“ஹவில்தார் அசோக் சவுகான்…

ஹவில்தார் மேஜர்சிங்…

கர்னல் புஷ்பிந்தர் சிங்…”

இந்த மூன்று பேரும் தலைநகர் புது தில்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதத் தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களோடு மேலும் பலர் விரைவில் சேர்ந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து காங்கிரசால் ஏமாற்றப்பட்டதால், அக்கட்சியைத் தவிர வேறு ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் தங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்று முன்னாள் ராணுவத்தினர் எதிர்பார்த்தனர். தங்கள் வாக்குகளையும் அப்படியே செலுத்தினர். குடும்பத்தினரின் வாக்குகளையும் பெற்றுத்தந்தனர். பாஜக பலனடைந்தது. வடமாநிலங்களில் பெரும் வெற்றி பெற்றதற்கு முக்கியமான காரணமாக இது சுட்டிக்காட்டப்படுகிறது. அவ்வளவு தான். வெற்றி பெற்றதோடு வாக்களித்தவர்களை பாஜகவினர் மறந்துவிட்டனர். இப்போதும் நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், பேசிச்கொண்டிருக்கிறோம் என்று சப்பைக்கட்டு கட்சி வருகிறது மோடி தலைமையிலான அரசு. காங்கிரஸ் அரசில் இருந்த ப.சிதம்பரமும், தற்போது அமைச்சராக உள்ள அருண்ஜெட்லியும், ‘வாசுவும், சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க’ன்னு சொல்லும் அளவுக்கு நடந்துகொள்கிறார்கள். நிறைய செலவாகும் என்கிறார்கள். பெருநிறுவனங்களுக்காக விட்டுக்கொடுக்கப்பட்ட வருமானத்தை மீட்டாலே முன்னாள் ராணுவத்தினருக்கான ஒரு பதவி ஒரு ஓய்வூதியத்தை தருவது மட்டுமல்ல, நாட்டு மக்களின் ஏராளமான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடமுடியும்.

ஏன் இந்தக் கோரிக்கை?

ஒருவர் ஓய்வு பெற்று, பத்தாண்டுகள் கழித்து மற்றொருவர் ஓய்வு பெறுகிறார். முதலில் ஓய்வு பெற்றவரை விட, பத்தாண்டுகள் கழித்து ஓய்வு பெறுகிறவருக்கு அதிக ஓய்வூதியம் கிடைக்கும். இது தான் ஓய்வூதியம் வாங்கும் அனைத்துத் துறைகளிலும் நிலவுவதாகும். அப்புறம் ஏன் முன்னாள் ராணுவத்தினர் மட்டும் இந்தக்கோரிக் கையை எழுப்புகிறார்கள். இது நியாயமானதா? பத்தாண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியருக்கு, தற்போது ஓய்வு பெறுபவரை விட மிகக்குறைவான ஓய்வூதியம் வழங்குவது மட்டுமே ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் என்பதற்கான அடிப்படையல்ல. எடுத்துக்காட்டாக, ஒரு அரசு ஊழியர் பணியில் சேரும் போது இளநிலை எழுத்தராகச் சேருகிறார் என்று வைத்துக்கொள்வோம். எந்த பதவி உயர்வும் இல்லாமல், அதாவது அவருக்கு தரப்படாமலோ அல்லது அவர் விருப்பப்படாமலோ, அதே பதவியில் ஓய்வு பெறலாம். பதவி உயர்வு பெறவில்லை என்பதற்காக அவர் பணியிலிருந்து வெளியேற்றப்படமாட்டார். பணியில் சேரும்போது அமர்ந்த நாற்காலியில் அமர்ந்த வண்ணம் ஓய்வு பெற்றவர்கள் கூட இருப்பார்கள். ஆனால், ராணுவத்தினரைப் பொறுத்தவரை நிலைமை அப்படி கிடையாது. பணியில் சேர்ந்துவிட்டார் என்றால், ஒவ்வொரு பதவிக்கும் ஒரு காலக்கெடு உள்ளது. அதற்குள் அதை எட்டாவிட்டால் அவர் வெளியேற வேண்டியது தான். இதில் அவருடைய விருப்பம் எல்லாம் ஒன்றுமில்லை. விமானப்படையில், முதலாண்டிலேயே பயிற்சியின் போது வைக்கும் தேர்வில் தேர்ச்சி பெறாமல் கூட வெளியேற்றப்படும் ஆபத்து உள்ளது. வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். பணியில் அமர்ந்த பதவிக்கு அடுத்த பதவியை எட்டாவிட்டால் 15 ஆண்டுகளில் வெளியேற்றப்படுகிறார்கள். பலர் வெளியேற்றப்ட்டிருக்கிறார்கள். இதையும் தாண்டி, விருப்ப ஓய்வு பெற்று பலரும் 15 மற்றும் 20 ஆண்டுகளில் வருகிறார்கள். இதை விருப்ப ஓய்வு என்று சொல்வதே தவறானதாகும். தொடர்ந்து பணியாற்றுவற்கான சூழல் இருக்காது என்பது தான் காரணமாகும். குடும்ப சூழல், தட்ப வெப்ப நிலை போன்றவை அந்த முடிவை எடுப்பதில் முக்கியமான பங்காற்றுகின்றன. பெரும்பாலும் தங்கள் குடும்பங்களைப் பிரிந்த நிலையில் தான் ராணுவத்தினர் பணியாற்றுகிறார்கள். சில இடங்களுக்கு அவர்கள் நினைத்தால் கூட அழைத்துச் செல்ல முடியாது. இதனால், “விருப்ப ஓய்வில்” வந்துவிடுகிறார்கள். பல துறைகளில் முன்னாள் ராணுவத்தினருக்கான இடஒதுக்கீடு கிடையாது. வயது வரம்பில் தளர்ச்சி மட்டுமே உண்டு. 40 அல்லது 45 வயதில் மாநில அரசுப்பணியில் சேர்ந்தால், 23, 24 வயதில் சேருபவர்களுக்கு என்ன சம்பளமோ அது தான் தரப்படும். மேலும், 20 ஆண்டுகள் வேலை பார்த்தால் தான் இங்கு ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியாக முடியும். சில பொதுத்துறை நிறுவனங்களில், ராணுவத்திலிருந்து வெளியே வருகையில் என்ன அடிப்படை ஊதியமோ அது தரப்படுகிறது. ஆனால், இது விதிவிலக்குகள் தான். இந்த நடைமுறை மத்திய, மாநில அரசுப்பணிகளில் இல்லை. ராணுவத்துறையில் தேர்ச்சி பெற்ற மனிதவள மேம்பாட்டுத்துறை வல்லுநர்களைக் கேட்டால், இப்படி ஏதாவது ஒரு வகையில் பணியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்வதுதான் ராணுவத்திற்கு நல்லது என்பார்கள். பொதுவாக, ராணுவத்தினரின் சராசரி வயது என்பது இளமையாகவே இருந்து கொண்டிருக்க வேண்டும். அனைவரும் 58 வயது வரையில் பணியில் அமர்ந்திருந்தால், ஒரு கட்டத்தில் தற்போது பல்வேறு துறைகளில் உள்ளது போன்று வயது அதிகமானவர்களாகவே இருப்பார்கள். இது நாட்டைப் பாதுகாக்கும் ராணுவத்தால் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்று என்று தான் அந்த வல்லுநர்கள் கருத்து தெரிவிப்பார்கள். எனவே, மற்ற துறையைச் சேர்ந்தவர்களையும், ராணுவத்தினரையும் இந்த விஷயத்தில் ஒப்பிடவே முடியாது.

இழந்த உரிமை

ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் என்ற இந்தக் கோரிக்கை திடீரென்று எழுந்ததல்ல. இது ஏற் கனவே நடைமுறையில் இருந்த ஒன்றுதான். 1973ஆம் ஆண்டில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசுதான் மூன்றாவது ஊதியக்குழு வின் மூலம் இதை ரத்து செய்தது. அதுவரையில், முன்னாள் ராணுவத்தினருக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் கிடைத்துக் கொண்டுதான் இருந்தது. அப்போதிருந்து இந்தக் கோரிக்கை எழுந்து வந்திருக்கிறது. 1986, 1996, 2006 மற்றும் தற் போது வரவிருக்கும் 2016 ஊதியக்குழுக்கள் ஒவ்வொன்றின் முன்பும் இந்தக் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. 2006 ஆம் ஆண்டு வெளியான ஊதியக்குழு பரிந்துரைகளுக்குப்பிறகுதான் தங்கள் பதக்கங்களைத் திரும்பத்தரும் போராட் டத்தை முன்னாள் ராணுவத்தினர் துவங்கினர். அதுபொது மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போதும் ஆட்சியாளர்கள் அசையவில்லை.2011 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.ராஜீவ் இடம் பெற்றிருந்த மனுக்கள் குழுதான் இதைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது. இந்தக்குழுவுக்கு கோஷியாரி என்கிற பாஜகஎம்.பி. தலைவராக இருந்தார். 2011 ஆம் ஆண்டுடிசம்பர் 19 ஆம் தேதியன்று இந்தக்குழு தனது அறிக்கையைத் தந்தது. அதில், ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தின் நியாயங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும், வருங்காலத்தில் இந்தப் பலன் தொடர வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, இதை நாங்கள் உடனடியாக நிறைவேற்றுகிறோம் என்று சொன்ன பாஜக சாக்குப்போக்கு சொல்லி காலத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறது. அதா னிக்கு ஒதுக்கும் நேரத்தில் அரை சதவிகிதம்கூட 1962, 1965, 1971, 1999 போர்களில் உயிரைத் துச்சமாக மதித்துப் போரிட்டவர்களுக்கு பிரதமர் மோடிஒதுக்க முன்வரவில்லை. போர்களில் எதிரிகளின் பீரங்கிகளைத் துவம்சம் செய்தவர்கள், நாட்டு மக்கள் மீது குண்டு வீசி அழிக்க வந்த போர் விமானங்களை தீக்கிரையாக்கியவர்கள், எங்கள் மண்ணில் அந்நியரைக் காலடி எடுத்துக் வைக்க விடமாட் டோம் என்று கூறி தன்னுயிரை ஈந்தவர்களின் குடும்பங்கள் உண்ணாவிரதம் இருந்து கொண் டிருக்கிறார்கள். இவர் செல்பி எடுத்துக் கொண்டிருக்கிறார்.

Leave A Reply

%d bloggers like this: