அவர்கள் வருகிறார்கள்; ஒன்றாய் பத்தாய் நூறாய் ஆயிரமாய் அவர்கள் வருகிறார்கள் என்பது கவிஞர் மு.மேத்தாவின் கவிதை. யார் அவர்கள்? வேலையில்லாப் பட்டாளமாம் இளைஞர்கள் தான். படித்து முடித்துவிட்டு வேலை தேடும் படலத்தில் இறங்கிடும் ஒவ்வொரு இளைஞனும் ஒவ்வொரு முயற்சியின் போதும் இந்த வேலையாவது நமக்குக் கிடைக்குமா என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் தான் தேர்வு எழுதுகிறார்கள். அரசுத் துறையோ, பொதுத் துறையோ, தனியார் நிறுவனமோ எதுவாயினும் வேலைக்காகத் தேர்வு எழுதும் இளைஞர்கள் அதற்குத் தங்களை வருத்திக் கொண்டு தயாராகிறார்கள். படித்தவுடன் வேலை என்கிற படாடோபமான விளம்பரங்களால் கவரப்பட்டு ஏமாறுபவர்களும் உண்டு. வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றும் இடைத்தரகர்களிடம் சிக்கி பணத்தையும் இழந்து வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் உண்டு. இது ஒரு புறமிருக்க, அரசுத் துறைகள் நடத்தும் வேலை வாய்ப்புத் தேர்வுகளில் சிறு எண்ணிக்கையிலான வேலைகளுக்கு பலமடங்கு எண்ணிக்கையில் இளைஞர்கள் பங்கேற்றுத் தேர்வு எழுதுவது நாடு முழுவதும் நடக்கிறது.

மத்திய அரசின் ஊழியர் தேர்வு ஆணையம் (ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்) எனப்படும் எஸ்எஸ்சி அமைப்பு கடந்த எட்டாம் தேதியன்று ஒரு தேர்வு நடத்தியது. மத்திய செயலகப் பணி, மத்திய விழிப்புணர்வு ஆணையம், உளவு அமைப்பு, ரயில்வே அமைச்சகம், வெளி விவகாரங்கள் துறை அமைச்சகம், ராணுவ அமைச்சகம், சிபிஐ மற்றும் பல்வேறு அமைச்சகங்கள், அமைப்புகள் ஆகியவற்றின் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக ஆகஸ்ட் 8ம் தேதியன்று நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான மையங்களில் பட்டதாரி இளைஞர்கள் பங்கேற்ற தேர்வு நடந்தது. இந்தத் தேர்வு எழுதுவதற்காக அண்டை மாநிலங்களான ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் புதுதில்லி வந்திருந்தனர். அன்றைய தினம் பெய்த கடும் மழையையும் பொருட்படுத்தாமல் தேர்வு எழுத வந்த இளைஞர்களை வினாத்தாள் இல்லை என்று கூறி தேர்வு எழுதவிடாமல் திருப்பி அனுப்புவது கிரிமினல் குற்றமல்லவா? வேலையில்லாத இளைஞர்களின் வாழ்க்கை பொறுப்பற்ற அரசு நிர்வாகத்தின் விளையாட்டு மைதானமா? தேர்வு எழுத அனுமதிச்சீட்டு வழங்கிவிட்டு போதிய வினாத்தாள் இல்லை என்று திரும்ப அனுப்புவது அலட்சியத்தின் உச்சகட்டம் இதற்கு யார் பொறுப்பு. அவர்களுக்கு என்ன தண்டனை? இந்தத் தவறுக்கும் குற்றத்துக்கும் தில்லி மாநில ஆம் ஆத்மி அரசைத் தான் மத்திய அரசு கைகாட்டுமோ? பழிபோடுமோ?

தில்லியை யார் ஆள்வது என்பதில் அந்த துணை நிலை ஆளுநர் காட்டும் ஆர்வம் இது போன்ற நிர்வாக நடைமுறைகளிலும் கூட நுழைந்துவிட்டதா?திறமையான நிர்வாகம் நடத்துவதாக தம்பட்டம் அடித்த சிறந்த நிர்வாகி(?) நரேந்திர மோடியின் ராஜ்ய பரிபாலன லட்சணம் இதுதானா? இதுதான் சிறந்த நிர்வாகமா? எஸ்எஸ்சி தேர்வு குளறுபடிகளுக்கு என்ன தீர்வு சொல்லப்போகிறது மோடியின் நிர்வாகம்?யார் தவறு என்றாலும் பாதிக்கப்பட்ட இளை ஞர்களுக்கு நீதி கிடைத்திடவேண்டும்.

Leave A Reply

%d bloggers like this: