“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்”  என்றார் திருவள்ளுவர். பிறப்பினால் எல்லா உயிர்களும் ஒத்தவை தான்; செய்கிற தொழிலினால் ஏற்படும் சிறப்புக்கள் தான் வேறுபடும் என்பதே இதன் பொருள். ஆனால் இதற்கு நேர்மாறாக பிறப்பிலேயே இழிவையும் ஏற்றத்தாழ்வையும் ஏற்படுத்தியிருப்பது வருணாச்சிரமம் எனும் மநுவின் அதர்மதத்துவம். பிராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் எனும் நால்வருணம் தான் சதுர்வர்ணம் எனப்படுகிறது. இவற்றில் சேர்க்கப்படாதது பஞ்சமர் எனும் அஞ்சாம் பிரிவு. இதை சனாதன தர்மம் என்கிறது வைதீக மதமான பிராமணிய மதம். இந்தமதம் தான் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியா வந்த பிறகு இந்து மதம் என்று வரையறுக்கப்பட்டது.

தொழில் பிரிவுகளாய் இருந்த ஆரம்ப கால சாதிப்பிரிவுகளை பிராமணர்கள் தங்கள் மேலாதிக்கத்தை வலுப்படுத்தஆயிரமாயிரமாய் சாதிப்பிரிவுகளாய் உருவாக்கினர். பிரிட்டிஷார் தங்கள் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் இருந்த சாதிகளை எல்லாம் முற்பட்ட வகுப்பு – முன்னேறிய வகுப்பு (குஊ), பிற்படுத்தப்பட்ட வகுப்பு (க்ஷஊ), தாழ்த்தப்பட்ட வகுப்பு – பட்டியல் சாதி (ளுஊ), பழங்குடி மக்கள் (ளுகூ) என்று நான்கு வகைப்படுத்தினர். மதரீதியாக முஸ்லிம், கிறிஸ்தவர், பௌத்தர், சமணர், பார்ஸி, சீக்கியர், இவர்கள் அல்லாத இந்து மதத் தவர் என்று கணக்கிட்டனர். நாட்டின் விடுதலைப் போராட்டம் தீவிரமான போது “ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை சாதியில் இழிவு கொண்ட மனிதர் என்பர் இந்தியாவில் இல்லையே” என்றும்“எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு- நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு” – என்றும் முழங்கினார் பாரதியார்.

ஆனால் அதற்கு ரொம்பக் காலம் ஆகும் என்பது அவருக்கும் தெரியும். அவரும் சாதி வெறிபிடித்த சனாதனிகளால் சிரமப்பட்டவர் அல்லவா? அதனால் தான் `சாதி நூறு சொல்லுவாய் போபோபோ’ என்று வருகின்ற பாரதமும் போகின்ற பாரதமும் பாடலில் அவர்களை விரட்டினார். சாதியற்ற சமுதாயம் அமைப்பது என்ன அத்தனை எளிதா? அதனால் தான் நாடு விடுதலை பெற்ற பின்பு அரசியல் சட்டத்திலேயே தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு இட ஒதுக்கீடு சலுகை ஏற்படுத்தப்பட்டது.

68 ஆண்டுகளான பின்பும் கூடஅந்தச் சமூகத்து மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றம் சாத்தியமாக வில்லையே. இட ஒதுக்கீட்டின் தேவை இன்னும் நீடிக்கவே செய்கிறது.

நிழல்பட்டாலும் தீட்டாம்

21ம் நூற்றாண்டு துவங்கிய பின்னும் கூட மத்தியகால காட்டுமிராண்டித்தன, பத்தாம் பசலித்தன கொடுமைகள் அந்த மக்களுக்கு இழைக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு (குற்றம்) என்கிற கொடுமை எல்லாவற்றையும் மிஞ்சி நிழல் பட்டாலும் தீட்டு (குற்றம்) என்று ஒரு மாணவியை கொடூரமாகத் தாக்கிய சாதி வெறிச் செயலை என்ன வென்பது? நாகரிக சமுதாயம் வெட்கித்தலைகுனிய வேண்டாமா? ஆட்சியில் இருப்போர்க்கு இது அவமானம் இல்லையா? அவர்கள் இது பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்கள்.
ஏனென்றால் மனிதக் கழிவை மனிதரே அள்ளும் செயல் அவர்களுக்கு கடவுளால் விதிக்கப்பட்டது என்று கூறியவரல்லவா இப்போது பிரதமராக இருக்கிறார். அந்தச் சனாதன – மநுநீதிமானின் வாரிசிடம் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சிறுகுழு – எங்கள் சாதியின் பெயரை மாற்றுங் கள் என்று மனுப்போடுகிறது. போதுமான அளவு ஆட்களைப் பிடிக்க முடியாததால் ஒருமுறை ஒத்திப் போட்டு மறுமுறை மாநாடு(?) நடத்தப்பட்டிருக்கிறது. அதற்கு மத்திய ஆளும் கட்சியின் தேசியத் தலைவரான “கலவர ஸ்பெஷலிஸ்ட்’ அமித் ஷாவே வந்திருக்கிறார் என்றால் சொல்லவும் வேண்டுமோ? இந்தநிகழ்வின் பெயரே “தேவேந்திரர் குல வேளாளர் என அரசு ஆணை பெறுவதற்கான பிரதிநிதிகள் மாநாடு” என்பதாகும். பள்ளர், குடும்பர், காலாடி, பண்ணாடி, மூப்பர், தேவேந்திரர், வாதுரியார் எனும் ஏழு சாதிகளை தேவேந்திரர் என இணைக்க வேண்டும் என்பது தான் கோரிக்கை.

இந்தக் கோரிக்கையை எழுப்பியது யார்? தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை. அதன் தலைவர் ம.தங்க ராஜ். அதனோடு இணைந்து இந்த மாநாட்டை நடத்தியது யார்? சுதேசி விழிப்புணர்வு இயக்கம். அதன் தலைவரான ஆர்எஸ்எஸ்காரரான ஆடிட்டர் குரு மூர்த்திதான். அவர் இந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார், தங்கராஜ் தனது குரு என்று. குருமூர்த்திக்கே குரு என்றால் அவரது நதி மூலம், ரிஷி மூலம் எதுவென்று புரிந்து கொள்வதில் சிரமம் ஏதுமில்லையே. ஆர்எஸ்எஸ், பாஜக – பரிவாரங்கள் தங்கள் கட்சிக்கு ஆள்பிடிப்பதற்கு பலவிதமான முயற்சிகளில் ஈடுபடுவார்கள் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு.

ஆர்எஸ்எஸ் ஆசியுடன்

பழங்குடி மக்களை வளைத்துப் பிடிக்க வேண்டும் என்பதற்காக `வனவாசி கல்யாண்’ என்றொரு அமைப்பை உருவாக்கி சில நடவடிக்கைகளில் ஈடுபட்டதை நினைத்துப் பார்த்துக் கொள்ளலாம். தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் காலூன்ற ஆர்எஸ்எஸ் ஆசியுடன் `சுயம்புவாகவே’ தோன்றியது இந்த அறக்கட்டளை. இதன் நடவடிக்கைகள் அவ்வப்போது வலைத்தளங்களில் தென்படும். அந்த வலையில் சிக்கிய-பிடித்த-சிலர் வந்திருப்பார்கள், இந்த மாநாட்டுக்கு. மற்ற தலைவர்கள் எல்லாம் பாஜகவினரேயாவர்.

அதன் பொதுச் செயலாளர் முரளிதரராவ், செயலாளர் எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன், இரா.ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள். இந்த தேவேந்திரர் கோரிக்கை எப்படிவந்தது? பள்ளர் என்பது தவறு சங்க இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் மள்ளர் என்றே உள்ளது. ஓலைச் சுவடிகளில் எழுதும் போது வசதிக்காக `ப்’ என்று எழுதினர். அதனால் பள்ளர்கள் ஆயிற்று. எனவே மள்ளர் என்றே அழைக்க வேண்டும் என்று குருசாமி சித்தர் போன்றோர் கூறுகின்றனர். சுப.அண்ணா மலை மள்ளர்நாடு என தன் அமைப்புக்கு பெயர் வைத்துள்ளார். ஆனால் டாக்டர் க.கிருஷ்ணசாமி, தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பள்ளர், காலாடி, பண்ணாடி உள்ளிட்ட ஆறு சமுகத்தினரை சேர்த்து ஒரே பிரிவாக `தேவேந்திர குல வேளாளர்’ என்றழைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரி வருகிறார்.

ஆயினும் அவர் இட ஒதுக்கீடு வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் இவர்களோ ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறார்கள். தேவேந்திரர் கோரிக்கை ஏன் எழுகிறது? பள்ளு, பறை என்று இழிவாகக் குறிப்பிடுகிறார்கள் இதர சாதியினர். எனவே இந்தப் பெயரை மாற்றிவிட்டால் அப்படி அழைக்கமாட்டார்கள் என்று நினைக்கிறார்கள் போலும். ஆனால் இந்த மாற்றம் மட்டுமே இழிவைத் துடைத்து விடுமா? சாதியினால் ஏற்படும் இந்த இழிவைத் துடைத்தெறியவே டாக்டர் அம்பேத்கர்தான் சாகும் போது இந்துவாக சாகமாட்டேன் என்று கூறினார். அதன் படியே அவர் தன் ஆதரவாளர்களுடன் புத்தமதத்துக்கு மாறினார்.

மீனாட்சிபுரம் நிகழ்வு

சாதி இழிவைத் துடைத்து விடலாம் என்று எண்ணியே கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னால் குமரி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் பள்ளர் சமூக மக்கள் முஸ்லிமாக மதம் மாறினார்கள். அதனால் ஆர்எஸ்எஸ்காரர்கள் இந்து முன்னணி என்ற பெயரில் இராம.கோபாலன், தாணுலிங்க நாடார் போன்றவர்களை முன்னிறுத்தி கலவரத்தை ஏற்படுத்தினார்கள். அப்போது கம்யூனிஸ்ட்டுகளும் குன்றக் குடி அடிகளாரும் அப்போதைய முதல்வர் எம்ஜிஆருக்கு முன்பாகவே அங்கு சென்று அமைதி ஏற்பட வழிவகுத்தனர் என்பது வரலாறு. அது இருக்கட்டும்.அப்படி மாறியவர்கள் முஸ்லிம் சமூகத்தில் சமமாக மதிக்கப்படுகிறார்களா? நடத்தப்படுகிறார்களா? திருமண கொள்வினை கொடுப்பினை நடைபெறுகிறதா? இல்லை என்பதே நடைமுறை யாக இருக்கிறது.

இதற்கு இலக்கியச் சான்றாக அன்வர் பாலசிங்கத்தின் `கருப்பாயி என்ற நூர்ஜஹான்‘ நாவல் உள்ளது. இதனை கவிஞரும் ஆய்வாளருமான ஹெச்.ஜி.ரசூல் தனது ஜிகாதி – பதுங்கு குழியில் மறைந்திருக்கும் ஒரு சொல் எனும் நூலில் எடுத்துக்காட்டியுள்ளார்.இது மட்டுமின்றி, கிறிஸ்தவ மதத் துக்கு மாறியவர்களின் நிலைமை ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை. சாதியக்கட்டமைப்பை பலமாகக் கொண்டிருக்கும் இந்து மதம் தன் பாதிப்பை பிற மதங்களிலும் உண்டாக்கிவிட்டது என்பதே நிதர்சனமான உண்மை. அவர்கள் கிறிஸ்தவர்கள் ஆனதால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று குறிப்பிடப்பட்டு இடஒதுக்கீட்டுச் சலுகையை இழந்தனர். அதனால் தற்போது தலித் கிறிஸ்தவர்களுக்கும் தலித் இஸ்லாமியர்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை பலமடைந்து வருகிறதை காண்கிறோம். முஸ்லிம், கிறிஸ்தவம் மட்டுமில்லை; புத்தமதத்துக்குப் போனாலும் கூட தாழ்த்தப்பட்ட நிலைமாறவில்லை. சமூக, பொருளாதார, அரசியல் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதையே இன்றைய நிலைமை உணர்த்துகிறது.

சப்பாணின்னு தான்…

இதுவெல்லாம் உணர்த்துவது என்ன வென்றால் பெயர் மாற்றம் செய்தாலும் சமூக, பொருளாதார நிலைமை எதுவும் மாறாது என்பதைத் தான். ஆனால் இப்போதிருக்கும் இந்த இழிவு பெயரளவில் மாறுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுமே என்று நினைக்கிறார்கள் போலும்.

ஆனாலும் தேவேந்திரர் என்றே பெயர் மாற்றம் செய்யப்பட்டாலும் கூட சமூகத்தில் மற்றவர்கள் எப்படிக் குறிப்பிடு வார்கள். பழையபடி பள்ளர், குடும்பர் போன்றவற்றை `ன்’ விகுதி போட்டுத்தானே குறிப்பிடுவார்கள். அது இழி வில்லையா? பதினாறு வயதினிலே திரைப்படத்தில் கமலஹாசன், ஸ்ரீதேவியிடம், “யாரு கோபாலகிருஷ்ணன்னு கூப்புடுறா, எல்லாம் சப்பாணின்னு தான் கூப்பிடுறாங்க” என்ற சொல்வது தான் நினைவுக்கு வருகிறது.

இதர சமூகத்தவரிடம் மனதளவிலான மாற்றம் ஏற்படாத வரை அரசு ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வது எந்தப் பயனையும் தராது. இப்போதிருக்கும் சாதி முறையை, படிநிலையை மேலும் மேலும் கெட்டிப்படுத்துவதற்கான சூழலையே ஆர்எஸ்எஸ், பாஜக பரிவாரங்களும் சாதியசங்கங்களும் செய்து கொண்டிருக்கின்றன. காதல் திருமணங்கள், சீர்திருத்தத் திருமணங்கள் நடந்து கொண்டிருந்த தமிழகத்தில் இப்போது காதல் செய்து திருமணம் புரிந்து கொண்டார்கள் என்பதற்காக பெற்றவர்களே தங்கள் மகள்களை உயிரோடு எரிப்பதும், தூக்கிட்டுக் கொல்வதும் நடக்கிறது. சில சுயநல (அரசியல்) சாதிய சக்திகள் தூண்டிவிட்டு சாதி வெறித் தாக்குதலை நடத்தி தங்களை அரசியல் ரீதியாகப் பலப்படுத்திக் கொள்ளும் காரியத்தில் இறங்கிவிட்டன.
இத்தகைய சூழலில் இது பாஜக வினருக்கு தலித்துகளில் ஒரு சில ஆட்களை பிடிப்பதற்கு உதவுமே தவிர தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவியாக இருக்காது. ஏனென்றால் அவர்களது நோக்கம் இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதாகவே தெரிகிறது. அவர்களது பேச்சு அப்படித் தான் இருக்கிறது. அதற்கு தலித்துகள் இடம் தரக் கூடாது.

சூத்திரதாரி யார்?

பிற சமூகத்து பிற்படுத்தப்பட்ட பிரிவுநாடார், தேவர், ரெட்டியார், யாதவர், நாயுடுசமுதாயத் தலைவர்கள் சேர்ந்து அமித்ஷாவிடம் மனுக்கொடுத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று கூறினார்களாம். இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் நல்லுணர்வோடும் நட்புரிமையோடும் இந்த தாழ்த்தப்பட்ட சகோதரர்களோடு உறவாடினாலே இந்த பெயர் மாற்றக் கோரிக்கையே தேவைப்படாதே.
அதைச் செய்யாமல் இவர்கள் மனுக் கொடுப்பது யார் நடத்தும் நாடகம்? இதன் சூத்திர தாரி யார்? என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். மிஸ்டு கால் கொடுத்தாலே கட்சியில் சேர்ப்பவர்களிடம் மனுக் கொடுத்தால் விட்டுவைப்பார்களா? பார்த்துக் கவனமாக இருந்து கொள்ள வேண்டும் தலித் மக்கள். உலகமயமாக்கல் காலத்தில் வாழும் மக்கள் பொருளாதார நோக்கில் 21ம் நூற் றாண்டிலும் சமூக நோக்கில் மத்திய காலத்துக்கும் முந்தைய நிலையிலுமாக உழல்கிறார்கள். கல்வி கேள்வியில் சிறந்து வேலைகளில் சேர்ந்து அதிக ஊதியம் பெற்று சமூகத்தில் அந்தஸ்து உடையவர்களாக விரும்பிடும் சிலர் பிராமணிய சமூகப் பழக்கவழக்கங்களை மேற்கொள்கிறார்கள். இத்தகைய மேல்நிலையாக்க மனநிலையை – பாஜகபிற்போக்குக் கும்பல் தங்கள் வளர்ச்சிக்குப் பயன்படுத்தத் துடிக்கிறது.

பிராமணிய மயமாக்கலை மேம்பாடு என்று சொல்லி ஒரே கலாச்சாரமாக நினைக்கிறது. அதன் வஞ்சக வலையில் வீழ்ந்துவிடாமல் எச்சரிக்கையாக இருப்பதே அனைத்து சமூக மக்களுக்கும் நல்லது.

ப.முருகன்

Leave A Reply

%d bloggers like this: