நரேந்திர மோடி அரசு தனது தாரக மந்திரமாய் உச்சரிப்பது “வளர்ச்சி” என்ற வார்த்தையைத்தான். அவர்களது அகராதிப்படி அது அந்நிய-உள்நாட்டு கார்ப்பரேட் உலகத்தின் வளர்ச்சியைத்தான் குறிக்கும், இந்தியாவின் நடுத்தர, சிறிய தொழிலகங்களின் வளர்ச்சியை அல்ல என்று ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அது எவ்வளவு பெரிய உண்மை என்பதை எடுத்துக்காட்டுவதாக, நாடு முழுவதும் உள்ள ஜவுளி ஆலைகள் எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளன. தேசிய கைத்தறி வாரம் என்ற அறிவிப்பை வெளியிடுவதற்காக என தில்லியிலிருந்து சென்னைக்கு பிரதமர் வந்து சென்ற இரண்டாம் நாளே தென்னிந்திய ஆலைகள் சங்கமும் வட இந்திய ஜவுளி ஆலைகள் சங்கமும் இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பும் நாடுதழுவிய ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளன. சென்னை விழாவில் கைத்தறித் தொழிலுக்காகத் தனது அரசு ஏதேதோ செய்ய இருப்பதாகத் தம்பட்டம் அடித்தார் பிரதமர்.

சிறு தொழில்களுக்கென ஒதுக்கப்பட்ட தயாரிப்புகளில் பெரும் நிறுவனங்களும் புகுந்து கொள்வதற்குத் தோதாக விதிகளைத் தளர்த்திவிட்டு, சந்தை வாய்ப்புகளை எல்லாம் கார்ப்பரேட் நிர்வாகங்களிடம் ஒப்படைத்துவிட்டு பிறகு எப்படி கைத்தறித் தொழிலைப் பாதுகாக்க முடியும் என்ற கேள்விக்கு பிரதமர் தமது உரையில் பதிலேதும் அளிக்கவில்லை. கைத்தறித் தொழில் மட்டுமல்ல, உள்நாட்டு ஜவுளித்துறையே கைவிடப்பட்டிருக்கிறது என்பதைத் தான் தற்போது இந்தச் சங்கங்களின் கூட்டு முடிவு வெளிப்படுத்துகிறது. இந்திய ஜவுளி ஆலைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்குத் துணையாக வழங்கப்பட்ட ஊக்குவிப்பு நிதி வெட்டப்பட்டுவிட்டது. உலகச் சந்தையில் பிற நாடுகளின் நிறுவனங்களோடு போட்டிபோடுவதற்கும் இந்தியத் தயாரிப்புகளின் விற்பனையை உறுதிப்படுத்துவதற்கும் உதவியாக இருந்த ஏற்பாடு அது. அந்த ஊக்குவிப்பு நிதி குறைக்கப்பட்டதால், இந்தியத் துணிகளின் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட, அது ஏற்றுமதியின் வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றுவிட்டது. இந்தியாவிலிருந்து சென்ற ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நூல் 14 கோடி கிலோ.

இவ்வாண்டு அது 9 கோடி கிலோவாகக் குறைந்துவிட்டது. நடுத்தர ஆலைகள் தங்களது தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காக என மானியம் வழங்கப்பட்டுவந்தது. பொதுவாகவே மானியம் என்றாலே எதிர்மறையாகவே அணுகுகிற பாஜக அரசு, கடந்த ஓராண்டாக இந்தத் தொழில்நுட்ப மேம்பாட்டு மானிய நிதியை வழங்காமல் நிறுத்திவைத்திருக்கிறது.

சுமார் 6,500 கோடி ரூபாய் அளவுக்கு இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்த மானியத்தை நம்பி தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கிய பல ஆலைகள் அதைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இல்லாமல் இந்த ஆலைகளால் உள்நாட்டு-பன்னாட்டு பெரும் நிறுவனங்களின் நவீன தொழில்நுட்ப பலத்தை எதிர்கொள்ள முடியாது என்பது வெளிப்படை. ஆக, உள்நாட்டுத் தொழில்களின் வளர்ச்சியை முடக்கி விட்டு இவர்கள் உச்சரிக்கிற வளர்ச்சி மந்திரம் யாருக்காக என்பது மேலும் அம்பலமாகிறது.

Leave A Reply

%d bloggers like this: