பொருளாதார குற்றம் இழைத்த லலித் மோடிக்கு உதவியதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரராஜே, வியாபம் ஊழலுக்கு பொறுப்பேற்று மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவு கான் ஆகியோரை பதவி நீக்கம் செய்யக்கோரி மக்களவையில் எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன. அதற்கு பாஜக அரசு செவி சாய்க்காததால் நாடாளுமன்றம் முடங்கிக் கிடக்கிறது. எதிர்க்கட்சிகளும் தங்கள் போராட்டத்தை தீவிரப் படுத்தியுள்ளன. இதனால் கடந்த 3ம் தேதி, விதி 374 (ஏ)ன்படி காங்கிரஸ் உறுப்பினர்கள் 25 பேரை 5 நாட்களுக்கு தற்காலிக நீக்கம் செய்து சபாநா யகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.

அன்றைய தினம் அவையில் இல்லாத முல்லப்பள்ளி ராமச்சந்திரனையும் நீக்கம் செய்துள்ள வினோதமும் இதில் அடங்கும். நாடாளுமன்ற வரலாற்றில் ஆக.3 ஒரு கருப்புதினம் என அறிவித்து தினசரி காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்துகிறது. பாஜக அரசின் ஜனநாயகமற்ற போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம், சிபிஐ, திரிணாமுல் காங்கிரஸ், ஜனதா பரிவார் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து அவையை புறக்கணித்து வருகின்றன. தமிழக சட்ட மன்றத்தில் ஜனநாயகத்தை பாடாய்படுத்தும் அதிமுக, அவை நடவடிக்கைகளில் பங்கேற்று ‘ஜனநாய’கத்தை பாதுகாக்கிறது! 16 வது நாடாளுமன்றம் அமைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அடுத்து 4 ஆண்டுகளுக்கு அவையை எவ்வாறு நடத்தப் போகிறார்கள் என்பதற்கு முன்னுதாரணமாக இந்த தற்காலிக நீக்க நடவடிக்கை அமைந்துள்ளது. மக்களவையில் மட்டுமே பெரும்பான்மை பெற்றுள்ளபோதே இப்படியென்றால், மாநிலங்களவையிலும் பெரும்பான்மை பெற்றுவிட்டால் நிலைமையை எண்ணிப்பார்க்கவே அச்சமாக உள்ளது. ஐமுகூட்டணி ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுகிறபோது பதவி நீக்கம் கோரி அவையை முடக்கிய பாஜக, தனது சகாக்கள் ஊழல் முறைகேடுகளில் சிக்கியதும் செய்வதறியாது திகைக்கிறது.

பிரச்சனையை சுமூகமாக பேசித்தீர்க்க வேண்டிய நாடாளுமன்ற விவாகரத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு, எதிர்க்கட்சிகளின் அர்த்தமற்ற கோரிக்கை என்று எள்ளல் செய்கிறார். நாடாளுமன்ற முடக்கத்திற்கு முழுக்க முழுக்கக் காரணமாக இருந்து மக்கள் வரிப்பணத்தை அரசே வீணடிக்கிறது. எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) மசோதா- 2014ஐ கடந்த ஆண்டே நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அப்போது கண்டுகொள்ளாத பாஜக அரசு, தற்போது எதிர்க்கட்சிகள் இல்லாத போது, தாங்களே முன்மொழிந்து, விவாத மின்றி நிறைவேற்றி சாதனை செய்ததாக நாடகம் நடத்துகிறது.

நிறைவேற்ற முடியாமல் 11 மசோ தாக்கள் முடங்கிக்கிடக்கின்றன. நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்தை பாதுகாத்தது போலத் தான் மோடி, குஜராத்திலும் பாதுகாத்திருப்பாரோ! என்ற சந்தேகம் எழுகிறது. ‘சைலண்ட் மோட்’ பிரதமர் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை ஏளனம் செய்த பிரதமர் மோடி, பாஜகவைச் சேர்ந்த வர்கள் ஊழல், முறைகேடுகளில் சிக்குகிற போது வெளிநாட்டிற்கு சென்று கடந்த ஆட்சியின் ஊழல்களை பற்றிப் பேசுகிறார் அல்லது தேர்தல் பிரச்சார மனநிலையிலிருந்து மாறி மவுனம் சாதிக்கிறார்.ஜனநாயக முறை மூலமும் சர்வாதிகார ஆட்சி செய்ய முடியும் என்பதற்கு உதாரணமாக பாஜகஅரசு செயல்படுகிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை, மாண்பைப் பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டிய கூடுதல் பொறுப்பு அரசுக்கு உள்ளது. இதனைத் தட்டிக்கழிப்பதாக தற்போதுள்ள நிலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

Leave A Reply