பெயர் மாறினால் இழிவு மாறுமா? ப.முருகன் எழுதிய கட்டுரையைப் படித்தேன். பெயர் மாறினாலும் இழிவு மாறாது என்பது உண்மை தான். ஏனெனில், ‘தேவேந்திர குலத்தான்‘ என்ற பெயர் ஏற்கெனவே அரசு அட்டவணையில் உள்ளது தான். 7 பிரிவுகளை உள்ளடக்கி- ‘தேவேந்திர குல வேளாளர்’ என்ற பொதுப் பெயரில் அழைக்கப்பட வேண்டு மென்பது- 7 பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடம் பரவலாக உள்ள கோரிக்கை. ஆனால், இதையே சாக்காக வைத்து, தேவேந்திர மக்களின் கண்களை, அவர்களின் கைகளை வைத்தே குத்தச் செய்யும் சதியில் சங்- பரிவாரக் கூட்டம் இறங்கியுள்ளது என்பதுதான் உண்மை.

இதை தீக்கதிர் கட்டுரை சரியாக எச்சரிக்கை செய்துள்ளது. அறக்கட்டளை பேர் வழி ஒருவர், ஒட்டுமொத்த தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கும் தான் ஏகப்பிரதிநிதி என்பது போல அமித்ஷாவை அழைத்து வந்து மாநாடு நடத்தி, பிரகடனமெல்லாம் வெளியிட்டுள்ளார். தேவேந்திர குல வேளாளர்களுக்கு இட ஒதுக்கீடே தேவையில்லை என்றும் அந்த ஆர்.எஸ்.எஸ். பேர்வழி கூறியிருக்கிறார். கூலிக்கான மாரடிப்பு என்பதைத் தவிர இதில் வேறொன்றுமில்லை. எனவே, இதைக்கூட விட்டுவிடலாம். ஆனால், தேவேந்திர குல வேளாளர் மக்கள் மீது ரொம்பவே அக்கறை உள்ளவர்கள் போல ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தியும், ‘கலவர ஸ்பெஷலிஸ்ட்’ அமித்ஷாவும் நடித்த நடிப்பு இருக்கிறதே, சிவாஜிகணேசனை மிஞ்சி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வளவு காலத்தில், எப்போதாவது ஆர்.எஸ்.எஸ். கூட்டமோ, பாஜகவோ தேவேந்திரர் மக்கள் மீது அக்கறைப்பட்டது உண்டா? கொடியங்குளமாகட்டும், தாமிரபரணி கொத்துக் கொலைகளாகட்டும், பரமக்குடியில் 7 தே.கு.வேளாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட அரச பயங்கரவாதமாகட்டும், அதற்கு முன்பு பழனிக்குமார் என்ற சிறுவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடுமையாகட்டும் இவர்கள் எட்டியாவது பார்த்திருப்பார்களா..? தே.கு.வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த திலீப் என்ற இளைஞனை காதலித்ததற்காக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளம்பெண் விமலா தேவி எரித்துக் கொலை செய்யப்பட்டார். பிற்படுத்தப்பட்ட வகுப்பு பெண்ணைக் காதலித்ததற்காக, தே.கு.வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கண்டம் துண்டமாக்கினார்கள். பள்ளப்பட்டி தே.கு.வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்ததற்காக ராமராஜபுரத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளம்பெண்ணையும், அவரது தோழியையும் தீர்த்துக் கட்டினார்கள். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சமீபத்தில் மட்டும் தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு எதிரான சாதிவெறிப் படுகொலைகள் 30-க்கும் மேல் நடந்துள்ளன. அமித்ஷா வந்து சென்றதற்குப் பின்பு கூட சுத்தமல்லி நாட்டாண்மை துரை என்பவர் கொலை செய்யப்பட்டார்.சங்- பரிவாரக் கூட்டமும், குருமூர்த்தியும், தங்கராஜ் என்பவரும் எங்கே போனார்கள்..? தே.கு.வேளாளர் மக்களுக்கு தீண்டாமைக் கொடுமையே இல்லை; அவர்கள் உயர்ந்தசாதி தான் என்றால், மேலே கண்ட இத்தனை படு கொலைகளும் எதற்கு நடந்தது..? தேவேந்திர குல வேளாளர் மக்கள் ஆர்.எஸ்.எஸ்.-ஸின் நரித்தந்திரத்தை அறியாமல் இல்லை. அவர்களை ஏமாற்றும் சங்-பரிவாரக் கூட்டத்தின் முயற்சி ஒரு போதும் பலிக்காது.

அ.பெருமாள், எஸ்.புளியங்குளம்

Leave A Reply

%d bloggers like this: