இந்தியாவில் தொழிற்கல்வி வழங்கும் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வந்த நிலையில் தற்போது அது குறையத் தொடங்கியுள்ளது. பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலான ஏஐசிடிஇ அளித்துள்ள புள்ளி விவரப்படி, கடந் தாண்டு அகில இந்திய அளவில் பொறியியல் கல்லூரிகளில் 8.4 லட்சம் இடங்கள் காலியாக கிடந்தன. இந்தாண்டு தமிழகத்தில் கலந்தாய்வு முடிந்த நிலையில் சுமார் 90 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. கல்லூரிகள் மூடப்படுவதற்கும் எண்ணிக்கை குறைவதற்கும் தரமின்மையும் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களுக்கும் மாணவர்கள் எண்ணிக்கைக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய இடைவெளியும் தான் காரணம் என்றும் ஏஐசிடிஇ கூறுகிறது.

இந்தியாவில் தற்போது பொறியியல் கல்லூரிகள் தேவைக்கு அதிகமாக உள்ளன என்பதையும் ஏஐசிடிஇ ஒப்புக்கொண்டுள்ளது. சுயநிதி பொறியியல் கல்லூரிகளை தனியார் தொடங்கலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டபோது,  “ அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்க வேண்டும், அந்த கல்வியை மேம்படுத்த வேண்டும்’’ என்ற நோக்கத்தில் யாரும் தொடங்கவில்லை. மாறாக, காசு பார்க்கும் ஒரு இடமாக இந்தத் துறையை தேர்ந்தெடுத்தனர். மேல்நிலைக்கல்வி படித்து முடித்து வரும் மாணவர்கள் எண்ணிக்கை எவ்வளவு? அவர்களில் எத்தனை பேர் தொழிற்கல்வியை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்? எவ்வளவு பேர் படிப்பைக் கைவிடுகிறார்கள்? என்பது குறித்து ஒரு தெளிவும் இல்லாமல் மளிகைக் கடையை திறப்பது போல் பொறியியல் கல்லூரிகளைத் திறந்தனர்.

பொறியியல் படிப்பை முடித்தால் கல்லூரி வளாகத்திலேயே வேலை நிச்சயம் என்ற வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டன. மேலும் பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது நாட்டில் வேலையை குறைத்துவிட்டு அந்தப் பணிகளை குறைந்த சம்பளத்திற்கு இந்தியா போன்ற நாடுகளுக்குத் தள்ளிவிட்டன. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது இதைப் பேசவேண்டிய நிலை ஏற்பட்டது. புறஅலுவல் சேவைகளை குறைப்போம் (அவுட்சோர்சிங்) என்றும் அவர் கூறியிருந்தார்.

மேலும் பருவமழையை போல் திடீரென்று சில படிப்புகளுக்கு மவுசு கூடுவதும் அதன் மீது பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரு ஈர்ப்பு ஏற்படுவது, பின்னர் அடங்குவதும் மாணவர்கள் மத்தியில் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்த நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தி விட்டது. மேலும் தேர்ச்சி பெறும் மாணவர்களில் 10 விழுக்காட்டினருக்கு மட்டுமே வளாக நேர்காணலில் வேலைகிடைக்கிறது. இதனால் பெரும்பாலான மாணவர்கள் குடும்ப பொருளாதாரச் சூழ்நிலையை சமாளிக்க பொருத்தமில்லா வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலை ஏற்பட்டதற்கு ஏஐசிடிஇ-யும் ஒரு காரணம்.

அந்த அமைப்பு தான் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குகிறது. ஆண்டுதோறும் கலந்தாய்வு முடிந்தவுடன் காலியிடங்கள் பற்றிய செய்திகள்தான் ஊடகங்களில் அதிகமாக வருகின்றன. உயர்கல்வி குறித்தும் பாடங்களை தேர்வு செய்வது குறித்தும் மாநில அரசுகளும் மாணவர்களுக்கு சரியான திசைவழியை காட்டத் தவறிவிட்டன. மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது என்று கூறி கல்லூரிகளை மூடினால் அதில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் நிலை என்னவாகும்? என்பதையும் ஆட்சியாளர்கள் யோசிக்கவேண்டாமா?

Leave a Reply

You must be logged in to post a comment.