K.Kanagaraj

K.Kanagaraj

நரேந்திர மோடி குஜராத் வளர்ச்சிக்கான மாதிரி நாடு முழுவதற்குமான முன்னுதாரணம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார். அந்த மாநிலத்தில் தற்போது சட்டமன்றம், நாடாளுமன்றம் அமைச்சர்கள், அரசியல், சமூகம், பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் பட்டேல் இனத்து மக்கள் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டுமென்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த போராட்டங்கள் குஜராத்தின் இயல்பு வாழ்க்கையை சில நாட்கள் புரட்டிப்போட்டது. 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். அதில் ஒருவர் போலீஸ் காவலில் இருந்த போது கொல்லப்பட்டிருக்கிறார். போராட்டத்திற்கு தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் 22 வயது ஹர்திக் பட்டேல் இப்போது தில்லியில் முகாமிட்டிருக்கிறார்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு “அந்தஸ்து”க்காக போராடிக் கொண்டிருக்கும் ஜாட் மற்றும் குஜ்ஜார் இனத் தலைவர்களை இணைத்துக் கொண்டு நாடு தழுவிய அளவில் போராட்டத்தை நடத்தப் போகிறாராம். ஆரம்பத்தில் இந்தப் போராட்டம் பட்டேல்களுக்கு இடஒதுக்கீடு கேட்பது போல தோன்றியது, தற்போது எங்களுக்கு இடஒதுக்கீடு கொடு, அல்லது யாருக்கும் கொடுக்காதே என்ற கோரிக்கையை ஹர்திக் பட்டேல் முன்வைத்திருக்கிறார். அதாவது இடஒதுக்கீட்டை ஒழித்திடு என்கிறார்.

இது அப்படி ஒன்றும் புதிதல்ல

யாருக்குமே இடஒதுக்கீடு கூடாது என்கிற கோரிக்கை சமூக நீதிக்கு எதிரானது. இடஒதுக்கீட்டுக்கான போராட்டம் தொடங்கியதிலிருந்தே அதற்கு எதிரான கலகமும் தொடங்கியது. 1970களில் ரயில்வேத் துறையில் இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை வழக்குகள் சென்றன. இந்த வழக்கில் தீர்ப்பெழுதிய நீதிபதிகள் வி.ஆர்.கிருஷ்ணய்யரும், ஓ.சின்னப்பரெட்டியும் மிக ஆழமாக விவாதித்து இடஒதுக்கீடு நீடிக்க வேண்டுமென்று தீர்ப்பளித்தார்கள். மண்டல் கமிஷன் அறிக்கையை வெளியிட்டு, அதை அமலாக்க முற்பட்டபோது பட்டேல் இனத்தவர் உட்பட வடஇந்தியாவில் மாணவர்கள் போராட்டக் களத்தில் இறங்கினர்.

1981, 1985, 1989 என்று பல காலங்களில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டங்கள் கொழுந்துவிட்டு எரியத் துவங்கின. ராஜிவ்கோஸ்வாமி என்கிற இளைஞர் தீக்குளித்து இறந்துபோனார். வி.பி.சிங் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. எனவே, இடஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டமென்பது சமூக நீதிக்கான போராட்டத்தின் எதிர்வினையாகவும், பின்விளைவாகவும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

எரிகிற தீயில்…

வலதுசாரி சமூக, பொருளாதார, அரசியல் கொள்கைகளை கடைப்பிடிக்கும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு இத்தகைய போராட்டங்கள் தீவிரமாக முன்னுக்கு வருவதும், ஆளும் கட்சியின் ஆசியோடு நடத்தப்படுவதும் தீவிரப்பட்டிருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷாவும் பாரதிய ஜனதாவும் அடிப்படையில் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்களாக இருந்தபோதும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தமிழகத்திலும் கூட தற்போது இடஒதுக்கீடு பெறாத பகுதியினரிடம் குறுகிய தேர்தல் ஆதாயத்திற்காக புதிய பகுதியினருக்கு இடஒதுக்கீடு தர தங்கள் அரசு முயற்சி செய்யும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

உச்சநீதிமன்றம் ஒட்டுமொத்த இடஒதுக்கீடு 50 சதவிகிதத்தை தாண்ட முடியாது என்றும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 27 சதவிகிதத்தை தாண்ட முடியாது என்றும் மிகத் தெளிவாக வரையறுத்துள்ளது. ஒரு இடஒதுக்கீட்டு பிரிவுக்குள் புதிய பகுதிகள் சேர்வதென்பது இப்போது இடஒதுக்கீட்டை பெற்றுக் கொண்டிருப்பவர்களின் பங்கை கூறு போடுவதேயன்றி வேறு ஒன்றும் இல்லை. இந்தப் போராட்டம் இடஒதுக்கீட்டை ஆதரிப்போர், இடஒதுக்கீட்டை எதிர்ப்போர், சமூக நீதிக்காக போராடுபவர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய எச்சரிக்கை.

நம்மாளு வந்தா மட்டும்..

தேர்தல் நேரங்களில் பஞ்சாயத்து தலைவரானாலும் சரி, எம்எல்ஏ, எம்பி, அமைச்சர், முதலமைச்சர், தங்கள் சாதியினராக இருந்தால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நினைப்பதும், அதை அரசியல்வாதிகள் வாக்கு வங்கி நோக்கிலிருந்து தூண்டிவிடுவதும் சகஜமாகி வருகிறது. பட்டேல் இனத்தவரின் போராட்டம், பட்டேல் இனத்தை சார்ந்தவரே முதலமைச்சராக இருந்தாலும், மத்தியில் ஆளும் கட்சியின் தலைவராக தங்கள் சாதிக்காரர் இருந்தாலும், மாநிலத்தில் அமைச்சர்களில் பலரும் எம்எல்ஏ, எம்பிக்களில் பலரும் தங்கள் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், பிரச்சனைகள் பயந்து கொண்டு ஓடிவிடாது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.

இருப்பதை தொலைத்து விட்டு

இரண்டாவதாக, இப்போதைய இடஒதுக்கீட்டு கோரிக்கை அர்த்தமற்றது, திசைதிருப்புவது, பிற்போக்குத்தனமானது. மத்திய அரசுப் பணிகளில் 1971-ம் ஆண்டு 26,99,000 பேர் பணிபுரிந்தார்கள் (central government employment 1971 to 2009). இது 1995ம் ஆண்டு 39,82,000மாக உயர்ந்தது. அதுவரையிலும் அதிகபட்சமாக 4.73 சதவிகிதமும், குறைந்தபட்சமாக 0.69 சதவிகிதமும் ஆண்டுக்காண்டு இந்த எண்ணிக்கை அதிகரித்து வந்தது. ஆனால், தாராளமயக் கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு 1995ம் ஆண்டு முதல் இது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக குறைந்தே வந்தது.

அதிகபட்சமாக 2004ம் ஆண்டுஅதற்கு முந்தைய ஆண்டை விட 18.37 சதவிகிதம் குறைந்தது. பிஜேபி ஆண்ட 6 ஆண்டு காலம் மற்றும் ஐக்கிய முன்னணி ஆண்ட 2 ஆண்டு காலம் அதாவது, 1996 முதல் 2004ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலும் 8,66,000 மத்திய அரசு பணியிடங்கள் ஒழித்துக்கட்டப்பட்டன. 2011ம் ஆண்டு கணக்குப்படி ஒட்டுமொத்த மத்திய அரசு ஊழியர்கள் எண்ணிக்கை 30,87,000 மட்டுமே. இது தாராளமயக் கொள்கைகள் ஆரம்பித்த காலத்திலிருந்து 8.95 லட்சம் குறைவாகும். இந்த வேலைவாய்ப்புகள் அப்ப டியே இருந்திருந்தால் 2.77 லட்சம் வேலைவாய்ப்புகள் பொது பிரிவில் இருப் போருக்கு கிடைத்திருக்கும்.

இத்தனைக்கும் 2012 ம் ஆண்டு புள்ளிவிவரப்படி அமெரிக்காவில் ஒரு லட்சம் பேருக்கு 7681 மத்திய அரசு ஊழியர்கள் இருந்தனர். இந்தியாவில் 1 லட்சம் மக்கள் தொகைக்கு வெறும் 1622.8 மத்திய அரசு ஊழியர்களே இருந்தனர். இதிலும் கூட 44.81 சதவிகிதம் பேர் அதாவது 13,94,418 பேர் ரயில்வேத் துறையில் மட்டும் பணிபுரிபவர்கள். இவர்களையெல்லாம் நீக்கிவிட்டால் இந்தியாவில் 1 லட்சம் மக்கள் தொகைக்கு வெறும் 125 பேர் மட்டுமே பணிபுரிகிறார்கள் (The Hindu-Figures bust myth India’s bureaucracy is “bloated”).

பொதுத்துறையும் விலக்கல்ல

இதேபோன்று மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் 2011-2012 கணக்குப்படி 1,76,00,000 பேர் பணிபுரிந்தார்கள். தாராளமயக் கொள்கைகள் முழுமையாக அமலாவதற்கு முன்னதாக 1996-97ல் இந்த எண்ணிக்கை 1,95,00,000 ஆக இருந்தது. இந்த 20 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் 19,00,000 லட்சம் வேலை வாய்ப்புகள் பலியிடப்பட்டுள்ளன. உண்மையில் இந்த வேலை வாய்ப்புகள் இருந்திருந்தால் பொதுப் பட்டியலில் உள்ள சுமார் 5,70,000பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். மாநில பொதுத்துறை நிறுவனங்களில் 2000ம் ஆண்டில் 74,25,000 பேர் பணிபுரிந்தார்கள். இது 2010ம் ஆண்டில் 73,53,000 ஆக குறைந்தது. ஏறத்தாழ 75,000 வேலைவாய்ப்புகள் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் மட்டும் வெட்டி சுருக்கப்பட்டன. (Estimated employment in the public and private sectors)

இதில் இடஒதுக்கீட்டு பிரிவினர் மட்டுமன்றி பொதுப் போட்டியில் பயனடைவோரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தக் காலத்தில் மத்திய அரசு, மாநில அரசு, மத்திய பொதுத்துறை, மாநில பொதுத்துறை வேலை வாய்ப்புகள் மட்டும் 28,61,000 குறைந்திருக்கிறது.

காராம் பசுவல்ல

தனியார்துறையில் 2000ம் ஆண்டில் 86,00,000 ஆக இருந்த வேலை வாய்ப்பு 2010ம் ஆண்டில் 1,08,00,000ஆக அதிகரித்தது. 22,00,000 புதிய வேலைவாய்ப்புகள் தனியார் துறையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இவையெல்லாம் புதிதாக படித்து வந்த பகுதியினர் அனைவருக்கும் வாய்ப்புகளை உருவாக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் 28,61,000 அரசு வேலைவாய்ப்பு குறைந்திருக்கும் அதேநேரத்தில் 22,00,000 வேலை வாய்ப்புகள் மட்டுமே தனியார்துறையில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதுதான் இன்றைய நெருக்கடியின் முக்கியமான அம்சம். இதை உணராமல் பொதுவாக இடஒதுக்கீட்டின் காரணமாகத்தான் தங்கள் வாய்ப்புகள் பறிபோனதாக நம்புவது உண்மைக்கு மாறானது.

வலதுசாரி சமூக கருத்துக்களின் உந்துதலால் ஏற்பட்டது. எனவே, கூடுதலான வேலைவாய்ப்புகளை உருவாக்கு வதற்கான போராட்டம் மட்டுமே இந்தப் பிரச்சனையைத் தீர்க்க உதவுமே ஒழிய இடஒதுக்கீட்டை கொடுப்பதோ – பறிப்பதோ, இடஒதுக்கீட்டை அதிகரிப்பதோ – குறைப்பதோ எந்த வகையிலும் உதவப்போவதில்லை. இதுகுறித்து 23-8-2015 அன்று இந்திய முதலாளிகள் அமைப்புகளில் ஒன்றான “அசோசெம்” வெளியிட்டுள்ள ஆய்வை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். “தொடர்ச்சியாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதமாக இருந்த 2004-05 மற்றும் 2009-10 காலகட்டத்தில் 50 லட்சம் வேலை வாய்ப்புகள் காணாமல் போயிருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடியே 30 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு சந்தையில் நுழைகிறார்கள். ஆனால், அவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை.

வேலைவாய்ப்பு குறைந்து போயிருக்கிறது. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களின்படி வேலைதேடும் மக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 2.23 சதவிகிதம் என்கிற அளவில் வளர்ந்து கொண்டே இருந்தது. 2001 முதல் 2011 வரையிலான இந்தக் காலத்தில் வேலைவாய்ப்பு ஆண்டுக்கு 1.4 சதவிகிதம் மட்டுமே வளர்ந்துள்ளது. இது வளர்ச்சி என்பது வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற பிரச்சனையை முன்னிறுத்தி யுள்ளது”.

சவடால் சமூக நீதியளிக்குமா?

சமூக நீதி குறித்து சவடால் தனம் செய்யும் பல அரசியல் கட்சிகள் உண்மையில் தாங்கள் ஆட்சியில் இருக்கிறபோது தங்கள் கட்சிக்கு மந்திரி பதவி கிடைத்தபோது அதையெல்லாம் தனியாருக்கு விற்பதற்கு துணைபோனார்கள். திமுக- ஆ.ராசாவானாலும், தயாநிதிமாறனானாலும், சாலைகளை தனியாருக்கு விற்ற டி.ஆர்.பாலுவானாலும், பாஸ்டியர் இன்ஸ்டிட் டியூட், கிங் இன்ஸ்டிட்டியூட் ஆகிய வற்றை மூடிவிடுவதற்கு முயற்சி செய்த பாமக – அன்புமணி ராமதாசானாலும் சமூகநீதியை வாய் அளப்புக்கான கருத்தாக வைத்திருக்கிறார்களே தவிர அவர்களின் கொள்கையாக அல்ல.

தனியார்மயமாக்கப்பட்ட எந்த நிறுவனத்திலும் வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு கிடைக்கப்போவதில்லை. திமுக அமைச்சர்களின் உதவியுடன், தனியார்மயமாக்கப்பட்ட தொலைத்தொடர்புத் துறையில் வேலைவாய்ப்புகள் இடஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையில் நிறைவேற்றப்படுவதில்லை. ஆனாலும் அவர்கள் சமூக நீதியைப் பற்றியும், இடஒதுக்கீட்டைப் பற்றியும் தாங்கள்தான் சாம்பியன்கள் என்பதைப் போல பீற்றித் திரிகிறார்கள். இடஒதுக்கீடு சர்வரோக நிவாரணி அல்ல. மாறாக, நீண்ட நெடுங்காலமாக வாய்ப்பு மறுக்கப்பட்டோர் அந்த வாய்ப்புகளைப் பெறுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட பின்னடைவை எட்டிப் பிடிப்பதற்காகக் கொடுக்கப்படும் சிறு உதவி மட்டுமே. ஆயினும், இடஒதுக்கீட்டு பலனை பெறும் சமூகங்கள் தங்களது இடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாக்க வேண்டுமெனில் அரசு மற்றும் பொதுத்துறைகளிலும் அதேபோல தனியார் துறைகளிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்.

இடஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டத்தை நடத்துபவர்கள் நோக் கம் எதுவாக இருப்பினும், அவர்கள் பின்னால் அணிதிரளும் மக்களின் மனதில் புதிய வேலைவாய்ப்புகள், அதில் தங்களுக்கான இடம் என்பதே அவர்களின் கனவாக இருக்கிறது. இந்தக் கனவு இடஒதுக்கீட்டால் நிறைவேற முடியாதது. எல்லோருக்கும் வேலைவாய்ப்பை உத்தரவாதப்படுத்துவதன் மூலம்தான் இடஒதுக்கீட்டுப் பிரிவினரும், அதற்கு அப்பால் உள்ளோரும் பயன்பெற முடியும்.

Leave A Reply

%d bloggers like this: