புதுதில்லி, ஆக.17-

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் கோரிக்கையை அமல்படுத்துவதற்கு தேதியை அறிவிக்க வேண்டும் என்று கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் ராணுவத்தினர் ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் என்ற கோரிக்கையை நிறை வேற்ற வேண்டும் என்று நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக இந்த கோரிக்கையை நிறைவேற்றவதாக வாக்குறுதி அளித்து முன்னாள் ராணுவத்தினரின் வாக்குகளையும் ஆதரவையும் பெற்றது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் முன்னாள் ராணுவத்தினரின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற முடியாது; அதை பரிசீலித்து வருவதாகக் கூறி கோரிக்கையை நிறைவேற்ற எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

காயமடைந்தவர்களுக்கு பிருந்தா காரத் ஆறுதல்

இதனால் இக்கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தில்லியிலுள்ள ஜந்தர் மந்தரில் முதலில் அடையாள உண்ணாவிரதத்தை தொடங்கினர். ஆனால் கடந்த சுதந்திர நாளுக்கு முன்னதாக 14ம் தேதியன்று உண்ணாவிரதம் இருந்த அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். சுதந்திர நாளன்று மோடி ஆற்றிய உரையிலும் இக்கோரிக்கையை நிறை வேற்றுவது தொடர்பாக எந்தத் தேதியையும் அறிவிக்காமல் வெற்று வாக்குறுதியை அளித்ததால் ஏமாற்றம் அடைந்த முன்னாள் ராணுவத்தினர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் போலீசாரின் தடியடியால் காயமடைந்த அவர்களின் குடும்பத்தினரையும் 17ம் தேதியன்று பிருந்தா காரத் நேரில் சந்தித்து ஆதரவு அளித்து பேசினார். இதனைத் தொடர்ந்து முன்னாள் ராணுவத்தினரின் கோரிக்கையை நிறைவேற்ற திட்டவட்டமாக ஒரு தேதியை அறிவிக்க வேண்டுமென்று நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:

ஓய்வு பெற்ற ராணுவத்தினரின் மனைவியர் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் என்னைச் சந்தித்து இப்பிரச்சனை தொடர்பாக அவர்களது பரிதாப நிலையை என்னுடன் பகிர்ந்து கொண்டனர். ஆகஸ்ட் 17 திங்களன்று நான் போராட்டம் நடைபெறும் இடமான ஜந்தர் மந்தருக்கு சென்றேன். அங்கு ராணுவத்தினர் கூறிய விசயங்களினால் ஆழ்ந்த வேதனை அடைந்தேன். நாட்டைக் காக்கும் நாட்டிற்கு அளப்பரிய சேவையாற்றிய அவர்கள் இன்று காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடும்படி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இது நாட்டிற்கே அவமானகரமாகும். இப்படிப்பட்ட நிலைமை நாட்டை காக்க தங்களது உயிரைத் தியாகம் செய்யும் ராணுவத்தினரைப் போற்றும் `ஜெய் ஜவான்‘ என்ற கருத்தாக்கத்தையே கேலி செய்வதாக உள்ளது. ராணுவத்தினர் கீழ்க்கண்ட கேள்விகளை கேட்கின்றனர் முந்தைய அரசும் தற்போதைய அரசும் இக்கோரிக்கையை நிறைவேற்றுவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற ஏன் இந்த அரசு ஒரு தேதியை அறிவிக்க மறுக்கிறது?

சுதந்திர நாளை முன்னிட்டு போலீசாரால் தாக்கப்படும் அளவுக்கு நாங்கள் என்ன குற்றம் செய்தோம்? மத்திய அரசு நடந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்து ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லை. தேசத்திற்காக உயிரை அபாயத்தில் வைத்திருப்பவர்களுக்காக 8300 கோடி ரூபாய் கூட அரசிடம் இல்லையா? பிரதமர் அவர்களே நாடு முழுவதும் ஒரே பதவி ஒரே ஓய்வூதியக் கோரிக்கையை அமல்படுத்த ஆதரவும் தோழமையும் தெரிவித்து நிற்கிறது. அனைத்துக் கட்சிகளும் அனைத்து மாநிலங்களும் இப்பிரச்சனையில் பரந்த அளவில் ஒருமித்த கருத்துணர்வை கொண்டுள்ளனர். இப்பிரச்சனை தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தங்களுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார். ஆகஸ்ட் 14ம் தேதியன்று போலீசார் அவர்களை கடுமையாகத் தாக்கியபோது ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு ஆதரவாக அரசு நிற்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. எனவே அரசின் சார்பாக ஒரு அமைச்சரை அனுப்பி நடந்த சம்பவத்திற்காக அவர்களிடம் வருத்தத்தை தெரிவியுங்கள். ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் தேதியை அறிவிக்குமாறு நான் தங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். ஓய்வுபெற்ற ராணுவத்தினரின் குடும்பத்தினர் குறிப்பாக பெண்களைச் சந்தித்து அவர்களின் வேதனைகளை கேட்டறியுமாறு வேண்டுகிறேன். அது உங்களை உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தூண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் பிருந்தா காரத் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: