நாடாளுமன்ற மழைக் காலத் கூட்டத் தொடர் முக்கியமான பிரச்சனைகளை விவாதிக் காமலேயே முடிந்துவிட்டது. இதற்கு ஆளுங் கட்சியின் பிடிவாதப் போக்கே காரணம். இந்திய விசாரணை அமைப்புகளால் தேடப்பட்டு வரும் ஒரு குற்றவாளியான லலித் மோடிக்கு உதவி செய்த மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பதவி விலக வேண்டும் என்ற எதிர்க் கட்சிகளின் கோரிக்கையை அரசு பரிசீலித்திருந்தால் அவை சுமூகமாக நடந்திருக்கும். இவர்களுக்கு பக்க வாத்தியம் வாசிப்பதைப் போல இந்தியப் பெருமுதலாளிகளும் மக்கள் பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள் விடுப்பதாக ஒரு கையெழுத்து இயக்கத்தை நடத்தியுள்ளனர்.

“நாடாளுமன்றம் தொடர்ந்து தேக்க நிலையிலேயே இருக்கமுடியாது. அது நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்திவிடும். நாடாளுமன்றத்தில் அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் அரசியல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதை இருவரும் பொறுப்புடன் பயன்படுத்துவதோடு அரசியல் பிரச்சனைகள் எழுந்தால் அதை விவாதித்துத் தீர்வுகாண முன் வர வேண்டும்’’ என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் கடந்த ஆட்சிகளின் போது எதிர்க்கட்சிகள் கோரிக்கைகளை முன்வைத்து நாடாளுமன்றத்திற்குள் போராட்டங்களை நடத்தியுள்ளன. இப்போது கையெழுத்து இயக்கம் நடத்தியிருப்பதோடு போராட்ட வடிவம் பற்றியும் அறிவுரை கூறியுள்ளனர். முதலாளிகளுக்கு திடீரென்று நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது அக்கறை வரக்காரணம் என்ன?

அதற்கும் அந்த வேண்டுகோளில் முதல்பத்தியிலேயே விடை உள்ளது. “மோடி அரசு பதவியேற்றால் சுதந்திரம் அடைந்தது முதல் பேசப்பட்டு வரும் ஏராளமான சட்டங்கள் நிறைவேறும் என்று தாங்கள் எதிர்பார்த்ததாகவும் ஆனால் நாடாளுமன்றத் தேக்கநிலையால் அது நடைபெறவில்லை’’ என்று அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் ஆளும் கட்சியினரின் ஊழல் குறித்து அவர்கள் எதுவும் கூறவில்லை. நாடாளுமன்றம் என்பது பெருமுதலாளிகளின் பொதுக்குழு என்றார் மாமேதை லெனின். தாங்கள் நினைத்தது நடக்கவில்லை என்றவுடன் நாடாளுமன்றம் எப்படி நடக்கவேண்டும் என்று இவர்கள் வழிகாட்டத் தொடங்கிவிட்டனர்.

இவர்களோடு அரசு நடத்தும் ஐஐடி போன்ற நிறுவனங்களின் இயக்குநர்கள் போன்றோரும் சேர்ந்து கொண்டுள்ளனர். இது ஜனநாயகத்தின் மீதான அக்கறை போல் தெரியவில்லை. பாஜக மீதான பாசம்போல் தெரிகிறது. இப்படியும், பிறரையும் பெருமுதலாளிகளை பயன்படுத்தி எதிர்க் கட்சிகளை விமர்சிப்பதற்கு ஏற்கனவே மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஐக்கிய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். காலம் காலமாக மறைமுகமாக நாடாளுமன் றத்தை தங்களுக்கு சாதகமாக இயக்கிய பெரு முதலாளிகள் தற்போது நேரடியாகவேகளத்தில் இறங்கியுள்ளனர் என்பதைத் தான் இந்தக் கையெழுத்து இயக்கம் காட்டுகிறது.

சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, நிலம் கையகப்படுத்துதல் மசோதா, மின்சார மசோதா உள்ளிட்டவை நிறைவேறும் என்று பெருமுதலாளிகள் கனவு கண்டிருந்தனர். அவை நிறைவேறாததால் நாடாளுமன்றம் முடங்கிவிட்டதே என்று கவலைப்படுகிறார்கள். இந்தக் கவலை போலியானது என்பதை சமூகத்தில் அக்கறையுள்ள கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் மனதில் பதியவைத்திருப்பார்கள்.

Leave A Reply

%d bloggers like this: