சென்னை, ஆக. 18-

முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக கூறி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை அதிமுகவினர் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சென்னை ராமாபுரத்தில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.இதற்கிடையே அதிமுக எம்.பி., நவநீதகிருஷ்ணன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திங்களன்று (ஆக. 17) இரவில் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது அதிமுகவினர் சத்தியமூர்த்தி பவன் கட்டட முகப்பில் வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் பெயர்ப் பலகையை உடைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் கட்டடத்துக்கு உள்ளே கற்களையும், சோடா பாட்டில்களையும் வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.செவ்வாயன்று (ஆக. 18) இரண்டாவது நாளாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஈவிகேஎஸ்.இளங்கோவனைக் கண்டித்து அவரது உருவ பொம்மைகளை எரிந்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தலைவர்கள் கண்டனம்

திமுக தலைவர் கருணாநிதி: நாட்டிலே சட்டம், ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பிலே உள்ள ஆளுங்கட்சியினரே, சட்டத்தைத் தங்கள் கையிலே எடுத்துக் கொண்டு, காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனிற்கும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீட்டிற்கும் சென்று வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவதும், அவருடைய உருவ பொம்மையை எரிப்பதும் யாரும் ஏற்றுக் கொள்ளக் கூடியவை அல்ல.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: தமிழகத்தின் பொது அமைதியைக் குலைத்து, ஆளும் கட்சியின் வன்முறை மூலம் எதிர்க்கட்சிகளை நசுக்கிவிடலாம் என்ற பாசிச மனப்பான்மையுடன் தமிழ்நாட்டு காவல்துறையினரின் கைகளையும் முதலமைச்சர் கட்டிப்போட்டுவிட்டார். முதலமைச்சரின் இத்தகைய அபாயகரமான போக்கை அனைத்து அரசியல் கட்சிகளும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். வன்முறையில் ஈடுபட்ட ஆளும் கட்சி எம்.பி. உள்ளிட்ட குண்டர்களைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave A Reply

%d bloggers like this: