இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவு அந்த நாட்டு மக்களால் மட்டுமின்றி தமிழக மக்களாலும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டது. இலங்கைத் தமிழ் மக்கள் தங்களது நாட்டில் கண்ணியத்தோடும், சம மரியாதையோடும், சம உரிமையோடும் வாழ்வதற்கு உரிய வகை செய்யப்பட வேண்டும் என்று விரும்பும் அனைவராலும் வரவேற்கத்தக்க முடிவாக இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவு அமைந்துள்ளது. இந்தத் தேர்தலில் பல்வேறு விசித்திரங்கள் அரங்கேறின. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி சார்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதற்கு முதலில் இணங்கவில்லை என்றாலும், கட்சிக்குள் இன்னமும் தனக்கு இருக்கும் பிடியை பயன்படுத்தி ராஜபக்சே வேட்பாளராக போட்டியிட்டார்.

ஆனால் மைத்ரி பால சிறிசேன மட்டுமின்றி அந்தக் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்காவும் ராஜபக்சேவை ஆதரிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த ராஜபக்சே பிரதமர் பதவியை கைப்பற்றுவதன் மூலம் அதிகார வளையத்திற்குள் மீண்டும் நுழைய முயன்றார். இதன் மூலம் தன்னுடைய குடும்பத்தாரின் அக்கிரமங்களையும், ஊழல்களையும் மறைத்து விட முடியும் என்பது அவரது கணக்காக இருந்தது. ஆனால் அவரது கணக்கை இலங்கை மக்கள் முறியடித்துவிட்டனர். ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி சிறுபான்மை தமிழ் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. குறிப்பாக அனைத்துப் பகுதி மக்களுக்கும் சகஜ வாழ்வு, தமிழ் மக்களுக்கு கூடுதல் உரிமை என்பன போன்ற வாக்குறுதிகள் அவரால் வழங்கப்பட்டன.

மீண்டும்பிரதமராக பொறுப்பேற்க உள்ள ரணில் விக்கிரமசிங்கே அனைவரும் ஒன்றிணைந்து பண்பட்ட, நாகரிகமான சமூகத்தை உருவாக்குவோம் என்று குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் நீண்ட நெடுங்காலமாக நீடித்து வந்த உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்தாலும் இனப் பிரச்சனைக்கு இன்னமும் கூட முழுமையான தீர்வு எட்டப்படவில்லை. தமிழர்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து ராணுவத்தை முற்றாக விலக்கிக்கொள்வது, பறிக்கப்பட்ட அவர்களது நிலங்களை மீள வழங்குவது, போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நம்பகத் தன்மையுள்ள விசாரணை நடத்தி தவறிழைத்தவர்களை தண்டிப்பது, தமிழ் மொழி, பண்பாடு ஆகியவற்றை பாதுகாத்துக் கொள்வதற்கான உறுதி, அரசுப்பணிகளில் உரிய பிரதிநிதித்துவம் போன்ற தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும் போதுதான் உண்மையான சமூக நல்லிணக்கம், ஒற்றுமை என்பது சாத்தியமாகும்.

அதற்கு ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவிற்கு இலங்கை மக்கள் அருமையானதொரு வாய்ப்பை ஜனாதிபதி தேர்தலின் மூலம் வழங்கினர். அதை இந்தத் தேர்தலில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தத் தேர்தலில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் தமிழர்கள் வசிக்கும் மாகாணங்களில் நல்ல முறையில் வாக்குகள் பதிவானதோடு, தமிழ் தேசிய கூட்டமைப்பு 14 இடங்கள் வரை வெற்றி பெற்றுள்ளதாகும். தேசிய அரசியலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு காத்திரமான பங்களிப்பை செலுத்துவதற்கு இதன்மூலம் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அமைச்சரவையில் சேரப் போவதில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியுள்ள போதும் இப்போது கிடைத்துள்ள வாய்ப்பை அரசியல் ரீதியாக முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ராஜபக்சேவின் பிரதமர் கனவை இந்தத் தேர்தல் முறியடித்துள்ளது என்பதை விட இனப் பகைமையை விட்டொழித்து அனைத்துப் பகுதி மக்களும் நேசப் பூர்வமாக சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பை இந்தத் தேர்தல் வழங்கியுள்ளது என்பதுதான் முக்கியமான செய்தியாகும்.

Leave A Reply

%d bloggers like this: