம் இல்லை. ஆகவே நம் பாரம்பரியத்தை அசை போட வேண்டிய தேவை உள்ளது.

இந்திய மாணவர் சங்கம் உருவாகும் போதே சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசம் எனும் வெண்பதாகையை உயர்த்தி பிடித்து, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தேச பக்தியோடு, எல்லோருக்கும் இலவசக் கல்வி, அறிவியல்ப் பூர்வமான ஜனநாயகப் பூர்வமான கல்வி கேட்டு, சாதி, மதம், இனம், மொழி வெறிக்கு எதிராக, பெண்ணடிமைக்கு எதிராக, ஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்தி போராடிவரும் ஒரே அமைப்பாக, விழுந்தால் விதையாக எழுந்தால் மலையாக மூன்று லட்சம் மாணவர்களை தமிழகத்தில் உறுப்பினராக்கி மாற்றுக் கல்விக்கான போராட்டத்தை நடத்தி வரும் சக்திமிக்க மாணவர் அமைப்பு இந்திய மாணவர் சங்கம்.

அரசுக் கல்லூரியின் அரணாக

தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்களின் பிள்ளைகள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் அரசுக் கல்லூரிகள் ஆகும். அப்படிப்பட்ட அரசுக் கல்லூரிகள் 67 யும் 2002 ஆம் ஆண்டு அடியோடு அகற்றிட முடிவெடுத்து அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக மாற்றி பல ஆயிரம் மாணவர்களின் கல்வியை காவு வாங்க துடித்தது அதிமுக அரசு அதற்கு எதிராக இந்திய மாணவர்சங்கம் ஆசிரியர்களோடு இணைந்து 64 நாட்கள் தொடர் போராட்டத்தை நடத்தி தமிழக அரசின் முடிவை முடக்கி, தமிழகத்தில் அரசுக் கல்லூரிகள் உயிர்ப் போடு உயர்ந்து நிற்க பாதுகாப்பு அரணாக நின்று அரசுக் கல்லூரிகளை பாதுகாத்த இயக்கம் இந்திய மாணவர் சங்கம். 1981 ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் உள்ள சீத்தாலெட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிர்வாகம், ஆசிரியர்- மாணவர் விரோதப் போக்கை கடைப்பிடித்ததோடு, பழிவாங்கும் நடவடிக்கையாக கல்லூரியை இழுத்துப் பூட்டியது. ஆனால் இந்திய மாணவர் சங்கமும் ஆசிரியர்களும் இணைந்து மரத்தடி வகுப்பு நடத்தினர்.

தினமும் வகுப்புகள் மரத்தடியில் நடந்தன. தேர்வுகளும் மரத்தடியில் நடந்து மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. தமிழகத்தில் முதன் முறையாக மாடர்ன் கல்லூரியை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது எஸ்எப்ஐ. கல்லூரி நிர்வாகம் தேர்வுகள் செல்லாது என நீதிமன்றம் சென்ற போதும் எஸ்எப்ஐயும் நீதிமன்றம் சென்று கல்லூரியின் ஆணவத்தை அடித்து நொறுக்கி மாணவர்களுக்கு ஆதரவாய் தீர்ப்பை பெற்றுத்தந்தது.

தீண்டாமைக்கு எதிராக

1981 ம் ஆண்டு மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல் நடத்திட வேண்டும். மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தி மாணவர் பேரவையில் வெற்றி பெற்ற தோழர்கள் சோமசுந்தரம், செம்புலிங்கம் இருவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள். கல்விக்காக, மாணவர் நலனுக்காகப் போராடி வெற்றி பெறுவதா என எண்ணி இரவோடு இரவாக இரண்டு தோழர்களையும் வெட்டரிவாளால் வெட்டி வீழ்த்தினர் சாதி வெறியர்கள். எஸ்எப்ஐ தலைவர்களை வெட்டினால் அமைப்பை அழித்துவிடலாம் என எண்ணியவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சம். உடலை அழித்திருந்தாலும் அவர்களின் சிந்தனைகளையும், கொள்கைகளையும் அழிக்க முடியவில்லை. வெட்ட, வெட்ட தழைக்கும் வாழைமரமாய் இந்திய மாணவர் சங்கம் தழைத் தோங்குகிறது. மதுரை மண்ணில் 30 ஆயிரம் மாணவர்கள் எஸ்எப்ஐயில் இணைந்து சாதி வெறிக்கு சவுக்கடி கொடுக்க வைத்த அமைப்பு.

மக்களுக்கான போராட்டம்

மாணவர்களுக்காக மட்டும் இன்றி மக்களுக்கான பஸ் கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிராகவும் 1974 ம் ஆண்டு ரயில்வே தொழிலாளர்கள் போராட்டத்தின் போது அரிசி, பருப்புக்களை பதுக்கல் காரர்கள் பதுக்கி வைத்ததாலும் விலைவாசி உயர்வாலும் அரிசி, பருப்புக்களை கூட வாங்க முடியாமல் மக்கள் கஷ்டப்பட்ட போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேசன் பொருட்களை சென்னை கிறிஸ்துவக் கல்லூரி மாணவர்கள் ரேசன் கடைகளை உடைத்து மக்களுக்கு எடுத்து கொடுத்து மக்களின் பசியைப் போக்கி வயிற்றை நிரப்பிய மகத்தான இயக்கம். அத்தகைய வீரம் செறிந்த போராட்டத்தை நடத்திய இந்திய மாணவர் சங்கத்தின் 24 வது மாநில மாநாடு செப்டம்பர் 4, 5, 6 ஆகிய மூன்று நாட்கள் பாண்டிச்சேரியில் மாற்றுக் கல்விக்கான மகத்தான மாநாடாக நடைபெறுகிறது.

இந்தச் சூழலில் மத்திய பாஜக அரசாங்கம் கடந்த ஆண்டு பள்ளிக் கல்வியில் பட்ஜெட்டில் 51.82 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது. தற்போது (2015-16)ல் 39.03 ஆயிரம் கோடியாக ஒதுக்கி 13 ஆயிரம் கோடிநிதியை வெட்டியிருக்கிறது. உயர்கல்விக்கான நிதி 1 கோடியையும், மதிய உணவுத்திட்டத்தில் 4000 ஆயிரம் கோடியையும் குறைத்திருக்கிறது.

அனைவருக்கும் கல்வித்திட்டத்தில் கடந்தாண்டு நிதி 28.25 ஆயிரம் கோடி. இந்தாண்டு 22 கோடியாக குறைத்து இருக்கிறது. அறிவியல் ஆராய்ச்சி ஒதுக்கப்பட்ட நிதியில் 25 சதவீதம் நிதியை குறைந்திருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.8 சதவீதம் மட்டுமே கல்விக்கு நிதி ஒதுக்கி உள்ளது. ஆனால் முதலாளிகளுக்கு 5,49,984 கோடி கடந்த ஆண்டும் 5,89,285 கோடியும் ஒதுக்கியுள்ளது.

இந்தாண்டு இதிலிருந்து இந்த அரசு உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. ஆகவே மத்திய அரசிடம் கல்விக்கு கூடுதல் நிதி கேட்டும், மத்திய அரசு கல்வியில் காவிமயத்தை புகுத்துவதை தடுத்திடவும், சமஸ்கிருத வரை முறை என சமஸ்கிருதத் திணிப்பையும், ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் தினம் என்றும் மன்கிபாத் என மாணவர்களிடம் வலுக்கட்டாயமாக உரையாடுவதையும், இந்திய நாட்டின் வரலாற்று ஆராய்ச்சித் துறையின் தலைவராக சுதர்சனராவ் எனும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முழு நேர ஊழியரை நியமித்தனர். புனே திரைப்படக் கல்லூரியில் காவிமயமாக்குவதை தடுத்திடவும். நிலாவில் நீர் கண்ட விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை முதல் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் வரை உருவாக்கிய அரசுப் பள்ளிகளையும் பாதுகாத்திடவும் உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு, தமிழை பழித்தவர்களை தாய் தடுத்தாலும் விடமாட்டேன் என பேசியவர்கள் அனைவரும் மௌனமாய், தமிழக அதிமுக அரசு ஆங்கிலத்திற்கு கட் அவுட்டும், தமிழுக்கு கெட் அவுட்டும் சொல்லி அரசுப் பள்ளிகளில் ஆங்கிலக் கல்வியை புகுத்தி தாய் மொழி கல்விக்கு குழி தோண்டும் தமிழக அரசின் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தியும் ஆரம்பக் கல்வி தாய் மொழி வழியாக இருக்கக் கேட்டும் நடைபெறுகிறது எஸ்எப்ஐ மாநாடு. வெள்ளையனை வெளியேற்றும் போராட்டத்தில் காட்டிய அதே முனைப்போடு மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தை நடத்திட திட்டமிடும் மாநாடு.

சமூகத்தை மாற்றிட, கல்வியில் மாற்றம் காண , எதிர்காலத்தை தீர்மானிக்க, போராட்டத்திற்கான வியூகம் வகுக்க கூடும் மாநாட்டு பேரணிக்கு விண்ணதிரும் கோஷங்களோடு வீதியெங்கும் மாணவர் திரள் என செப்.4ல் தேசம் காக்க, கல்வி காக்க வாரீர்! வாரீர்!

கட்டுரையாளர்

இந்திய மாணவர் சங்க மாநில துணைத்தலைவர்

Leave a Reply

You must be logged in to post a comment.