ஒன்றாக இருந்த தஞ்சை மாவட்டம் அதைத் தொடர்ந்து நாகை, இப்போது திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் விளத்தூர் என்பது ஒரு சிறிய கிராமம் ஆகும். அன்று அதன் மக்கள் தொகை வெறும் 300 ஆகும். இன்று 3000த்திற்கும் மேல். பாங்கலுக்கு அடுத்தாற்போல் உள்ளது அந்த கிராமம். சுப்பிரமணிய அய்யர் பண்ணை என்பது தான் அந்தக் கிராமத்தின் பெரிய பண்ணையாகும். அந்த பண்ணையில் தனுஷ்கோடி குடும்பம் அடிமையாக இருந்தது. தனுஷ்கோடி சிறுவனாக இருந்து வளர்ந்து ஓரளவு விபரம் புரிய தொடங்கியதும் நடைமுறையில் உள்ள கிராம சமூகப் பழக்க வழக்கத்தின் மீதே வெறுப்பு ஏற்படத் துவங்கியது. மூட பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடாமல் கிராமத்தினர் இருந்ததும் பண்ணையாட்கள், ஈவிரக்கமின்றி பண்ணையார்களால் அடித்து உதைக்கப்பட்டதும் ஆடு, மாடுகளை விட அவர்களை கேவலமாக நடத்தியதும்,நோய் நொடிகள் வந்துவிட்டால் கவனிப்பாரின்றி அவர்கள் நடத்தப்பட்டதும் போன்ற இன்னும் பல்வேறு கொடுமைகள், சிரமங்களை கண்டு தனுஷ்கோடி கோபம் அடைந்தார்.

தனுஷ்கோடிக்கு திருத்துறைப்பூண்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த அய்யாசாமி பிள்ளையின் தொடர்பு கிடைத்தது. தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த அய்யாசாமி பிள்ளை தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்தில் அக்கரை கொண்டிருந்தார். தாழ்த்தப்பட்டோர்கள் ஒவ்வொருவரையும் அழைத்துபேசி ஒவ்வொரு கிராமத்திலும் ஆதி திராவிடர் வாலிபர் சங்கம் அமைக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார். இந்த அமைப்பின் திட்டம் தனுஷ்கோடிக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன்படி கிராமங்கள், தெருக்களை சுத்தம் செய்வது, மண்பாத்திரங்களை சுத்தமாக கழுவி வைப்பதற்கு கிராமப்புற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எடுத்துரைப்பது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளை மற்ற வாலிபர்களை இணைத்துக் கொண்டு தனுஷ்கோடி முன்னின்று செய்தார். பண்ணை வேலைக்கு போகாமல் மற்ற வாலிபர்களையும் சேர்த்துக் கொண்டு வெட்டியாக ஊரை சுற்றிக் கொண்டிருக்கிறானே என்று சேரிப் பெண்கள் இவர் மீது வெறுப்படைந்ததும் உண்டு.

1937-38 காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வள்ளுவக்குடி வாத்தியார் பெத்த பெருமாள் என்பவரைக் கொண்டு பாங்கல் ஆற்றங்கரையில் ஒரு பள்ளிக்கூடம் கட்டினர். பெத்த பெருமாள் பெரியார், அம்பேத்கரின் தீவிர ஆதரவாளர். அவர் திருவாரூரில் பெரியார் பேசிய கூட்டங்களுக்கு தனுஷ்கோடியை அழைத்துச் சென்றார். ஏற்கனவே பிராமண பண்ணையார்களிடம் அடி வாங்கியிருந்ததாலும் தன்னுடைய தந்தையும், தாயும் அவர்களிடம் பண்ணை வேலை செய்து பல்வேறு சித்ரவதையை அனுபவத்திருந்ததாலும் பெரியாரின் பிராமண எதிர்ப்புப் பிரசங்கம் தனுஷ்கோடிக்கு மிகவும் பிடித்து இருந்தது. பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி என்று பெரியார் பேசியது தனுஷ்கோடிக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. சில மாதங்களுக்கு பின்பு திருத்துறைப்பூண்டியில் பெரியார், இ.வி.கே.எஸ்.சம்பத், எம்.ஆர்.ராதா, அண்ணாதுரை, நெடுஞ்செழியன் ஆகியோர் பேசிய கூட்டத்திற்கு தனுஷ்கோடி சென்றுள்ளார்.

கூட்டத்திற்கு சென்று திரும்பும் போது அவருக்கு ஒரு பெரிய அனுபவம் கிடைத்தது. பெரியார் இயக்கத்தைச் சேர்ந்த சன்னாவூர் பக்கிரிசாமி பிள்ளை, டீக்கடையில் பெரியார்அம்பேத்கார் பேட்ஜை அணிந்து கொண்டு அந்த டீக்கடைக்கு டீ குடிக்கச் சென்றுள்ளார். அவரது தோற்றத்தைக் கண்டு தாழ்த்தப்பட்டவன் என்பதை உணர்ந்த டீக்கடை பக்கிரிசாமியும், கடையில் இருந்த மற்றவர்களும் அங்கேயே அவரை புரட்டி எடுத்துள்ளனர். நான் பெரியார் கட்சிக்காரன் என்று தனுஷ்கோடி உரக்கக் கத்தியுள்ளார். என்னடா பெரியார் கட்சி என்று இன்னும் வேகமாக அடித்துள்ளனர். பெரியார் இயக்கத்தில் உள்ளோரிடம் சொல்லுக்கும்,செயலுக்கும் உள்ள வேறுபாடுகளை தனுஷ்கோடி உணர்ந்துள்ளார். டீக்கடை, கள்ளுக்கடை என்று எங்கு சென்றாலும் அரிசன மக்களுக்கு என தனிவாசல், தனிக் குவளை இருந்தது. தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடிய காலம் அது. 1942 ஆம் ஆண்டு டிசம்பர் மாத கடைசியில் தனுஷ்கோடி ஒரு புதிய பத்திரிகையை பார்த்துள்ளார். அதுதான் ஜனசக்தி. அது கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகை என்றும் அதில் விவசாயிகள், தொழிலாளிகள், பண்ணையடிமைகள், தீண்டாமைக் கொடுமை பற்றி எழுதப்படுகிறது என்று தனுஷ்கோடியிடம் கூறப்பட்டது. அத்துடன் சேர்த்து இன்னொரு புதிய தகவலையும் பரப்பினர்.

அதுதான் பண்ணையடிமைக்கு எதிராக, சாணிப்பால் சாட்டையடிக்கு எதிராக சமர்புரிய கன்னடத்து அய்யர் ஒருவர் தஞ்சை மாவட்டத்திற்கு வந்துள்ளார் என்றும் அவர் பெயர் பி.சீனிவாசராவ் என்றும் சொல்லப்பட்டது. தனுஷ்கோடிக்கு ஒரு குறுகுறுப்பு ஏற்பட்டது. இங்கு கொடுமை புரிவதும் பிராமணப் பண்ணையார்கள், அவரும்பிராமணர். ஏற்கனவே பெரியார் அம்பேத்கார் என்று விரும்பி சென்று நம்மை துவைத்தெடுத்தார்கள். இது எப்படி சரிப்பட்டு வருமா என்று யோசித்தார். அந்தநேரத்தில் பி.சீனிவாசராவ் தாழ்த்தப்பட்டவர்களின் வீட்டுக்கு வந்து அவர்களின் பிரச்சனைகளை எல்லாம் கேட்டறிந்து அவர்கள் வீட்டிலேயே அவர்கள் சமைத்த சாப்பாட்டையே சாப்பிட்டது தனுஷ்கோடிக்கு இதுவரை இல்லாத அளவிற்கான மகிழ்ச்சி. மாற்றமும் வீரமும் தனுஷ்கோடியிடம் தீவிரமாகியது. அதன்பிறகு தான் தென்பரை இயக்கம், நாணலூர் கலவரம், நிலப்பிரபுக்களுக்கும் விவசாய சங்கத்திற்கும் இடையே ஏற்பட்ட முதல் ஒப்பந்தம், சாட்டையடி, சாணிப்பால் நிறுத்தம், வெண்மணிச் சம்பவம் என ஏராளமான நிகழ்வுகள்,கோரச்சம்பவங்கள், தலைமறைவு மற்றும் சிறைவாசம் என நெஞ்சை உருக்கும் பல்வேறு சம்பவங்களில் பி.எஸ்.தனுஷ்கோடியின் அளப்பரிய பங்களிப்பு இருந்தது. 1964-ம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்ட போது பி.எஸ்.தனுஷ்கோடி இதர பல தோழர்களுடன் வெளியேறி வந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதில் முழுமூச்சுடன் செயலாற்றினார். அந்தஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியா முழுவதும் மார்க்சிஸ்ட் தலைவர்கள் கைது செய்யப்பட்ட போது பி.எஸ்.தனுஷ்கோடியும் கைது செய்யப்பட்டார். சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் அவர் கடலூர் சிறையில் பாதுகாப்புக் கைதியாக வைக்கப்பட்டார். 1962ம் ஆண்டில் இந்திய – சீன எல்லை மோதல் நடைபெற்ற போதும் 1975ம் ஆண்டில் அவசர நிலை பிரகடனத்தின் போதும் பி.எஸ். தனுஷ்கோடி பாதுகாப்புச் சட்டபடி கைது செய்யப்பட்டார். அவரது வாழ்வில் 9ஆண்டுகள் 9மாதம் சிறைவாசம் அனுபவித்துள்ளார். ஓராண்டுகாலம் தலைமறைவு வாழ்க்கை நடத்தியுள்ளார். 1958-ம் ஆண்டில் பாங்கல் ஊராட்சிமன்றத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் அவர் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றார். 1970-ம் ஆண்டில் தலைஞாயிறு ஊராட்சிஒன்றிய பெருந்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பி.எஸ்.தனுஷ்கோடி 1973ம் ஆண்டு வரை அப்பதவியில் இருந்தார். மீண்டும் 1986ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் ஒன்றிய பெருந் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தஞ்சை மண்ணில் செங்கொடி இயக்கத்தின் வழியில்தான் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரபல தலைவர்களில் ஒருவராக தனிக்கொடி என்ற தனி மனிதர் பி.எஸ்.தனுஷ்கோடி என்ற மாபெரும் தலைவனாக பரிணமித்துள்ளார். அவர் எந்த பொருளாதாரமும் பணவசதியும் இல்லாமல் சமூகக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடி மக்கள் தலைவனாக மாறியுள்ளார். செங்கொடி இயக்கத்தின் மகத்தான போராட்டம் தான் எழுதப் படிக்கத் தெரியாத தனுஷ்கோடியை மிக உயர்ந்த பதவிக்கு இட்டுச் சென்றுள்ளது. இன்னும் சொல்லப் போனால் ஒரு காலத்தில் பல்வேறு பிரச்சனைக்களுக்காக ஊர் பஞ்சாயத்து கூட்டி கட்டி வைத்து அடிக்கப்பட்டவர்கள். இன்று மேல்சாதியினர் சம்பந்தப்பட்ட பல பஞ்சாயத்துகளை தீர்த்து வைக்கும் தலைவர்களாக கம்யூனிஸ்ட் இயக்கம் உயர்த்தியுள்ளது. தனுஷ்கோடி மனோன்மணி தம்பதியருக்கு புருசோத்தமன், அசோகன் என்ற இரு மகன்கள், விஜயலெட்சுமி, சுசீலா, சித்ரா என்ற மூன்றுமகள்கள் கிருஷ்ணவேணி, மாலதி என்ற இரு மருமகள்கள், குணசேகரன், செல்வராஜ் என்ற இரு மருமகன்கள் அவர்கள் ஈன்றெடுத்த பேரன்கள்,பேத்திகள் என அந்த குடும்பங்கள் பல்கலைக்கழகமாக மாறியுள்ளது.உங்கள் வாழ்வில் எதை பெருமையாகக் கருதுகிறீர்கள் என்று பி.எஸ்.தனுஷ்கோடியிடம் கேட்டபோது எழுத, படிக்கத் தெரியாத பண்ணை அடிமையாக இருந்த என்னை வர்க்க உணர்வு பெற்ற மனிதனாக்கி மக்கள் ஊழியனாக தலை நிமிரச் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருப்பதையே பெருமைக்குரியதாக கருதுகிறேன் என்றார். 2015 ஆக. 19 பி.எஸ்.தனுஷ்கோடியின் 18ம் ஆண்டு நினைவு தினம்(ஆதாரம்: தோழர் என்.ராமகிருஷ்ணன் எழுதிய ஒரு பண்ணை அடிமையின் விடுதலை போராட்டம் என்ற நூலில்)

Leave A Reply

%d bloggers like this: