துவக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசமாக அனைத்து குடிமக்களுக்கும் வழங்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று. ஆனால் மத்தியில் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவர்கள் கல்வித் துறையை குறிப்பாக உயர்கல்வித் துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் கொள்கையைப் பின்பற்றி வருகின்றனர். இதனால் ஏழை, எளிய மக்களுக்கு கல்வி என்பது எட்டாக் கனியாக மாறி வருகிறது. ஒரு காலத்தில் சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வி தற்போது பணத்தின் பெயரால் மறுக்கப்படுகிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் வகை தொகையின்றி கட்டணம் என்ற பெயரிலும், நன்கொடை என்ற பெயரிலும் கொள்ளையடித்து வருகின்றன. இதனால் அதிருப்தியடையும் மக்களின் கோபத்தை மடைமாற்ற ஆட்சியாளர்கள் கண்டுபிடித்த வழிதான் `கல்விக் கடன்‘ என்பது படிப்பாளிகளை கடனாளியாக்குகிற வேலை இது. அப்படியும் இந்த கடன் எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை.

அப்படியே ஒருவேளை கடன் கிடைத்து படித்து முடித்த பிறகு வேலை கிடைக்கவில்லை என்றாலும் குறிப்பிட்ட காலம் முதல் வட்டியுடன் கடனை திருப்பிச் செலுத்தியாக வேண்டும். இது பல குடும்பங்களில் பெரும் நெருக்கடியை உருவாக்கி உள்ளது. இளைஞர்களுக்கு வேலை கிடைக்காத விரக்தி ஒருபுறம் என்றால் வட்டியோடு சேர்த்து கடன் கட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இன்னொரு புறம். மறுபுறத்தில் விண்ணப்பிக்கும் தொகையை கடனாக தருவதிலும் பல்வேறு இடர்பாடுகளை மாணவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. உதாரணமாக சென்னையில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் எம்.டெக் படிப்பில் சேர்ந்த மாணவர் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக ரூ.4.70 லட்சம் கட்ட வேண்டியிருக்கும் என அந்தப் பல்கலைக்கழகம் சான்றிதழ் அளித்துள்ளது. ஆனால் அரசு நிர்ணயித்த கட்டண அடிப்படையில் ரூ.1.70 லட்சம் மட்டுமே கடனாக வழங்க முடியும் என வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் அடிப்படையில் கல்வி நிறுவனங்களின் கட்டண மதிப்பீட்டுச் சான்றிதழின் அடிப்படையில் வங்கிகள் கல்விக்கடன் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்டணத்தை கட்ட வசதியில்லாமல்தான் கல்விக் கடன் கோரப்படுகிறது. அதிலும் பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்படுகின்றன. இது ஒருபுறம் இருக்க கடந்த மார்ச் 31ந் தேதி வரை வங்கிகளின் வாராக் கடன் ரூ.2.99 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்றும், 530 கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக் கடன் தொகை ரூ.4.03 லட்சம் கோடியாக உள்ளது என்றும் இதில் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் மட்டும் 1.12 லட்சம் என்றும் தொழிற்சங்கத் தலைவர் சி.ஹெச்.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்குவதில் எந்த நிபந்தனையும் இல்லை. அதானிக்கு கடன் வழங்க பாரத ஸ்டேட் வங்கித் தலைவர் அவருடன் ஆஸ்திரேலியா சென்ற செய்தி அண்மையில் வெளியானது. இது பிரதமர் மோடியின் ஏற்பாடு.

ஆனால் ஏழை, எளிய மாணவர்கள் கடன் பெற வேண்டும் என்றால் அது காளை மாட்டில் பால் கறப்பதற்கு சமமான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. மோடி வகையறா கூச்சலிடும் வளர்ச்சி என்பது யாருக்கு என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

Leave A Reply