தமிழகத்தில் காவல்துறை ஆளும் கட்சியின் ஏவல்துறையாக மாறிவருகிறது. ஜனநாயக ரீதியான போராட்டங்களை கூட தமிழக அரசு அனுமதிக்க மறுத்து வருகிறது. போராட்டங்களைச் சீர்குலைக்கும் விதமாக காவல் துறையை ஏவி வன்முறையை கட்டவிழ்த்து விடுவது தற்போது தொடர் நடவடிக்கையாக மாறியிருக்கிறது. மறுபுறம் சாதியரீதியான படுகொலைகள், ஆணவக் கொலைகள், லாக்கப் மரணங்கள், காவல் துறையின் அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றன. மணல் கடத்தல் கும்பல், கந்து வட்டிக் கும்பல், கூலிப்படைகள் ஆகியவற்றின் அராஜகமும் தொடர்கிறது. சட்ட ஒழுங்கை பாதுகாத்து, மக்களை பாதுகாக்க வேண்டிய காவல் துறை அவற்றில் கோட்டை விட்டு குறட்டை விடுகிறது.

சமூகத்தில் சாதி மத பேதமற்று நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என அமைதியான முறையில் தூத்துக்குடியில் நடைபயணம் சென்ற வாலிபர் மற்றும் மாணவர் சங்க நிர்வாகிகள் மீது காவல் துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். அதே போன்று நாகப்பட்டினத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஏழைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவிகிதம் ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி போராடிய இந்திய மாணவர் சங்கத்தினர் மீது கடுமையாக தடியடி நடத்தி சிறையில் அடைத்தது. ஆம்பூரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஷமீல் அகமது, அடித்து துன்புறுத்தப்பட்டு உயிரிழந்தார்.
இந்த மரணத்தை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தி காவல் துறையே பதற்றத்தை உருவாக்கியது. கோவில்பட்டியில் மாணவர் சங்க தலைவர்களை காவல் நிலையத்தில் வைத்து காட்டுமிராண்டித் தனமாக தாக்கி, மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்டது. கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி வைகோ தலைமையில் போராட்டம் நடைபெற்றபோது, ஏதோ மதக் கலவரத்தை கட்டுப்படுத்துவது போல், தடியடி, கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசி மக்களை விரட்டியடித்தது.

பச்சையப்பன் கல்லூரியில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக்கோரி போராடிய மாணவர்களை கண்மூடித்தனமாகத் தாக்கியது. இப்படி தமிழக காவல்துறை கழகத்தின், கலவரத்துறையாக மாறி கோரத் தாண்டவமாடுகிறது. அதே நேரம் டாஸ்மாக் பார்களில் தள்ளாடுபவர்களுக்கு காவல் துறை கைத்தடியாக மாறி தோள்கொடுத்து துணை நிற்கிறது. இந்த கொடுமைகள் எல்லாவற்றையும் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர் என்பதை ஆளும் அதிமுக அரசு மனதில் கொள்ள வேண்டும். ஆட்சி, அதிகாரம் கையிலிருக்கிறது என்பதற்காக காவல்துறையை ஏவி போராடுபவர்களை அடித்து நொறுக்குவதன் மூலம், பிரச்சனையை மூடிமறைத்து போராட்டத்தை ஒடுக்கி விட முடியாது. மாறாக போராட்டத்தின் வீரியம் பன்மடங்கு பெருகிடவே செய்யும். உண்மையில் ஆளும் அரசு பிரச்சனையை தீர்க்க விரும்பினால், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும். பொய்வழக்குகளை திரும்பபெற்று, நீதி கேட்டுப் போராடியவர்களை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும். தடியடி, லாக்கப் மரணம், அத்துமீறுதல் உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது பாரபட்சமின்றி அரசு உரிய நட வடிக்கை எடுத்து தண்டித்திட வேண்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.