பாஜகவினரின் ஊழல் விவகாரங்கள் தொடர்பாக நாடாளுமன்றம் ஸ்தம்பித்து நிற்கிறது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தனது கட்சியினரின் ஊழல் மற்றும் முறைகேடு குறித்து வாய் திறக்க மறுக்கிறார். எங்கேயாவது தேர்தல் நடந்தால் தான் அவர் திருவாய் மலர்ந்தருள்வார் போலிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அவர் அடித்த சவடால்களும், அள்ளி வீசிய வாக்குறுதிகளும் அவரைப் பார்த்து நக்கலாகச் சிரித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், பீகார் சட்ட மன்றத் தேர்தல் களத்திற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி வழக்கம் போல் ‘சிம்ம கர்ஜனை’ புரிந்துள்ளார். பீகாரில்நடந்து வரும் காட்டாட்சிக்கு முடிவு கட்ட பாஜகவுக்கு வாக்களிக்குமாறு அவர் கேட்டுள்ளார்.

கடந்த ஓராண்டு காலமாக மத்தியில் இவர் செய்து வருவது காட்டாட்சியா அல்லது கூட்டாட்சியா என்பதற்கு அவரது அரசின் செயல்பாடுகளே சாட்சியமாக உள்ளன. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறை வேற்ற முடியாததால் நான்கு முறை அவசரச்சட்டம் கொண்டு வந்துள்ளது இவரது அரசு. தொழிலாளர் நலச்சட்டங்கள் துவங்கி பல்வேறு சட்டங்களை திருத்தத் துடிக்கிறது இவரது அரசு. நாடாளுமன்ற ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறது இவரது அரசு. இத்தகைய ஒரு ஆட்சியைத் தான் பீகாரிலும் கொண்டு வர வாய்ப்பளிக்க வேண்டும் என்று மோடி கோரியுள்ளார். அத்துடன் நில்லாமல் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், ஹரியானா போல பீகாரும் வளர்ச்சிப் பாதையில் செல்ல மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் மோடி கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, ஐபிஎல் கிரிக்கெட் மோசடி ஆசாமி லலித் மோடிக்கு சட்ட விரோதமாக உதவிய விவகாரம் நாடு முழுவதும் நாறிக்கிடக்கிறது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ள வியாபம் ஊழல் பல நூறு பேரின் வாழ்வைச் சூறையாடியுள்ளதோடு பலர் மர்மமாக இறந்துள்ளனர். பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் ரேசன் கடை ஊழல் சந்தி சிரிக்கிறது. இதே கட்சி ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைச்சர் பங்கஜ் முண்டே பள்ளிப் பிள்ளைகளுக்கு இலவசப் பொருள் வழங்குவதில் செய்துள்ள சுருட்டல் சந்தி சிரிக்கிறது.

இந்த லட்சணத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை பீகாரில் தங்களால் தான் தர முடியும் என்று மோடி பேசியுள்ள தோடு லாலு பிரசாத் போன்றவர்களின் ஊழலை கிண்டல் செய்துள்ளார். இது ஈயத்தைப் பார்த்து இளித்த பித்தளையின் கதையாகத் தான் இருக்கிறது. பீகார் மாநிலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ளதாக மோடி கூறியுள்ளார்.

இவர்களது ஓராண்டு கால மத்திய ஆட்சியில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளார்கள் என்று கூற முடியுமா? கல்வித்துறையை காவிமயமாக்க முயலும் பாஜகவுக்கு கல்வி வளர்ச்சி குறித்து பேசும் அரு கதை இல்லை. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, அன்றைக்கு தேசப்பிதா காந்தி வெள்ளையனே வெளியேறு என்ற கோஷத்தை ஆகஸ்ட் 9 ம் தேதி எழுப்பினார். அதே போல பீகாரில் காட்டாட்சியை அகற்ற கோஷம் கொடுப்போம் என்று கூறியுள்ளார். காந்தியை படுகொலை செய்த கோட்சேயின் வாரிசுகளையும் வெளியேற்றுவது தான் பீகார் மக்களின் கடமையாக உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: