ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த இரண்டு மாதத்துக்கு மேலாக முன்னாள் ராணுவத்தினர் போராடி வருகின்றனர் 2014 ம் ஆண்டின் தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் ராணுவத்தினரின் இந்த நீண்ட நாள் கோரிக்கை உடனடியாக ஏற்கப்படும் என்று உறுதி மொழி அளித்த பிரதமர் நரேந்திர மோடி இப்போது அக்கோரிக்கையை தான் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அதனை நிறைவேற்றுவதற்கான பரிசீலனைகள் நடைபெற்று வருவதாகவும் அறிவித்துள்ளார். ஆனால் அதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்பது குறித்து அவர் அறிவிக்கவில்லை.இப்போது தான் கொள்கையளவில் ஏற்கிறார் என்றால் ஒரு ஆண்டுக்கு முன்னால் எந்தவொரு நிபந்தனையுமின்றி அக்கோரிக்கை நிறைவேற்றபடும் என்று அறிவித்தாரே அப்போது கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளவில்லையா- முன்னாள் ராணுவத்தினரின் மாநாட்டில் கலந்து கொண்ட இவர் முன்னாள் ராணுவத்தளபதி வீ,கே,சிங்கின் முன்னிலையில் இக்கோரிக்கையின் நியாயத்தை ஏற்றுக்கொண்டு அதனை ஏற்பதாக ஆரவாரத்துடன் அறிவித்தார் கடந்த ஓராண்டாக பரிசீலிக்கிறார்.

ஆனால் அதனை நிறைவேற்றாமல் காலந்தாழ்த்தி வருகிறார். கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடுவது இவருக்கு ஒன்றும் புதிதல்ல. இவரது சொல்லுக்கும் செயலுக்கு மிடையேயான இட்டு நிரப்பமுடியாத இடைவெளி நாம் அறிந்ததுதான் ஆதார் அட்டைக்கு எதிர்ப்புத்தெரிவித்த அவர் பதவியேற்றவுடனேயே அனைத்து மானியங்களுக்கும் அதனை ஒரு நிபந்தனையாக்குவதற்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் முயற்சித்து வருகிறார், பெட்ரோலிய எரிபொருளின் விலையேற்றத்தை ஐ.மு.கூட்டணி ஆட்சியின் போது கடுமையாக எதிர்த்து வந்த இவர் பதவிக்கு வந்தவுடன் அதேகொள்கையை எத்தகைய தயக்கமும் இன்றி அப்படியே நிறைவேற்றிவந்தார், கச்சா எண்ணெயின் விலை சரி பாதியாகக் குறைந்த பிறகும் அதற்கு ஏற்ப விலையைக்குறைக்காமல் புதிய வரிகளை விதித்து மிகவும் குறைவான அளவிலேயே விலைக்குறைப்பு செய்துள்ளார் அவர் எப்போது கருப்புப் பணத்தைக் கைப்பற்றி ஒவ்வொரு குடிமகனின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சத்தை சேர்க்கப் போகிறார் என்றுநாட்டு மக்கள் ஆவலுடன் காத்திருக் கின்றனர் அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது கொடுத்த வாக்குறுதிகளையும் அவை எவ்வாறு குப்பைக்கூடையில் வீசப்பட்டன என்பதையும் நாடறியும். ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம் என்றால் என்ன என்பதையும் அக்கோரிக்கையை மோடி ஏன் உடனடியாக ஏற்றுக்கொண்டார் என்பதை விளக்க வேண்டியுள்ளது.

1995 ஆம் ஆண்டில் ஒரு சிப்பாய் 25 ஆண்டுகள் பணி புரிந்துவிட்டு ஓய்வு பெற்றார் என்றால் அப்போது அவருக்கு கிடைத்து வந்த அடிப்படைச் சம்பளத்தின் அடிப்படையில் அவரது ஓய்வூதியமும் அதற்குரிய அகவிலை நிவாரணமும் வழங்கப்பட்டிருக்கும். 2014ம் ஆண்டில் முன்னர் குறிப்பிட்டவரைப்போல அதே 25 ஆண்டுகள் பணிபுரிந்து விட்டு அதே சிப்பாய் பதவியில் பணியாற்றி விட்டு ஓய்வு பெறும் ஒருவருக்கு அவருக்கு அப்போது கிடைக்கும் அடிப்படைச் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியமும் அதற்குரிய அகவிலை நிவாரணமும் நிர்ணயிக்கப்பட்டிருக்கும்,1995 க்கும் 2014 க்கும் இடையே சிப்பாய் பதவிக்கான அடிப்படைச் சம்பளம் உயர்த்தப்பட்டிருக்கும் என்பதால் அவருக்கு நிர்ணயிக்கப்படும் ஓய்வூதியம் 1995 ல் ஓய்வு பெற்ற சிப்பாயின் ஓய்வூதியத்தை விட கணிசமான அளவில் கூடுதலாக இருக்கும். ஒரே பதவியைவகித்து அதே அளவு பணிக்காலத்தைக் கொண்ட இரு வருக்கிடையே இத்தகைய வருமான இடைவெளி நியாயமானதல்ல என்ற உணர்வின் அடிப்படையில் எழுந்தது தான் இக்கோரிக்கை சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை எவ்வளவு நியாயமானதோ அது போலவே சமவேலைக்கு சம ஓய்வூதியம் என்பதும் மிகவும் நியாயமானதே, அதிலும் தொடர்ந்து ஏற்படும் விலையுயர்வினால் ரூபாயின் மதிப்பு சரிந்து வரும் நிலையில் தங்களது வாழ்க்கைத் தரத்தை முந்தைய நிலையிலேயே பராமரிக்க முடியாமல் தடுமாறிவரும் ஓய்வூதியர்களின் கோரிக்கையின் நியாயத்தை எவராலும் மறுக்க முடியாது, தேர்தலில் போட்டியிட்டு எப்படியாவது இந்தியாவின் பிரதமராகி விட வேண்டும் என்ற வெறியுடன் களமிறங்கிய மோடி அனைத்து பிரிவினரின் வாக்குகளையும் அள்ளிச் செல்வதற்காக வாக்குறுதிகளை வகை தொகையின்றி தாராளமாக வாரி வழங்கினார்.

இந்தியாவில் உள்ள முன்னாள் ராணுவத்தினரின் எண்ணிக்கை 22 லட்சத்தைவிட அதிகம். ராணுவத்தில் பணியாற்றிவிட்டு இறந்து போன விதவைகளின் எண்ணிக்கை 6 லட்சம். இவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் தலா 4 வாக்காளர்கள் இருந்தால் அந்த வாக்கு வங்கி ஒரு கோடியைத் தாண்டிவிடும் அந்த வாக்கு வங்கியை மொத்தமாக தன்பக்கம் இழுப்பதற்காகவே அவர் இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். இவரது உறுதி மொழியை நம்பி முன் னாள் ராணுவத்தினரும் கணிசமான எண்ணிக்கையில் வாக்களித்ததால் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இவரால் பிரதமராக முடிந்தது, கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் ஆகக் கூடிய செலவு எவ்வளவு அதற்கான வருவாயைத் திரட்டும் கொள்கை தம்மிடம் உள்ளதா என்பது பற்றியெல்லாம் அப்போது கவலைப்படாமல் அக்கோரிக்கையை உடனே ஏற்றுக்கொண்டார் இப்போது அதனை நிறைவேற்றுவதற்கான வழி தெரியாமல் திருதிருவென்று விழிக்கிறார் வசதி படைத்தவர்களின் மீது வரியை அதிகரித்து அரசின் வருவாயைப் பெருக்குவதற்கு பதிலாக பல லட்சம் கோடிகளை வரிச்சலுகையாக வழங்கும் கொள்கையை கடைப்பிடிக்கும் ஒருவரால் நிறைய செலவு பிடிக்கக் கூடிய இக்கோரிக்கையை நிறைவேற்றுவது என்பது எளிதானதல்ல. ஆனால் முன்னாள் ராணுவத்தினர் தங்களுடைய நியாயமான கோரிக்கைக்காக தொடர்ந்து போராட உறுதி பூண்டுள்ளனர். ஆகஸ்டு 24 முதல் முன்னணி ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளனர். இக்கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு நிறைய செலவு அதிகமாகும். அடுத்து ரயில்வே ஊழியர்களும் அதனைத் தொடர்ந்து மற்ற பகுதி அரசு ஊழியர்களும் இதே கோரிக்கையை எழுப்பக்கூடும் என்பதும் அவர்களின் எதிர்மறையான அணுகு முறைக்கான காரணம் என்று தெரிகிறது. ஆனாலும் தங்கள் இன்னுயிரைப் பணயம் வைத்து பனி படர்ந்த மலைகளிலும் பாலைவனங்களிலும், காடுகளிலும், மேடுகளிலும் பணியாற்றி நாட்டின் எல்லைகளைக்காத்து ஓய்வு பெற்ற அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும் விதத்தில் அவர்களின் கோரிக்கையை தாமதமின்றி ஏற்பது தான் மோடி அரசின் முன்னே உள்ள ஒரேவழி.

தேர்தலில் போட்டியிட்டு எப்படியாவது இந்தியாவின் பிரதமராகி விட வேண்டும் என்ற வெறியுடன் களமிறங்கிய மோடி அனைத்து பிரிவினரின் வாக்குகளையும் அள்ளிச்செல்வதற்காக வாக்குறுதிகளைவகை தொகையின்றி தாராளமாக வாரி வழங்கினார்.

Leave A Reply

%d bloggers like this: