இந்தியா சுதந்திரம் அடைந்து இன்றுடன் 69 ஆண்டு நிறைவடைகிறது. சுமார் 300 ஆண்டுகள் நீடித்த ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியையும் அதனைத் தொடர்ந்து வந்த பிரிட்டனின் நேரடி ஆட்சியையும் முடிவுக்குக் கொண்டு வந்தது இந்திய சுதந்திரப் போராட்டம். தேசிய அளவில் சாதி, மதம், இனம், மொழி என்ற உணர்வுகளை மறந்து விடுதலை வேட்கையோடு மக்கள் நடத்திய போராட்டம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை தோற்கடித்தது. சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்; ஆயிரக்கணக்கான தியாகிகள் இதற்காக தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். ஏராளமான தலைவர்கள் பல ஆண்டுகள் சிறையில் வாடியுள்ளனர். செக்கிழுப்பது போன்ற கடும் சித்ரவதையை ஏராளமான பலர் அனுபவித்தனர்.

இப்படி எண்ணற்ற தியாகிகளின் உதிரத்தால் விளைந்ததுதான் இந்திய சுதந்திரம். நாடு சுதந்திரம் அடைந்ததால் எழுத்துரிமையும், பேச்சுரிமையும், சங்கம் சேரும் உரிமையும் கிடைத்தது. சுதந்திரமடைந்த போதிலும் நாட்டில் வறுமையும் பசியும் பட்டினியும் அறவே ஒழிந்துவிட்டதா? பெரும் கொள்ளை நோய்கள் ஒழிக்கப்பட்டாலும் அனைவருக்கும் ஆரோக்கிய வாழ்வை அளிக்கும்ஏற்பாடுகள் உள்ளனவா? அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை, அனை வருக்கும் வீடு போன்ற கோரிக்கைகள் இன்னும் கனவாகவே இருக்கிறதே. காங்கிரஸ் தலைமையில் சுதந்திரப்போராட்டம் நடை பெற்றபோதே, “ இந்தியா பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் அடைந்தால் மட்டும் போதாது. நாட்டிலுள்ள விவசாயிகள், தொழிலாளர்களுக்கு அரசியல் சுதந்திரத்துடன் பொருளாதார சுதந்திரமும் கிடைப்பது தான் உண்மையான சுதந்திரமாக இருக்க முடியும்’’ என்று கம்யூனிஸ்ட்களின் குரலும் ஓங்கி ஒலித்தது. அந்த தீர்க்கதரிசிகள் அன்று சொன்னது சரியானது என்பதை வரலாறு இப்போதும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

சுதந்திர இந்தியாவில் அரைநூற்றாண்டுக்கு மேல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்துவிட்டது. ஏற்கெனவே ஆறாண்டு காலம் ஆட்சி செய்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த இரண்டு கட்சிகளுக்கிடையே பெரிய வித்தியாசம் இல்லை. மீண்டும் இந்தியாவை ஒரு கிழக்கிந்திய கம்பெனிக்கு அல்ல, அது போன்ற ஏராளமான கம்பெனிகளுக்கு தாரை வார்ப்பதில் தான் இவர்களுக்குள் ஒற்றுமை நிலவுகிறது. தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற பெயரில் நாட்டின் செல்வங்கள் கொள்ளை போகின்றன. பன்னாட்டு நிறுவனங்களால் இந்திய மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. இத்தகைய கொள்ளைக்கும் சுரண்டலுக்கும் முடிவு கட்ட உழைக்கும் வர்க்கம் தொடர்ந்து தனது போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அரசியல், பொருளாதாரத் தளத்தில் நடக் கும் போராட்டங்களை அமுக்குவதற்கு பண்பாட்டுத் தளத்தில் பல மாய்மாலங்களையும் பிளவுபடுத்தும் கருத்துக்களையும் திட்டமிட்டு பரப்பி வருகின்றன. ஆளும் பாஜகவும் அதன் பரிவாரங்களும். இந்தப் பேரபாயத்திலிருந்து நாட்டை மீட்கவும் இந்த சுதந்திர நாளில் சபதம் ஏற்கவேண்டும். அதுவே சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

Leave A Reply

%d bloggers like this: