இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை சுமார் 66,000 பேரிடம் சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட பல விவரங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் வெளிவந்துள்ளன. சுகாதாரம், கல்வி, ஆகிய அடிப்படை தேவைகளில் களநிலை எவ்வாறு உள்ளது என் பதையும், அதற்காக செலவிடப்படும் தொகை, அரசு மற்றும் தனியார் துறையின் ஆதிக்கம் போன்ற பல விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் வீட்டு வரவு – செலவுகளை நிர்வகிக்கும் பெண்களிடம் தனியே, கல்வி, சுகாதாரத்திற்காக எந்த அளவுக்கு செலவாகின்றது என்பதும் கேள்வியாக முன்வைக்கப்பட்டது.

அனைத்தும் தனியார் மயமே

சுகாதார துறையில் தனியாரின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டும் அறிக்கை, நகர்புறம், கிராமம் என சகலபகுதிகளிலும் நோய்வாய்படும் போது, தனியாரிடம் தான் சிகிச்சை பெறப்படுகின்றது. அரசு மருத்துவமனைகளோ, அதனை சார்ந்து இருக்கும் நிறுவனங்களிலோ சிகிச்சைகள் அடிப்படை நிலையில் மேற்கொள்ளப்படுவது முற்றிலும் இல்லை. வருமானம் அதிகமாக உள்ளவர்கள் தனியார் மருத்துவத்தையே நாடுகின்றனர் என்றும் ஆய்வு சொல்கின்றது. கிராமப் புறங்களில் மருத்துவத்தை (அரசு அல்லது தனியார்) பெரும்பாலும் அடிக்கடி மாற்றுவதில்லை.

யாரிடம் முதலில் சென்றார்களோ அவர்களிடத்திலேயே தொடர்ச்சியாக செல்லும் நிலை உள்ளது. இதை தீர்மானிப்பது பொருளாதார நிலை தான். அதாவது பணம் இருந்தால், தனியாரிடம், இல்லையென்றால் அரசிடம்……. தனியாரிடம் சிகிச்சை பெறுவது கடந்த பத்தாண்டுகளில் கிராமப்புறங்களில் இரண்டு மடங்காகவும், நகர்புறங்களில் கிட்டத்தட்ட ஆறு மடங்காகவும் அதிகரித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டு அறிக்கை சுகாதாரம் பற்றி குறிப்பிடும் போது கீழ்கண்டவாறு நிலைமையை விளக்குகிறது. “நமது நாட்டின் சுகாதார உள்கட்டமைப் புகள் வெகுவாக சிதிலமடைந்துள்ளன. இதனால் மருத்துவத்திற்காக கூடுதலாக செலவழிக்கின்றனர்.

அதே போல் அரசு சார் மருத்துவம் என்பது வெகுவாக குறைவதால் தனியாரை சார்ந்துள்ள நிலை ஒருபுறத்திலும், ஏழைகளும் பொருளாதாரத்தில் வறிய நிலையில் உள்ளவர்களும் தனியாரின் கொள்ளைக்கு தப்புவதில்லை.’’ அந்த அறிக்கையிலேயே திட்டமிட்டு அரசு பொது சுகாதாரத்திற்கு போதிய நிதி ஒதுக்காததால் தான் இந்த இழிநிலை உரு வாகியுள்ளது என்பதையும் கோடிட்டு காட்டுகின்றது. இப்போது அல்ல…. உலகமய சூறைகாற்று இந்தியாவில் வீசதுவங்கிய காலத்திலிருந்தே இடதுசாரிகள் எச்சரித்து வருகிறார்கள்.

அதை இன்று ஒரு அரசு நிறுவனமே ஒத்துகொண்டுள்ளது.ஆனால் இடது சாரிகள் இதை சொல்லிய போது பல தரப்பினர் விமர்சித்தனர். ஆனால் இன்று… மருத்துவத்திலும் ஆங்கில வழி மருத்துவம் தான் (அலோபதி) பெரும்பான்மை மக்களின் தேர்வாக உள்ளது. அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சிகிச்சையை விட, பன் மடங்கு அதிகம் செலவாகும் தனியார் மருத்துவமனையே நாடுவதாகவும், ஆய்வு கூறுகிறது.

நோய்களின் தாக்கம்

உலகிலேயே இன்று நீரழிவு (சர்க்கரை) நோயினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. வாழ்நிலை மாற்றங்களினால் ஏற்படும் நோய்களிலும் நமது தேசம் வெகு விரைவில் முதல் இடத்தை பிடிக்கும். இரத்தகொதிப்பு, புற்றுநோய், என அனைத்திலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக மாகின்றது. இப்படி நோய் தாக்கம் அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் உயருகின்றது. அன்றாடம் கவனிக்கப்பட வேண்டிய, தினமும் சிகிச்சை வழங்கப்படவேண்டிய, புற்றுநோய் உள்ளிட்டவைகளுக்கு அரசு மருத்துவமனைகளின் மூலம் கிடைக்கபெறும் சிகிச்சை குறைவுதான். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன. வாழ்நிலை மாற்றத்தால் ஏற்படும் இரத்தக்கொதிப்பு நோய் இன்று இளவயதினரையும் கூட விடுவதில்லை. இரத்தகுழாய் அடைப்பு, இருதய அறுவை சிகிச்சை என்பதெல்லாம் கிராமப்புறங்களில் அறியப்பட்ட நோயாக மாறியுள்ள இன்றைய சூழலில் அரசு மருத்துவமனைகளுக்கு போதிய வசதிகள் இன்றி தவிப்பதால் ஈர்க்கும் விளம்பரங்கள் மூலம் பலரை வலைக்குள் விழவைத்து சுரண்டும் கூட்டம் இருப்பதை ஆய்வும் நம் அனுபவமும் ஒரே நேர்கோட்டில் நிற்கின்றது.

அதிகமாகும் செலவுகள்…- கடனில் மக்கள்

ஒரு பக்கம் நோய்களின் தாக்கம், அரசின் பாராமுகம், என பல பிரச்சனைகள் இருக்கும் போது உருவாகும் தேவையை தனியார் கார்ப்பரேட் குழுமங்கள் தந்திரமாக பயன்படுத்தி மக்களை சுரண்டுகின்றன. தனியார் மருத்துவமனைகள் தான் சுத்தமாக இருக்கும், அங்கு தான் நோய் முற்றிலும் குணமடையும் எனும் நம்பிக்கை பலருக்கு ஆழமாக பதிந்துள்ளது. இந்நம்பிக்கை சுரண்டலின் அஸ்திவாரம்.இப்போது இது நகரம் மட்டுமல்லாமல் கிராமங்களில் கூட அதிகமாகியுள்ளதை ஆய்வு சொல்லுகின்றது. தேசிய மாதிரி ஆய்வறிக்கை மேலும் கூறுவது, கடந்த பத்தாண்டுகளில் மட்டும் மருத்துவ செலவுகள் பன்மடங்கு உயர்ந்திருப்பதையும், வருவாய்க்கு ஏற்றாற்போல் அளவு அதிகமாகும் என்றும் அதாவது ஒரு தனி மனிதனின் மாத சம்பளத்தை விட 15 மடங்கு அதிகமான தொகையை ஏழைகள் செலவிடுகின்றனர் அதே போல் செல்வந்தர்கள் தங்களின் வருமானத்தை விட 5 மடங்கு அதிகம் செலவழிக்கின்றனர். இதனால் சராசரியாக 60 சதவீத இந்தியர்கள் கடன் வலையில் சிக்குகின்றனர். சமீப காலமாக மேற்கத்திய நாடுகளை போல் மருத்துவ செலவை காப்பீடு மூலம் ஈடுகட்டுவது எனும் புதிய முறை அறிமுகமாகியுள்ளது. நம்மில் கூட பலர் இது சிறந்தது என கருதுகிறோம். அது முற்றிலும் தவறு. மருத்துவத்தை முழுமையாக தனியாரின் கைகளில் ஒப்படைப்பதற்கு இதுவும் ஒரு வழி. அரசு தனது கடமைகளிலிருந்து முழுமையாக விலகிக்கொண்டு, வேடிக்கை பார்க்கும். மக்கள் சுரண்டப்படுவார்கள். இப்போது அரசு மருத்துவமனைகளிலேயே உயர் சிகிச்சைகளுக்கு காப்பீட்டு திட்டம் இருந்தால் மட்டுமே வாய்ப்பு. பெரும்பாலும் அந்த வறையறைக்குள் வராதவர்கள் தனியாரிடம் தான் போகின்றனர். இயல்பாகவே தனியாரிடம் மருத்துவத்திற்கு செல்லும் போது செலவினங்கள் அதிகமாகும் என்பது மறுக்க முடியாத உண்மை. இன்றுள்ள நிலையில் தனியாரை கட்டுபடுத்திட உரிய சட்டங்கள் நடைமுறையில் இல்லை. அரசுக்கும் தனியாரை கட்டுக்குள் சட்டம் கொண்டு வர இஷ்டமில்லை. மருத்துவத்தில் தற்போது புது விஷயங்கள் நடந்து வருகின்றது. அது குறித்த தெளிவான பார்வை அரசுக்கு இல்லவே இல்லை. இப்படி பல ஓட்டைகள் இருக்கின்றது என சொல்லி கொண்டே போகலாம்.

உண்மை நிலை…..

கடந்த இருபது ஆண்டுகளாக நம் நாட்டில் நடைமுறையில் இருக்கும் உலகமய கொள்கைகளால் பொது செலவினங்களுக்காக அரசு (மத்திய, மாநில) ஒதுக்கும் நிதி படிப்படியாக குறைந்து வருகின்றது. அதன் விளைவாக மக்கள் பயன்படுத்தும் சமூக நலன் சார்ந்த துறைகள் நிதி ஆதாரமின்றி தவிக்கின்றன. இதனால் ஏற்படும் வெற்றிடத்தை தனியார் துறையினர் சாதுரியமாக பயன்படுத்தி கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர். உலகமய கொள்கைகள் அமலாக துவங்கிய காலத்திலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடது சாரிகட்சிகளும் பல முற்போக்கு அமைப்புகளும் இதை எதிர்த்தன. ஆனால் புதிதாக வருவதை இவர்களுக்கு எதிர்ப்பதே வேலை என்றெல்லாம் ஏகடியம் செய்தார்கள். இன்று அரசின் ஆய்வே அதை நிரூபணமாக்கியுள்ளது. வேறு சாட்சிகளே தேவை இல்லை. அரசே ஒத்து கொள்கிறது. ஆக திட்டமிட்டு ஒரு நாட்டின் சுகாதார உள்கட்டமைப்புகளை நிர்மூலமாக்கி ஒட்டுமொத்தமாக தனியாரின் கொள்ளைக்கு உள்ளாக்க வைக்கும் ஆட்சியாளர்களின் அம்பலப்படுத்திட வேண்டிய மாபெரும் பணி நம் முன் உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: